Category: முஸ்லிம்

Muslim

Muslim-5650

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் : 27

யுக முடிவு நாள் நெருங்குதல்.

5650. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்களில் தீயவர்கள் மீதே யுக முடிவு நாள் ஏற்படும். (அதற்கு முன்பே நல்லவர்கள் அனைவரும் மறைந்துவிடுவர்.)

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 52


«لَا تَقُومُ السَّاعَةُ، إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ»


Muslim-5651

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5651. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தமது பெருவிரலுக்கு அடுத்த (சுட்டு) விரலையும் நடுவிரலையும் (இணைத்துக் காட்டி) சைகை செய்து, “நானும் யுக முடிவு நாளும் இதோ இதைப் போன்று (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறியதைக் கேட்டேன்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 52


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُشِيرُ بِإِصْبَعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ وَالْوُسْطَى، وَهُوَ يَقُولُ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ هَكَذَا»


Muslim-5652

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5652. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் யுக முடிவு நாளும் இதோ இந்த (சுட்டு விரல், நடு விரல் ஆகிய) இரு விரல்களைப் போன்று (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

கத்தாதா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை (எனக்கு) அறிவிக்கும்போது, “(உயரத்தில் அவ்விரல்களில்) ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்திருப்பதைப் போன்று” என்று கூறினார்கள். அதை அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்களா, அல்லது தாமாகவே கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 52


«بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ» قَالَ شُعْبَةُ: وَسَمِعْتُ قَتَادَةَ يَقُولُ فِي قَصَصِهِ: كَفَضْلِ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى، فَلَا أَدْرِي أَذَكَرَهُ عَنْ أَنَسٍ أَوْ قَالَهُ قَتَادَةُ


Muslim-5653

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5653. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் யுக முடிவு நாளும் இவ்வாறு அனுப்பப் பட்டுள்ளோம்” என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும் போது, தம் சுட்டு விரலையும் நடுவிரலையும் இணைத்து (இவ்வாறு என்று) சைகை செய்து காட்டினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 52


«بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ هَكَذَا» وَقَرَنَ شُعْبَةُ بَيْنَ إِصْبَعَيْهِ، الْمُسَبِّحَةِ وَالْوُسْطَى، يَحْكِيهِ

– وَحَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا

– وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ حَمْزَةَ يَعْنِي الضَّبِّيَّ، وَأَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِمِثْلِ حَدِيثِهِمْ


Muslim-5654

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5654. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் சுட்டு விரலையும் நடுவிரலையும் இணைத்தவாறு “நானும் யுக முடிவு நாளும் இவ்விரு விரல்களைப் போன்று அனுப்பப் பட்டுள்ளோம்” என்று கூறினார்கள்.

Book : 52


«بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ» قَالَ: وَضَمَّ السَّبَّابَةَ وَالْوُسْطَى


Muslim-5655

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5655. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வரும்போது யுக முடிவு நாளைப் பற்றி, “அது எப்போது வரும்?” என்று கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அம்மக்களிலேயே வயதில் மிகச்சிறிய மனிதரைப் பார்த்து, “இதோ இவர் உயிருடன் வாழ்ந்தால் இவர் முதுமையை அடையாமல் இருக்கும்போதே உங்களின் யுக முடிவு (இறப்பு) நாள் சம்பவிக்கும்” என்று கூறுவார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 52


كَانَ الْأَعْرَابُ إِذَا قَدِمُوا عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلُوهُ عَنِ السَّاعَةِ: مَتَى السَّاعَةُ؟ فَنَظَرَ إِلَى أَحْدَثِ إِنْسَانٍ مِنْهُمْ، فَقَالَ: «إِنْ يَعِشْ هَذَا، لَمْ يُدْرِكْهُ الْهَرَمُ، قَامَتْ عَلَيْكُمْ سَاعَتُكُمْ»


Muslim-5656

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5656. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “யுக முடிவு நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் “முஹம்மத்” எனப்படும் அன்சாரி சிறுவர் ஒருவர் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தச் சிறுவரைக் காட்டி), “இந்தச் சிறுவர் உயிருடன் வாழ்ந்து, அவருக்கு முதுமைப்பருவம் ஏற்படாமலிருக்கும் நிலையில் யுக முடிவு நாள் வரலாம்” என்று கூறினார்கள்.

