தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7439

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டோம். அதற்கு அவர்கள், “(மேகமூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியத்துக்கொண்டு) சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை” என்று பதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்கள் இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) விளக்கினார்கள்:

(மறுமை நாளில்) அழைப்பாளர் ஒருவர், “ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வழிபட்டுக்கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்று அழைப்பு விடுப்பார். அப்போது சிலுவை வழிபாட்டாளர்கள் தங்கள் சிலுவையுடனும், சிலை வழிபாட்டாளர்கள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டாளர்கள் தத்தம் கடவுள்களுடனும் செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வழிபட்டுக்(கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர்.

பின்னர் நரகம் கொண்டு வரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்களிடம், “நீங்கள் எதை வழிபட்டுக்கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை வழிபட்டுக்கொண்டிருந்தோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை” என்று சொல்லப்படும். பிறகு அவர்களிடம், “இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக!” என்பார்கள். அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு), “குடியுங்கள்” என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும்போது) அவர்கள் நரகத்தில் விழுந்துவிடுவார்கள்.

பின்னர் கிறித்தவர்களிடம், “நீங்கள் எதை வழிபட்டுக்கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) நாங்கள் வழிபட்டுக்கொண்டிருந்தோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், “நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள்; அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை” என்று கூறப்பட்டபின் “நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்படும்.

அதற்கு அவர்கள், “நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் (கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டி) “குடியுங்கள்!” என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்துவிடுவார்கள்.

இறுதியில் அல்லாஹ்வை வழிபட் டுக்(கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் “மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்றுவிட்டார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கப்படும்.

அதற்கு அவர்கள், “(உலகத்தில்) நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிராமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள் செல்வோமா?) இங்கு ஓர் அழைப்பாளர், “ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலக வாழ்வில்) தாம் வழிபட்டுக்கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்துகொள்ளட்டும் என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வழிபட்டுக்கொண்டிருந்த) எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று கூறுவார்கள்.

அப்போது சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணிவைத்திருந்த தோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து, “நானே உங்கள் இறைவன்” என்று கூறுவான். அதற்கு இறைநம்பிக்கையாளர்கள், “நீயே எங்கள் இறைவன்” என்று சொல்வார்கள்.

அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள். அப்போது, “அவனை இனங்கண்டு கொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?” என்று (ஒருவர்) கேட்பார். அதற்கு இறைநம்பிக்கையாளர்கள், ‘(இறைவனின்) கால் (பாதம்)தான்” என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தனது காலை வெளிப்படுத்துவான்.

இறைநம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்குச் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும் பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம்பணிந்து (தொழுது)கொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போது எஞ்சியிருப்பார்கள்; அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால், அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர்களால் சிரவணக்கம் செய்ய முடியாது).

பிறகு பாலம் கொண்டுவரப்பட்டு, நரகத்தின் மேலே வைக்கப்படும். (இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் சொன்னபோது,) நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! அது என்ன பாலம்?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “அது (கால்கள்) வழுக்குமிடம்; சறுக்குமிடம்; அதன்மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முட்களும் இருக்கும். அந்த முட்கள் வளைந்திருக்கும். ‘நஜ்த்’ பகுதியில் முளைக்கும் அவை ‘கருவேலமர முட்கள்’ எனப்படும்” என்று சொன்னார்கள்.

(தொடர்ந்து கூறினார்கள்:) இறைநம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை கண் சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்துவிடுவார். எந்தக் காயமுமின்றி தப்பிவிடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச்செல்லப்படுவார்.

பின்னர், தாம் தப்பித்துவிட்டோம் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த (இறை)வனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள். அந்த அளவிற்கு (இம்மையில்) உங்களுக்குத் தெளிவாகி விட்ட உரிமைக்காகக்கூட நீங்கள் என்னிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கமாட்டீர்கள்.

அப்போது அவர்கள், “எங்கள் இறைவா! (இவர்கள்) எங்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள்; எங்களுடன் நோன்பு நோற்றார்கள்; எங்களுடன் (மற்ற) நல்லறங்கள் புரிந்துகொண்டிருந்தார்கள் (எனவே இவர்களை நீ காப்பாற்றுவாயாக)” என்று வேண்டுவார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், “நீங்கள் சென்று, எவருடைய உள்ளத்தில் ஒரு பொற்காசு (தீனார்) அளவுக்கு இறைநம்பிக்கை இருக்கக் காண்கின்றீர்களோ அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்” என்று கூறுவான்.

