தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6939

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸஅத் இப்னு உபைதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(உஸ்மான் (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான) அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள் (அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான) ஹிப்பான் இப்னு அதிய்யா அவர்களிடம் சர்ச்சையிட்டுக் கொண்டு, ‘உங்கள் தோழர் அலீ அவர்களுக்கு இரத்தம் சிந்தச் செய்யும் துணிவைக் கொடுத்து எது? என்று நான் உறுதிபட அறிவேன்’ என்று கூறினார்கள். ஹிப்பான் அவர்கள், ‘தந்தையற்றுப் போவாய்! (அலீ அவர்களுக்குத் துணிவைத் தந்த) அந்த விஷயம் எது?’ என்று கேட்டார்கள். அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள், ‘அது ஒரு சம்பவம். அதனை அலீ (ரலி) அவர்களே கூற கேட்டுள்ளேன்’ என்றார்கள். ஹிப்பான் அவர்கள், ‘என்ன சம்பவம் அது?’ என்று கேட்க, (பின்வருமாறு) அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள் கூறினார்கள்:

(அலீ (ரலி) கூறினார்:)

குதிரை வீரர்களான என்னையும் ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்களையும் அபூ மர்ஸத் (ரலி) அவர்களையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் ‘ரவ்ளத்து ஹாஜ்’ எனும் இடம் வரை செல்லுங்கள். -இவ்வாறு ‘ஹாஜ்’ என்றே அபூ அவானா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸலமா கூறுகிறார்கள். (மற்ற அறிவிப்புகளில் ‘ரவ்ளத்து காக்’ என வந்துள்ளது) அங்கு ஒரு பெண் இருப்பாள். அவளிடம் ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ (மக்காவிலிருக்கும்) இணை வைப்பாளர்களுக்கு எழுதிய (நம்முடைய இரகசிய திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்றிருக்கும். அதை (அவளிடமிருந்து கைப்பற்றி) என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறி அனுப்பினார்கள்.

உடனே நாங்கள் எங்கள் குதிரைகளின் மீதேறிச் சென்றோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குறிப்பிட்ட அந்த இடத்தில் தன்னுடைய ஒட்டகம் ஒன்றின் மீது அவள் செல்வதைக் கண்டோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை வெற்றி கொள்வதற்காக) மக்காவாசிகளை நோக்கிப் புறப்படவிருப்பது தொடர்பாக ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ (அக்கடிதத்தில்) மக்காவாசிகளுக்கு எழுதியிருந்தார். நாங்கள் (அவளிடம்), ‘உன்னிடம் உள்ள அந்தக் கடிதம் எங்கே?’ என்று கேட்டோம். அவள், ‘என்னிடம் கடிதம் எதுவுமில்லை’ என்று சொன்னாள். உடனே நாங்கள் அவள் அமர்ந்திருந்த அந்த ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அவளிருந்த சிவிகைக்குள் (கடிதத்தைத்) தேடினோம். (அதில்) எதுவும் கிடைக்கவில்லை. அப்போது என் சகாக்கள் இருவரும் ‘இவளிடம் எந்தக் கடிதத்தையும் நம்மால் காணமுடியவில்லையே’ என்றார்கள். நான், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று திட்டவட்டமாக நாம் அறிந்துள்ளோம்’ என்று கூறிவிட்டு, சத்தியம் செய்வதற்கு தகுதிபெற்ற (இறை)வன் மீது ஆணையிட்டு, ‘ஒன்று நீயாக அதை வெளியே எடுக்க வேண்டும். அல்லது நான் உன்னை (சோதனையிடுவதற்காக உன்னுடைய ஆடையைக்) கழற்ற வேண்டியிருக்கும்’ என்று சொன்னேன். இதைக் கேட்ட அவள் தன்னுடைய இடுப்பை நோக்கி(த் தன்னுடைய கையை)க் கொண்டு சென்றாள். அவள் (இடுப்பில்) ஒரு துணி கட்டியிருந்தாள். (அதற்குள்ளேயிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள். அந்தக் கடிதத்தை நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தோம். (பிறகு அதை நான் நபி (ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டினேன்.)

அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; அவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்’ என்றார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஹாத்திபே! ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டார்கள். ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? (நான் இறைநம்பிக்கையைக் கைவிட்டுவிடவில்லை.) மாறாக, மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் ஏதேனும் செய்து அதற்குப் பரிகாரமாக அவர்கள் (அங்குள்ள பலவீனமான) என் உறவினர்களையும் என் செல்வங்களையும் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன்; தங்களின் (முஹாஜிர்) தோழர்கள் அனைவருக்குமே அவர்களின் குடும்பத்தாரையும் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் அங்கு உள்ளனர்’ என்று கூறினார்.

நபி(ஸல்) அவர்கள், ‘இவர் உண்மை பேசினார். இவர் குறித்து நல்லதையே சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் மீண்டும் ‘இறைத்தூதர் அவர்களே! இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்’ என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இவர் பத்ருப் போரில் கலந்துகொண்டவர் இல்லையா? உங்களுக்கு என்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களிடம் ‘நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள். சொர்க்கத்தை உங்களுக்கு நான் உறுதியாக்கிவிட்டேன்’ என்று கூறிவிட்டிருக்கலாம்’ என்றார்கள்.