Book : 52


أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَتَى تَقُومُ السَّاعَةُ؟ وَعِنْدَهُ غُلَامٌ مِنَ الْأَنْصَارِ، يُقَالُ لَهُ مُحَمَّدٌ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ يَعِشْ هَذَا الْغُلَامُ، فَعَسَى أَنْ لَا يُدْرِكَهُ الْهَرَمُ حَتَّى تَقُومَ السَّاعَةُ»


Muslim-5657

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5657. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “யுக முடிவு நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு தமக்கு முன்னாலிருந்த “அஸ்த் ஷனூஆ” குலத்தைச் சேர்ந்த சிறுவர் ஒருவரைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “இவருக்கு வாழ்நாள் கிடைத்து, முதுமைப் பருவம் ஏற்படாமலிருக்கும்போது யுக முடிவு நாள் வரும்” என்று சொன்னார்கள்.

அந்தச் சிறுவர் அன்று என் வயதொத்தவர்களில் ஒருவராக இருந்தார்.

Book : 52


أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَتَى تَقُومُ السَّاعَةُ؟ قَالَ: فَسَكَتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُنَيْهَةً، ثُمَّ نَظَرَ إِلَى غُلَامٍ بَيْنَ يَدَيْهِ مِنْ أَزْدِ شَنُوءَةَ، فَقَالَ: «إِنْ عُمِّرَ هَذَا، لَمْ يُدْرِكْهُ الْهَرَمُ حَتَّى تَقُومَ السَّاعَةُ» قَالَ: قَالَ أَنَسٌ: ذَاكَ الْغُلَامُ مِنْ أَتْرَابِي يَوْمَئِذٍ


Muslim-5658

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5658. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் அடிமைகளில் ஒருவர் (எங்களைக்)கடந்து சென்றார். அவர் என் வயதொத்தவர்களில் ஒருவராக இருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவரது வாழ்நாள் தள்ளிப்போய் இவரை முதுமைப் பருவம் அடைவதற்கு முன்பே யுக முடிவு நாள் வந்துவிடும்” என்று சொன்னார்கள்.

Book : 52


مَرَّ غُلَامٌ لِلْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، وَكَانَ مِنْ أَقْرَانِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ يُؤَخَّرْ هَذَا، فَلَنْ يُدْرِكَهُ الْهَرَمُ حَتَّى تَقُومَ السَّاعَةُ»


Muslim-5659

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

5659. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் தமது ஒட்டகத்தில் பால் கறந்து அந்தப் பாத்திரத்தைத் தமது வாயருகே கொண்டுசென்றிருக்கமாட்டார். அதற்குள் யுக முடிவு சம்பவித்துவிடும். இரு மனிதர்கள் துணியை விரித்துப்போட்டுப் பேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேரத்தை முடிப்பதற்கு முன்பே யுக முடிவு ஏற்பட்டுவிடும். ஒரு மனிதர் தமது தண்ணீர் தொட்டியைச் செப்பனிட்டுக்கொண்டிருப்பார். அவர் அதை முடிப்பதற்கு முன்பே யுக முடிவு ஏற்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 52


«تَقُومُ السَّاعَةُ وَالرَّجُلُ يَحْلُبُ اللِّقْحَةَ، فَمَا يَصِلُ الْإِنَاءُ إِلَى فِيهِ حَتَّى تَقُومَ، وَالرَّجُلَانِ يَتَبَايَعَانِ الثَّوْبَ، فَمَا يَتَبَايَعَانِهِ حَتَّى تَقُومَ، وَالرَّجُلُ يَلِطُ فِي حَوْضِهِ، فَمَا يَصْدُرُ حَتَّى تَقُومَ»


Next Page » « Previous Page