தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6723

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்; பெண்மக்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு, இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால், ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு(ச் சொத்தில்) பாதி கிடைக்கும்.

இறந்தவருக்குப் பிள்ளை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவருடைய) பெற்றோர் ஒவ்வொரு வருக்கும் உண்டு. ஆனால், இறந்தவருக்குப் பிள்ளை இல்லாதிருந்து பெற்றோர் மட்டுமே வாரிசாக இருந்தால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு) உரிய தாகும். அப்போது இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்குச்) சேரும்.

(இவ்வாறு பிரித்துக் கொடுப்பது) அவர் செய்துள்ள மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். உங்களுடைய பெற்றோர் மற்றும் மக்கள் ஆகியோரில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று நீங்கள் அறியமாட்டீர்கள்; (ஆகையால்,) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளை(யான இந்தப் பாகப் பிரிவினைச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.2

மேலும், உங்கள் மனைவியர் விட்டுச் சென்ற(சொத்)தில் அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால் பாகம்தான். (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். தவிர உங்களுக்குப் பிள்ளை இல்லாதி ருப்பின், நீங்கள் விட்டுச் சென்ற(சொத்)தில் நான்கில் ஒரு பாகம் உங்கள் மனைவியருக்குக் கிடைக்கும். உங்களுக்குப் பிள்ளை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற(சொத்)தில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியருக்குக் கிடைக்கும். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாசனத்தையும் கடனையும் நிறை வேற்றிய பின்னரேதான். (தந்தை, பாட்டன் போன்ற மூல வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற கிளை வாரிசுகளோ) யாரும் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ -இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால்-அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால், இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தைச் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். (இதுவும்) அவர்களின் மரண சாசனமும் கடனும் நிறைவேற்றப்பட்ட பின்னர்தான்; ஆயினும் (மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது; (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான் (4:11, 12).3

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அல்அன்சாரி (ரலி) அறிவித்தார்.

நான் (ஒரு முறை) நோய்வாய்ப்பட்டேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் என்னை உடல் நலம் விசாரிக்க நடந்தே வந்தனர். என்னிடம் அவர்கள் வந்தபோது நான் மயக்கமுற்றிருந்தேன். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளு) செய்தார்கள். பிறகு அந்தத் தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண்விழித்)தேன். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் செல்வத்தை நான் என்ன செய்ய வேண்டும்? என் செல்வத்தின் விஷயத்தில் நான் என்ன முடிவு செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். அப்போது அவர்கள் எனக்கு பதிலேதும் கூறவில்லை. முடிவில் வாரிசுரிமை தொடர்பான (மேற்கண்ட வசனம்) இறங்கிற்று.4

Book : 85

(புகாரி: 6723)

85 – كِتَابُ الفَرَائِضِ
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلاَدِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الأُنْثَيَيْنِ، فَإِنْ كُنَّ نِسَاءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ، وَإِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ، وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ، إِنْ كَانَ لَهُ وَلَدٌ، فَإِنْ لَمْ يَكُنْ لَهُ وَلَدٌ وَوَرِثَهُ أَبَوَاهُ فَلِأُمِّهِ الثُّلُثُ، فَإِنْ كَانَ لَهُ إِخْوَةٌ فَلِأُمِّهِ السُّدُسُ، مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنٍ، آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ لاَ تَدْرُونَ أَيُّهُمْ أَقْرَبُ لَكُمْ نَفْعًا فَرِيضَةً مِنَ اللَّهِ، إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا، وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ، إِنْ لَمْ يَكُنْ لَهُنَّ وَلَدٌ، فَإِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ، وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ، إِنْ لَمْ يَكُنْ لَكُمْ وَلَدٌ، فَإِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ، مِنْ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ، وَإِنْ كَانَ رَجُلٌ يُورَثُ كَلاَلَةً أَوِ امْرَأَةٌ، وَلَهُ أَخٌ أَوْ أُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا السُّدُسُ، فَإِنْ كَانُوا أَكْثَرَ مِنْ ذَلِكَ فَهُمْ شُرَكَاءُ فِي الثُّلُثِ، مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَى بِهَا، أَوْ دَيْنٍ غَيْرَ مُضَارٍّ وَصِيَّةً مِنَ اللَّهِ، وَاللَّهُ عَلِيمٌ حَلِيمٌ} [النساء: 12]

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ:

مَرِضْتُ فَعَادَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ، وَهُمَا مَاشِيَانِ، فَأَتَانِي وَقَدْ أُغْمِيَ عَلَيَّ، فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَبَّ عَلَيَّ وَضُوءَهُ فَأَفَقْتُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ أَصْنَعُ فِي مَالِي؟ كَيْفَ أَقْضِي فِي مَالِي؟ فَلَمْ يُجِبْنِي بِشَيْءٍ حَتَّى نَزَلَتْ آيَةُ المَوَارِيثِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.