தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7170

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 ஒருவர் நீதிபதி பதவி வகிக்கும் போது, அல்லது அதற்கு முன்பு தமக்குக் கிடைத்த சாட்சியத்தை வைத்து (வாதி, பிரதிவாதி இருவரில்) ஒருவருக்குச் சாதகமாகத் தாமே தீர்ப்பளிக்கலாமா? (அல்லது மற்றொரு நீதிபதியிடம் அந்த சாட்சியத்தை அளிக்க வேண்டுமா?) (கூஃபா நகர) நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் (தமக்காக) சாட்சியம் அளிக்குமாறு வேண்டினார். அதற்கு அன்னார் நீ ஆட்சியரிடம் (வழக்கைக் கொண்டு) செல். நான் (அங்கு வந்து) உனக்காக சாட்சியம் அளிக்கிறேன் என்றார்கள். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உமர் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம், ஒருவன் விபசாரம் புரிவதையோ திருடுவதையோ நீங்கள் ஆட்சியராயிருக்கும் நிலையில் கண்டால் என்ன செய்வீர்கள்? (உங்கள் சாட்சியத்தை வைத்தே தண்டனை வழங்கிடு வீர்களா?) என்று கேட்டார்கள். அதற்கு, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், இல்லை; என்னுடன் மற்றொருவரும் சாட்சியமளிக்காதவரை தண்டனை வழங்க மாட்டேன் என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், அப்படியானால் (ஆட்சி யாளராக இருக்கும்) உங்கள் சாட்சியமும் முஸ்லிம்களில் ஒருவரின் சாட்சியமாக மதிக்கப்படும் (அப்படித்தானே!)என்று கேட்க அவர்கள், உண்மைதான் என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள் உமர் இறைவேதத்தில் (இல்லாத ஒன்றைச்) சேர்த்துவிட்டார் என்று மக்கள் பேசுவார்கள் எனும் அச்சம் இல்லாவிட்டால் ரஜ்ம்’ (கல்லெறி தண்டனை) தொடர்பான வசனத்தை நான் என் கையாலேயே (குர்ஆன் பிரதியில்) எழுதியிருப்பேன் என்று கூறினார்கள்.32 மாஇஸ் பின் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) தாம் விபசாரம் புரிந்ததாக நான்கு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மாஇஸ் திருமணமானவராக இருந்ததால்) அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்போது தம்மிடமிருந்தவர்கள் எவரையும் (மாஇஸ் விபசாரம் செய்ததற்கு) சாட்சியாக ஆக்கியதாகச் சொல்லப்படவில்லை. ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள், ஒருவன் தான் விபசாரம் புரிந்ததாக நீதிபதியிடம் ஒரேயொரு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலும் அவனுக்குக் கல்லெறி தண்டனை வழங்கப் படும் என்று கூறுகிறார்கள். ஆனால், ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள், நான்கு முறை வாக்குமூலம் அளித்தால்தான் கல்லெறி தண்டனை வழங்கப்படும் என்கிறார்கள்.

 அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.

ஹுனைன் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(போரில் எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை’ என்று கூறினார்கள். உடனே நான் (என்னால்) கொல்லப்பட்டவரை நானே கொன்றேன் என்பதற்கு ஆதாரம் தேடுவதற்காக எழுந்தேன். எனக்காக சாட்சியம் சொல்பவர் எவரையும் நான் காணவில்லை. எனவே, நான் உட்கார்ந்து கொண்டேன். பிறகு ஏதோ தோன்ற, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் (போரில் எதிரி ஒருவனைக்) கொன்றதைச் சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், ‘(இவரால் கொல்லப்பட்டதாக) இவர் சொல்கிற அந்த மனிதரின் ஆயுதம் என்னிடம் இருக்கின்றது. நானே இதை எடுத்துக்கொள்ள அவரிடம் இருந்து (எனக்கு) இசைவு பெற்றுத் தாருங்கள்’ என்றார்.

அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘அப்படி முடியாது. (கொல்லப்பட்டவரின்) அந்த உடைமைகளை, அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் போரிடுகின்ற, அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கத்தைவிட்டுவிட்டு, குறைஷியரின் (பலவீனமான) ஒரு குஞ்சுப் பறவைக்கு அதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொடுக்கமாட்டார்கள்’ என்றார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து எனக்கு அந்தப் பொருளைக் கொடுத்தார்கள். நான் அதை விற்கு பேரீச்சந் தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதுதான் நான் இஸ்லாத்திற்கு வந்த பின் தேடிக்கொண்ட முதல் சொத்தாக அமைந்தது.33

மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.34

ஹிஜாஸ் அறிஞர்கள் கூறுகிறார்கள்: நீதிபதி தாம் அறிந்ததை (மட்டும்) வைத்துத் தீர்ப்பளிக்கலாகாது. அவர் தம் பதவிக்காலத்தில் அதற்கு சாட்சியாக இருந்தாலும் சரி! அதற்கு முன்பே சாட்சியாக இருந்தாலும் சரி! (அவரின் மீது களங்கம் கற்பிக்க இடமுண்டு என்பதே இதற்குக் காரணம்.) நீதிமன்றத்தில் பிரதிவாதி ஆஜராகி மற்றவரின் உரிமை குறித்து நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தாலும், இரண்டு சாட்சிகளை அழைத்து அவரின் வாக்குமூலத்தின்போது ஆஜர்படுத்தாத வரை அவருக்கெதிராகத் தீர்ப்பளிக்கலாகாது என அந்த அறிஞர்களில் சிலர் கூறியுள்ளனர்.

இராக்வாசிகளில் சிலர் கூறுகின்றனர்: நீதிமன்றத்தில் நீதிபதி கேட்ட, அல்லது பார்த்த ஒன்றை (ஆதாரமாக) வைத்து அவர் தீர்ப்பளிக்கலாம். நீதிமன்றமல்லா மற்ற இடங்களில் (தாம் கேட்ட அல்லது பார்த்த) ஒன்றை வைத்து அவர் தீர்ப்பளிக்கலாகாது; பிரதிவாதி வாக்குமூலம் அளிக்கும்போது இரண்டு சாட்சிகளை ஆஜர்படுத்தினால் தவிர.

இராக்வாசிகளில் இன்னும் சிலர், ‘அல்ல! (வாதியின் வாக்குமூலத்தை வைத்தே) நீதிபதி தீர்ப்பளிக்கலாம். ஏனெனில், அவர் (நீதிபதி) நம்புதற்குரிய ஒருவராவார்; சாட்சியத்தால் நோக்கமே உண்மையை அறிவதுதான். நீதிபதி தீர்ப்பளிப்பார்; மற்ற பிரசினைகளில் (அவ்வாறு தாம் அறிந்ததை வைத்து, சாட்சிகள் இல்லாமல்) தீர்ப்பளிக்க மாட்டார்’ என்று கூறுகின்றனர்.

காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வேறு யாரும் அறியாத, தாம் (மட்டும்) அறிந்திருக்கும் ஒன்றை வைத்துத் தீர்ப்பளிப்பது நீதிபதிக்கு முறையாகாது. பிறரின் சாட்சியத்தைவிட அவர் அறிந்திருப்பது பலமானதாக இருக்கலாம். ஆனாலும், இதன் மூலம் முஸ்லிம்களிடையே தம்மை அவர் தவறான எண்ணத்திற்கு உட்படுத்திக் கொள்வதும், முஸ்லிம்களைச் சந்தேகத்தில் ஆட்படுத்துவதும் நேரலாம். நபி(ஸல்) அவர்கள், பிறர் சந்தேகப்படும் வகையில் நடப்பதை வெறுத்துள்ளார்கள். அதனால்தான், (தம்மைப் பள்ளிவாசலில் சந்தித்துவிட்டுச் சென்ற தம் துணைவியாரை இருவர் பார்த்தபோது) ‘இவர் ஸஃபிய்யா தாம் (வேறு யாருமல்லர்)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.35

Book : 93

(புகாரி: 7170)

بَابُ الشَّهَادَةِ تَكُونُ عِنْدَ الحَاكِمِ، فِي وِلاَيَتِهِ القَضَاءَ أَوْ قَبْلَ ذَلِكَ، لِلْخَصْمِ

وَقَالَ شُرَيْحٌ القَاضِي، وَسَأَلَهُ إِنْسَانٌ الشَّهَادَةَ، فَقَالَ: «ائْتِ الأَمِيرَ حَتَّى أَشْهَدَ لَكَ» وَقَالَ عِكْرِمَةُ: قَالَ عُمَرُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ: لَوْ رَأَيْتَ رَجُلًا عَلَى حَدٍّ، زِنًا أَوْ سَرِقَةٍ، وَأَنْتَ أَمِيرٌ؟ فَقَالَ: شَهَادَتُكَ شَهَادَةُ رَجُلٍ مِنَ المُسْلِمِينَ، قَالَ: صَدَقْتَ قَالَ عُمَرُ: «لَوْلاَ أَنْ يَقُولَ النَّاسُ زَادَ عُمَرُ فِي كِتَابِ اللَّهِ، لَكَتَبْتُ آيَةَ الرَّجْمِ بِيَدِي» وَأَقَرَّ مَاعِزٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالزِّنَا أَرْبَعًا، فَأَمَرَ بِرَجْمِهِ، وَلَمْ يُذْكَرْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشْهَدَ مَنْ حَضَرَهُ وَقَالَ حَمَّادٌ: «إِذَا أَقَرَّ مَرَّةً عِنْدَ الحَاكِمِ رُجِمَ» وَقَالَ الحَكَمُ «أَرْبَعًا»

