தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6443

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 13

(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே (மறுமையில் நன்மை) குறைந்தவர்கள் ஆவர்.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: யார் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்புகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய செயல்க(ளின் பலன்)களை இங்கேயே நாம் முழுமையாக வழங்கிவிடுவோம். அவர்களுக்கு இங்கு (பலன் வழங்குவதில்) குறை செய்யப்படாது. (ஆனால்,) அவர்களுக்கு மறுமையில் நரகத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்காது. அவர்கள் செய்தவை அங்கு (அடியோடு) அழிந்துவிடும்; அவர்கள் செய்துகொண்டிருந்தவை வீணாகிவிடும். (அல்குர்ஆன்: 11:15,16)

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் இரவு நான் (வீட்டிலிருந்து) வெளியேறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களுடன் யாரும் இருக்கவில்லை. (அந்தச் சமயத்தில்) அவர்களுடன் எவரும் வருவதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்று நான் எண்ணினேன். ஆகவே, நான் நிலவின் (ஒளி படாத) நிழலில் நடக்கலானேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைத் திரும்பிப் பார்த்து “யார் அது?” என்று கேட்டார்கள். நான் “அபூதர். அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “அபூதர்ரே! (இங்கே) வாருங்கள்!” என்றார்கள்.

நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள் “(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர. அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப்பக்கமும் இடப்பக்கமும் தம் முன்பக்கமும் பின்பக்கமும் வாரிவழங்கி அந்தச் செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)” என்று சொன்னார்கள்.

இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது அவர்கள் என்னிடம் “இங்கேயே அமர்ந்திருங்கள்” என்று கூறி, சுற்றிலும் கற்கள் இருந்த ஒரு சமவெளியில் என்னை அமரச் செய்தார்கள். “நான் உங்களிடம் திரும்பி வரும்வரை இங்கேயே அமர்ந்திருங்கள்” என என்னிடம் சொல்லிவிட்டு, (பாறைகள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ பகுதியில் நடந்து சென்றார்கள்.

பிறகு அவர்களை நான் காண முடியவில்லை. நீண்ட நேரம் அங்கேயே இருந்தார்கள். வெகு நேரமாகியும் என்னிடம் அவர்கள் வரவில்லை. பிறகு அவர்கள் முன்னோக்கி வந்துகொண்டே “அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே!” என்று கூறுவதைக் கேட்டேன். அவர்கள் வந்தபோது என்னால் பொறுமையாக இருக்க முடியாமல், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! ‘அல்ஹர்ரா’ பகுதியில் தாங்கள் யாரிடம் பேசினீர்கள்? தங்களுக்கு யாரும் எந்தப் பதிலும் அளிப்பதை நான் கேட்கவில்லையே?” என்று வினவினேன்.

நபி (ஸல்) அவர்கள் “அது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தான். அவர் ‘அல்ஹர்ரா’ பகுதியில் என்முன் தோன்றி, “யார் (ஏக இறைவனாகிய) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத நிலையில் இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார் என உங்கள் சமுதாயத்தாருக்கு நற்செய்தி கூறுங்கள்” என்றார்.

நான் “ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா (சொர்க்கம் புகுவார்)?” என்று கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். நான் “அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் ‘ஆம்’ என்று சொன்னார். நான் “அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?” என்று கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

இதே ஹதீஸ் அபுத்தர்தா (ரலி) அவர்களாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது (அறிவிப்பாளர்தொடர் முறிந்த) ‘முர்ஸல்’ ஆகும். அபூதர் (ரலி) அவர்களது அறிவிப்பே சரியானதாகும்.

அபுத்தர்தா (ரலி) அவர்களது அறிவிப்பில் “லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறி இறந்தால்” என்று காணப்படுகிறது.

