தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7304

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.

அஜ்லான குலத்தைச் சேர்ந்த உவைமிர்(ரலி) அவர்கள், ஆஸிம் இப்னு அதீ(ரலி) அவர்களிடம் வந்து, ‘ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் அவனை இவன் கொன்று விடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால் பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்று விடுவீர்களா? எனக்காக (இதைப் பற்றி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேளுங்கள், ஆஸிமே!’ என்றார். அவ்வாறே ஆஸிம்(ரலி) அவர்களும் நபியவர்களிடம் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அசிங்கமாகக் கருதினார்கள். எனவே, ஆஸிம்(ரலி) அவர்கள் திரும்பிவந்து உவைமிர்(ரலி) அவர்களிடம் ‘நபி(ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்கள். அதற்கு உவைமிர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபி(ஸல்) அவர்களிடம் (இதைப் பற்றி நேரடியாகக் கேட்பதற்காகச்) செல்வேன்’ என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். ஆஸிம்(ரலி) வந்துவிட்டுச் சென்றபின் உயர்ந்தோன் அல்லாஹ் குர்ஆன் வசனத்தை அருளியிருந்தான். எனவே, (தம்மிடம் வந்த) உவைமிர்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், ‘உங்களின் விஷயத்தில் அல்லாஹ் குர்ஆன் (வசனத்தை) அருளிவிட்டான்’ என்று கூறி, தம்பதியர் இருவரையும் அழைத்தார்கள். அவர்கள் இருவரும் வந்து பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார்கள். பிறகு உவைமிர்(ரலி) அவர்கள், ‘(இதற்குப் பிறகும்) அவளை நான் எண்ணுடனேயே வைத்துக் கொண்டிருந்தால் நான் பொய் சொன்னதாக ஆகிவிடும், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டு (விவாக விலக்குச் செய்து) மனைவியிடமிருந்து (தாமாகவே) பிரிந்து கொண்டார்கள். அவ்வாறு அவளைப் பிரிந்துவிடுமாறு அவருக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. (அவராகவே அந்த முடிவுக்கு வந்தார்.) பிறகு (இந்தத் தம்பதியரின் சம்பவமே) சாப அழைப்புப் பிரமாணம் செய்வோருக்கான வழிமுறையாகத் தொடர்ந்தது.

மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘இவளைக் கண்காணித்துவாருங்கள்; இவள் அரணையைப் போன்று குட்டையான சிவப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தால் கணவன் சொன்னது பொய் என்றே நான் கருதுவேன். இவள் கறுப்பு நிறத்தில் விசாலமான கண்கள் கொண்ட பெரிய பிட்டங்களை உடைய குழந்தையைப் பெற்றெடுத்தால் அவளின் மீது உவைமிர் சொன்னது உண்மை என்றே நான் கருதுவேன்’ என்றார்கள். பிறகு விரும்பத்தகாத அந்தத் தோற்றத்திலேயே அவள் குழந்தை பெற்றெடுத்தாள்.32

Book :96

(புகாரி: 7304)

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ

جَاءَ عُوَيْمِرٌ العَجْلاَنِيُّ، إِلَى عَاصِمِ بْنِ عَدِيٍّ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا فَيَقْتُلُهُ، أَتَقْتُلُونَهُ بِهِ، سَلْ لِي يَا عَاصِمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ، فَكَرِهَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَسَائِلَ، وَعَابَهَا، فَرَجَعَ عَاصِمٌ، فَأَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَرِهَ المَسَائِلَ، فَقَالَ عُوَيْمِرٌ: وَاللَّهِ لَآتِيَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ وَقَدْ أَنْزَلَ اللَّهُ تَعَالَى القُرْآنَ خَلْفَ عَاصِمٍ، فَقَالَ لَهُ: «قَدْ أَنْزَلَ اللَّهُ فِيكُمْ قُرْآنًا» فَدَعَا بِهِمَا، فَتَقَدَّمَا، فَتَلاَعَنَا، ثُمَّ قَالَ عُوَيْمِرٌ: كَذَبْتُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ، إِنْ أَمْسَكْتُهَا، فَفَارَقَهَا وَلَمْ يَأْمُرْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفِرَاقِهَا، فَجَرَتِ السُّنَّةُ فِي المُتَلاَعِنَيْنِ، وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْظُرُوهَا، فَإِنْ جَاءَتْ بِهِ أَحْمَرَ قَصِيرًا مِثْلَ وَحَرَةٍ، فَلاَ أُرَاهُ إِلَّا قَدْ كَذَبَ، وَإِنْ جَاءَتْ بِهِ أَسْحَمَ أَعْيَنَ ذَا أَلْيَتَيْنِ، فَلاَ أَحْسِبُ إِلَّا قَدْ صَدَقَ عَلَيْهَا» فَجَاءَتْ بِهِ عَلَى الأَمْرِ المَكْرُوهِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.