இதைக்கேட்ட உமர் (ரலி) அவர்களின் கண்கள் கண்ணீரில் மூழ்கின. அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்றார்கள்.26

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: (அந்த இடத்தின் பெயர்) ‘ரவ்ளத்து காக்’ என்பதே சரியான தகவலாகும்.

ஆயினும், ‘ரவ்ளத்து ஹாஜ்’ என்றே அபூ அவானா கூறுகிறார். இது திரிபாகும். இது ஓர் இடத்தின் பெயராகும். ஹுஷைம் இப்னு பஷீர் (ரஹ்) அவர்கள் ‘காக்’ என்றே குறிப்பிடுகிறார்கள்.

Book :88

(புகாரி: 6939)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ فُلَانٍ، قَالَ:

تَنَازَعَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، وَحِبَّانُ بْنُ عَطِيَّةَ، فَقَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ، لِحِبَّانَ: لَقَدْ عَلِمْتُ مَا الَّذِي جَرَّأَ صَاحِبَكَ عَلَى الدِّمَاءِ، يَعْنِي عَلِيًّا، قَالَ: مَا هُوَ لَا أَبَا لَكَ؟ قَالَ: شَيْءٌ سَمِعْتُهُ يَقُولُهُ، قَالَ: مَا هُوَ؟ قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالزُّبَيْرَ وَأَبَا مَرْثَدٍ، وَكُلُّنَا فَارِسٌ، قَالَ: ” انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ حَاجٍ – قَالَ أَبُو سَلَمَةَ: هَكَذَا قَالَ أَبُو عَوَانَةَ: حَاجٍ – فَإِنَّ فِيهَا امْرَأَةً مَعَهَا صَحِيفَةٌ مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ إِلَى المُشْرِكِينَ، فَأْتُونِي بِهَا ” فَانْطَلَقْنَا عَلَى أَفْرَاسِنَا حَتَّى أَدْرَكْنَاهَا حَيْثُ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَسِيرُ عَلَى بَعِيرٍ لَهَا، وَقَدْ كَانَ كَتَبَ إِلَى أَهْلِ مَكَّةَ بِمَسِيرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ، فَقُلْنَا: أَيْنَ الكِتَابُ الَّذِي مَعَكِ؟ قَالَتْ: مَا مَعِي كِتَابٌ، فَأَنَخْنَا بِهَا بَعِيرَهَا، فَابْتَغَيْنَا فِي رَحْلِهَا فَمَا وَجَدْنَا [ص:19] شَيْئًا، فَقَالَ صَاحِبَايَ: مَا نَرَى مَعَهَا كِتَابًا، قَالَ: فَقُلْتُ: لَقَدْ عَلِمْنَا مَا كَذَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ حَلَفَ عَلِيٌّ: وَالَّذِي يُحْلَفُ بِهِ، لَتُخْرِجِنَّ الكِتَابَ أَوْ لَأُجَرِّدَنَّكِ، فَأَهْوَتِ الى حُجْزَتِهَا، وَهِيَ مُحْتَجِزَةٌ بِكِسَاءٍ، فَأَخْرَجَتِ الصَّحِيفَةَ، فَأَتَوْا بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالمُؤْمِنِينَ، دَعْنِي فَأَضْرِبَ عُنُقَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا حَاطِبُ، مَا حَمَلكَ عَلَى مَا صَنَعْتَ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا لِي أَنْ لَا أَكُونَ مُؤْمِنًا بِاللَّهِ وَرَسُولِهِ؟ وَلَكِنِّي أَرَدْتُ أَنْ يَكُونَ لِي عِنْدَ القَوْمِ يَدٌ يُدْفَعُ بِهَا عَنْ أَهْلِي وَمَالِي، وَلَيْسَ مِنْ أَصْحَابِكَ أَحَدٌ إِلَّا لَهُ هُنَالِكَ مِنْ قَوْمِهِ مَنْ يَدْفَعُ اللَّهُ بِهِ عَنْ أَهْلِهِ وَمَالِهِ، قَالَ: «صَدَقَ، لَا تَقُولُوا لَهُ إِلَّا خَيْرًا» قَالَ: فَعَادَ عُمَرُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالمُؤْمِنِينَ، دَعْنِي فَلِأَضْرِبْ عُنُقَهُ، قَالَ: ” أَوَلَيْسَ مِنْ أَهْلِ بَدْرٍ، وَمَا يُدْرِيكَ، لَعَلَّ اللَّهَ اطَّلَعَ عَلَيْهِمْ فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتُمْ، فَقَدْ أَوْجَبْتُ لَكُمُ الجَنَّةَ ” فَاغْرَوْرَقَتْ عَيْنَاهُ، فَقَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” خَاخٍ أَصَحُّ، وَلَكِنْ كَذَا قَالَ أَبُو عَوَانَةَ: حَاجٍ، وَحَاجٍ تَصْحِيفٌ، وَهُوَ مَوْضِعٌ، وَهُشَيْمٌ يَقُولُ: خَاخٍ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.