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى، عَنْ عُمَرَ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي مُحَمَّدٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ، أَنَّ أَبَا قَتَادَةَ، قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمَ حُنَيْنٍ: «مَنْ لَهُ بَيِّنَةٌ عَلَى قَتِيلٍ قَتَلَهُ فَلَهُ سَلَبُهُ»، فَقُمْتُ لِأَلْتَمِسَ بَيِّنَةً عَلَى قَتِيلِي، فَلَمْ أَرَ أَحَدًا يَشْهَدُ لِي، فَجَلَسْتُ، ثُمَّ بَدَا لِي، فَذَكَرْتُ أَمْرَهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَجُلٌ مِنْ جُلَسَائِهِ: سِلاَحُ هَذَا القَتِيلِ الَّذِي يَذْكُرُ عِنْدِي، قَالَ: فَأَرْضِهِ مِنْهُ، فَقَالَ أَبُو بَكْرٍ: كَلَّا، لاَ يُعْطِيهِ أُصَيْبِغَ مِنْ قُرَيْشٍ وَيَدَعَ أَسَدًا مِنْ أُسْدِ اللَّهِ، يُقَاتِلُ عَنِ اللَّهِ وَرَسُولِهِ، قَالَ: فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَدَّاهُ إِلَيَّ، فَاشْتَرَيْتُ مِنْهُ خِرَافًا، فَكَانَ أَوَّلَ مَالٍ تَأَثَّلْتُهُ، قَالَ لِي عَبْدُ اللَّهِ عَنِ اللَّيْثِ: فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَدَّاهُ إِلَيَّ، ” وَقَالَ أَهْلُ الحِجَازِ: الحَاكِمُ لاَ يَقْضِي بِعِلْمِهِ شَهِدَ بِذَلِكَ فِي وِلاَيَتِهِ أَوْ قَبْلَهَا، وَلَوْ أَقَرَّ خَصْمٌ عِنْدَهُ لِآخَرَ بِحَقٍّ فِي مَجْلِسِ القَضَاءِ، فَإِنَّهُ لاَ يَقْضِي عَلَيْهِ فِي قَوْلِ بَعْضِهِمْ حَتَّى يَدْعُوَ بِشَاهِدَيْنِ فَيُحْضِرَهُمَا إِقْرَارَهُ «،» وَقَالَ بَعْضُ أَهْلِ العِرَاقِ: مَا سَمِعَ أَوْ رَآهُ فِي مَجْلِسِ القَضَاءِ قَضَى بِهِ، وَمَا كَانَ فِي غَيْرِهِ لَمْ يَقْضِ إِلَّا بِشَاهِدَيْنِ «،» وَقَالَ آخَرُونَ مِنْهُمْ: بَلْ يَقْضِي بِهِ، لِأَنَّهُ مُؤْتَمَنٌ، وَإِنَّمَا يُرَادُ مِنَ الشَّهَادَةِ مَعْرِفَةُ الحَقِّ، فَعِلْمُهُ أَكْثَرُ مِنَ الشَّهَادَةِ، وَقَالَ بَعْضُهُمْ: يَقْضِي بِعِلْمِهِ فِي الأَمْوَالِ، وَلاَ يَقْضِي فِي غَيْرِهَا “، وَقَالَ القَاسِمُ: «لاَ يَنْبَغِي لِلْحَاكِمِ أَنْ يُمْضِيَ قَضَاءً بِعِلْمِهِ دُونَ عِلْمِ غَيْرِهِ، مَعَ أَنَّ عِلْمَهُ أَكْثَرُ مِنْ شَهَادَةِ غَيْرِهِ، وَلَكِنَّ فِيهِ تَعَرُّضًا لِتُهَمَةِ نَفْسِهِ عِنْدَ المُسْلِمِينَ، وَإِيقَاعًا لَهُمْ فِي الظُّنُونِ» وَقَدْ كَرِهَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظَّنَّ فَقَالَ: «إِنَّمَا هَذِهِ صَفِيَّةُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.