அவ்வாறே அவர்களும் (நரகவாசிகளிடம்) செல்வார்கள். அவர்களின் முகங்களைக் கரிக்கக் கூடாதென நரகத்திற்கு அல்லாஹ் தடை விதித்துவிடுவான். அப்போது (அந்த நரகவாசிகளில்) சிலர் தமது பாதம் நரகத்திற்குள் மறையும் அளவிற்கு, பாதி கால்கள் மறையும் அளவிற்கு நரகினுள் கிடப்பார்கள்.

உடனே அவர்கள் தமக்கு அறிமுகமானவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள். பிறகு மீண்டும் (இறைவனிடம்) செல்வார்கள். “எவரது உள்ளத்தில் பாதி பொற்காசு அளவுக்கு இறைநம்பிக்கை உள்ளதெனக் காண்கிறீர்களோ அவர்களையும் வெளியேற்றுங்கள்” என்பான். அவ்வாறே அவர்கள் தமக்குத் தெரிந்தவர்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் (இறைவனிடம்) வருவார்கள். அப்போது அவன், “எவரது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை இருக்கக் கண்டீர்களோ அவர்களையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்” என்று சொல்வான். அவ்வாறே அவர்கள் (வந்து) தமக்கு அறிமுகமானவர்களை (அதிலிருந்து) வெளியேற்றுவார்கள்.

இதன் அறிவிப்பாளரான அபூசயீத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இதை) நீங்கள் நம்பாவிட்டால், “நிச்சயமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவுகூட அநீதி இழைக்கமாட் டான். அணுவளவு நன்மை செய்திருந் தாலும் அதை இரட்டிப்பாக்குவான்” எனும் (4:40ஆவது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.
இவ்வாறு இறைத்தூதர்கள், வானவர்கள், இறை நம்பிக்கையாளர்கள் ஆகியோர் (தத்தமது தகுதிக்கேற்ப) பரிந்துரை செய்வார்கள். அப்போது சர்வ அதிகாரம் படைத்த (இறை)வன் “(இனி) என் பரிந்துரை (மட்டுமே) எஞ்சியிருக்கிறது” என்று கூறிவிட்டு, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு மக்களை அள்ளியெடுத்து அவர்களை வெளியேற்றுவான். அவர்கள் கரிந்துபோயிருப்பார்கள். ஆகவே, சொர்க்க வாயிலிலுள்ள ஒரு நதியில் அவர்கள் போடப்படுவார்கள் அதற்கு ‘ஜீவ நீர்’ (‘மாஉல் ஹயாத்’) என்று பெயர்.

உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று நதியின் இருமருங்கிலும் முளைத்து (நிறம் மாறி)விடுவார்கள். பாறையின் ஓரத்திலும் மரத்தின் ஓரத்திலும் இந்தப் பயிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் வெயில் பக்கமாக இருப்பது பச்சையாகவும், நிழல் பக்கமாக இருப்பது வெள்ளையாகவும் இருக்கும்.

ஆக, அவர்கள் (அந்த நதியிலிருந்து) வெளியேறும்போது முத்தைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள். அவர்களது கழுத்தில் (நரகத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள் என்பதற்கான) முத்திரை பதிக்கப்படும். பிறகு அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைவார்கள். அப்போது சொர்க்கவாசிகள் (இவர்களைப் பார்த்து), “இவர்கள் பேரருளாளனால் விடுதலை செய்யப்பட்டவர்கள்; இவர்கள் எந்த நற்செயலும் புரியாமல், எந்த நன்மையும் ஏற்கெனவே செய்திராமல் அவனே இவர்களைச் சொர்க்கத்தினுள் பிரவேசிக்கச்செய்தான்” என்று கூறுவர்.

பிறகு (அவர்களிடம்) நீங்கள் காண்கிறீர்களே இதுவும் உங்களுக்கு உண்டு; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கு உண்டு” என்று (நற்செய்தி) சொல்லப்படும்.