அத்தியாயம்: 81

(புகாரி: 6443)

بَابٌ: المُكْثِرُونَ هُمُ المُقِلُّونَ

وَقَوْلُهُ تَعَالَى: {مَنْ كَانَ يُرِيدُ الحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا، وَهُمْ فِيهَا لاَ يُبْخَسُونَ أُولَئِكَ الَّذِينَ لَيْسَ لَهُمْ فِي الآخِرَةِ إِلَّا النَّارُ، وَحَبِطَ مَا صَنَعُوا فِيهَا، وَبَاطِلٌ مَا كَانُوا يَعْمَلُونَ} [هود: 16]

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

خَرَجْتُ لَيْلَةً مِنَ اللَّيَالِي، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي وَحْدَهُ، وَلَيْسَ مَعَهُ إِنْسَانٌ، قَالَ: فَظَنَنْتُ أَنَّهُ يَكْرَهُ أَنْ يَمْشِيَ مَعَهُ أَحَدٌ، قَالَ: فَجَعَلْتُ أَمْشِي فِي ظِلِّ القَمَرِ، فَالْتَفَتَ فَرَآنِي، فَقَالَ: «مَنْ هَذَا» قُلْتُ: أَبُو ذَرٍّ، جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ، قَالَ: «يَا أَبَا ذَرٍّ تَعَالَهْ» قَالَ: فَمَشَيْتُ مَعَهُ سَاعَةً، فَقَالَ: «إِنَّ المُكْثِرِينَ هُمُ المُقِلُّونَ يَوْمَ القِيَامَةِ، إِلَّا مَنْ أَعْطَاهُ اللَّهُ خَيْرًا، فَنَفَحَ فِيهِ يَمِينَهُ وَشِمَالَهُ وَبَيْنَ يَدَيْهِ وَوَرَاءَهُ، وَعَمِلَ فِيهِ خَيْرًا»
قَالَ: فَمَشَيْتُ مَعَهُ سَاعَةً، فَقَالَ لِي: «اجْلِسْ هَا هُنَا» قَالَ: فَأَجْلَسَنِي فِي قَاعٍ حَوْلَهُ حِجَارَةٌ، فَقَالَ لِي: «اجْلِسْ هَا هُنَا حَتَّى أَرْجِعَ إِلَيْكَ» قَالَ: فَانْطَلَقَ فِي الحَرَّةِ حَتَّى لاَ أَرَاهُ، فَلَبِثَ عَنِّي فَأَطَالَ اللُّبْثَ، ثُمَّ إِنِّي سَمِعْتُهُ وَهُوَ مُقْبِلٌ، وَهُوَ يَقُولُ: «وَإِنْ سَرَقَ، وَإِنْ زَنَى» قَالَ: فَلَمَّا جَاءَ لَمْ أَصْبِرْ حَتَّى قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ، مَنْ تُكَلِّمُ فِي جَانِبِ الحَرَّةِ، مَا سَمِعْتُ أَحَدًا يَرْجِعُ إِلَيْكَ شَيْئًا؟ قَالَ: ” ذَلِكَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ، عَرَضَ لِي فِي جَانِبِ الحَرَّةِ، قَالَ: بَشِّرْ أُمَّتَكَ أَنَّهُ مَنْ مَاتَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الجَنَّةَ، قُلْتُ: يَا جِبْرِيلُ، وَإِنْ سَرَقَ، وَإِنْ زَنَى؟ قَالَ: نَعَمْ ” قَالَ: قُلْتُ: وَإِنْ سَرَقَ، وَإِنْ زَنَى؟ قَالَ: «نَعَمْ، وَإِنْ شَرِبَ الخَمْرَ» قَالَ النَّضْرُ: أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، وَالأَعْمَشُ، وَعَبْدُ العَزِيزِ بْنُ رُفَيْعٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَهْبٍ، بِهَذَا، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «حَدِيثُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، مُرْسَلٌ لاَ يَصِحُّ، إِنَّمَا أَرَدْنَا لِلْمَعْرِفَةِ، وَالصَّحِيحُ حَدِيثُ أَبِي ذَرٍّ»، قِيلَ لِأَبِي عَبْدِ اللَّهِ: ” حَدِيثُ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: مُرْسَلٌ أَيْضًا لاَ يَصِحُّ، وَالصَّحِيحُ حَدِيثُ أَبِي ذَرٍّ ” وَقَالَ: ” اضْرِبُوا عَلَى حَدِيثِ أَبِي الدَّرْدَاءِ هَذَا: إِذَا مَاتَ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، عِنْدَ المَوْتِ


Bukhari-Tamil-6443.
Bukhari-TamilMisc-6443.
Bukhari-Shamila-6443.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.