அத்தியாயம் : 97

(புகாரி: 7439)

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ زَيْدٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ:

قُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ القِيَامَةِ؟ قَالَ: «هَلْ تُضَارُونَ فِي رُؤْيَةِ الشَّمْسِ وَالقَمَرِ إِذَا كَانَتْ صَحْوًا؟»، قُلْنَا: لاَ، قَالَ: «فَإِنَّكُمْ لاَ تُضَارُونَ فِي رُؤْيَةِ رَبِّكُمْ يَوْمَئِذٍ، إِلَّا كَمَا تُضَارُونَ فِي رُؤْيَتِهِمَا» ثُمَّ قَالَ: ” يُنَادِي مُنَادٍ: لِيَذْهَبْ كُلُّ قَوْمٍ إِلَى مَا كَانُوا يَعْبُدُونَ، فَيَذْهَبُ أَصْحَابُ الصَّلِيبِ مَعَ صَلِيبِهِمْ، وَأَصْحَابُ الأَوْثَانِ مَعَ أَوْثَانِهِمْ، وَأَصْحَابُ كُلِّ آلِهَةٍ مَعَ آلِهَتِهِمْ، حَتَّى يَبْقَى مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ، مِنْ بَرٍّ أَوْ فَاجِرٍ، وَغُبَّرَاتٌ مِنْ أَهْلِ الكِتَابِ، ثُمَّ يُؤْتَى بِجَهَنَّمَ تُعْرَضُ كَأَنَّهَا سَرَابٌ، فَيُقَالُ لِلْيَهُودِ: مَا كُنْتُمْ تَعْبُدُونَ؟ قَالُوا: كُنَّا نَعْبُدُ عُزَيْرَ ابْنَ اللَّهِ، فَيُقَالُ: كَذَبْتُمْ ، لَمْ يَكُنْ لِلَّهِ صَاحِبَةٌ وَلاَ وَلَدٌ، فَمَا تُرِيدُونَ؟ قَالُوا: نُرِيدُ أَنْ تَسْقِيَنَا، فَيُقَالُ: اشْرَبُوا، فَيَتَسَاقَطُونَ فِي جَهَنَّمَ، ثُمَّ يُقَالُ لِلنَّصَارَى: مَا كُنْتُمْ تَعْبُدُونَ؟ فَيَقُولُونَ: كُنَّا نَعْبُدُ المَسِيحَ ابْنَ اللَّهِ، فَيُقَالُ: كَذَبْتُمْ، لَمْ يَكُنْ لِلَّهِ صَاحِبَةٌ، وَلاَ وَلَدٌ، فَمَا تُرِيدُونَ؟ فَيَقُولُونَ: نُرِيدُ أَنْ تَسْقِيَنَا، فَيُقَالُ: اشْرَبُوا فَيَتَسَاقَطُونَ فِي جَهَنَّمَ، حَتَّى يَبْقَى مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ أَوْ فَاجِرٍ، فَيُقَالُ لَهُمْ: مَا يَحْبِسُكُمْ وَقَدْ ذَهَبَ النَّاسُ؟ فَيَقُولُونَ: فَارَقْنَاهُمْ، وَنَحْنُ أَحْوَجُ مِنَّا إِلَيْهِ اليَوْمَ، وَإِنَّا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي: لِيَلْحَقْ كُلُّ قَوْمٍ بِمَا كَانُوا يَعْبُدُونَ، وَإِنَّمَا نَنْتَظِرُ رَبَّنَا، قَالَ: فَيَأْتِيهِمُ الجَبَّارُ فِي صُورَةٍ غَيْرِ صُورَتِهِ الَّتِي رَأَوْهُ فِيهَا أَوَّلَ مَرَّةٍ، فَيَقُولُ: أَنَا رَبُّكُمْ، فَيَقُولُونَ: أَنْتَ رَبُّنَا، فَلاَ يُكَلِّمُهُ إِلَّا الأَنْبِيَاءُ، فَيَقُولُ: هَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُ آيَةٌ تَعْرِفُونَهُ؟ فَيَقُولُونَ: السَّاقُ، فَيَكْشِفُ عَنْ سَاقِهِ، فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ، وَيَبْقَى مَنْ كَانَ يَسْجُدُ لِلَّهِ رِيَاءً وَسُمْعَةً، فَيَذْهَبُ كَيْمَا يَسْجُدَ، فَيَعُودُ ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا، ثُمَّ يُؤْتَى بِالْجَسْرِ فَيُجْعَلُ بَيْنَ ظَهْرَيْ جَهَنَّمَ “، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا الجَسْرُ؟ قَالَ: ” مَدْحَضَةٌ مَزِلَّةٌ، عَلَيْهِ خَطَاطِيفُ وَكَلاَلِيبُ، وَحَسَكَةٌ مُفَلْطَحَةٌ لَهَا شَوْكَةٌ عُقَيْفَاءُ، تَكُونُ بِنَجْدٍ، يُقَالُ لَهَا: السَّعْدَانُ، المُؤْمِنُ عَلَيْهَا كَالطَّرْفِ وَكَالْبَرْقِ وَكَالرِّيحِ، وَكَأَجَاوِيدِ الخَيْلِ وَالرِّكَابِ، فَنَاجٍ مُسَلَّمٌ، وَنَاجٍ مَخْدُوشٌ، وَمَكْدُوسٌ فِي نَارِ جَهَنَّمَ، حَتَّى يَمُرَّ آخِرُهُمْ يُسْحَبُ سَحْبًا، فَمَا أَنْتُمْ بِأَشَدَّ لِي مُنَاشَدَةً فِي الحَقِّ، قَدْ تَبَيَّنَ لَكُمْ مِنَ المُؤْمِنِ يَوْمَئِذٍ لِلْجَبَّارِ، وَإِذَا رَأَوْا أَنَّهُمْ قَدْ نَجَوْا، فِي إِخْوَانِهِمْ، يَقُولُونَ: رَبَّنَا إِخْوَانُنَا، كَانُوا يُصَلُّونَ مَعَنَا، وَيَصُومُونَ مَعَنَا، وَيَعْمَلُونَ مَعَنَا، فَيَقُولُ اللَّهُ تَعَالَى: اذْهَبُوا، فَمَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ دِينَارٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ، وَيُحَرِّمُ اللَّهُ صُوَرَهُمْ عَلَى النَّارِ، فَيَأْتُونَهُمْ وَبَعْضُهُمْ قَدْ غَابَ فِي النَّارِ إِلَى قَدَمِهِ، وَإِلَى أَنْصَافِ سَاقَيْهِ، فَيُخْرِجُونَ مَنْ عَرَفُوا، ثُمَّ يَعُودُونَ، فَيَقُولُ: اذْهَبُوا فَمَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ نِصْفِ دِينَارٍ فَأَخْرِجُوهُ، فَيُخْرِجُونَ مَنْ عَرَفُوا، ثُمَّ يَعُودُونَ، فَيَقُولُ: اذْهَبُوا فَمَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ، فَيُخْرِجُونَ مَنْ عَرَفُوا ” قَالَ أَبُو سَعِيدٍ: فَإِنْ لَمْ تُصَدِّقُونِي فَاقْرَءُوا: {إِنَّ اللَّهَ لاَ يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِنْ تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا} [النساء: 40]، ” فَيَشْفَعُ النَّبِيُّونَ وَالمَلاَئِكَةُ وَالمُؤْمِنُونَ، فَيَقُولُ الجَبَّارُ: بَقِيَتْ شَفَاعَتِي، فَيَقْبِضُ قَبْضَةً مِنَ النَّارِ، فَيُخْرِجُ أَقْوَامًا قَدْ امْتُحِشُوا، فَيُلْقَوْنَ فِي نَهَرٍ بِأَفْوَاهِ الجَنَّةِ، يُقَالُ لَهُ: مَاءُ الحَيَاةِ، فَيَنْبُتُونَ فِي حَافَتَيْهِ كَمَا تَنْبُتُ الحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ، قَدْ رَأَيْتُمُوهَا إِلَى جَانِبِ الصَّخْرَةِ، وَإِلَى جَانِبِ الشَّجَرَةِ، فَمَا كَانَ إِلَى الشَّمْسِ مِنْهَا كَانَ أَخْضَرَ، وَمَا كَانَ مِنْهَا إِلَى الظِّلِّ كَانَ أَبْيَضَ، فَيَخْرُجُونَ كَأَنَّهُمُ اللُّؤْلُؤُ، فَيُجْعَلُ فِي رِقَابِهِمُ الخَوَاتِيمُ، فَيَدْخُلُونَ الجَنَّةَ، فَيَقُولُ أَهْلُ الجَنَّةِ: هَؤُلاَءِ عُتَقَاءُ الرَّحْمَنِ، أَدْخَلَهُمُ الجَنَّةَ بِغَيْرِ عَمَلٍ عَمِلُوهُ، وَلاَ خَيْرٍ قَدَّمُوهُ، فَيُقَالُ لَهُمْ: لَكُمْ مَا رَأَيْتُمْ وَمِثْلَهُ مَعَهُ


Bukhari-Tamil-7439.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-7439.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




மேலும் பார்க்க: முஸ்லிம்-302 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.