தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1044

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏழை முஹாஜிர்கள் (சிலர்) வந்து, “செல்வச் சீமான்கள் (மறுமையின்) உயர் பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய்விடுகின்றனர்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அது எவ்வாறு?” என்று கேட்டார்கள். அவர்கள், “(ஏழைகளாகிய) நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆனால், அவர்கள் தானதர்மங்கள் செய்கின்றனர். நாங்கள் (அவ்வாறு) தானதர்மங்கள் செய்(ய முடி)வதில்லை. அவர்கள் அடிமைகளை விடுதலை செய்கின்றனர். நாங்கள் (அவ்வாறு) அடிமைகளை விடுதலை செய்(ய இயல்)வதில்லை” என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா! (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்தி விட்டவர்களையும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். உங்களைவிட வேறெவரும் சிறந்தவர்களாக ஆகிவிட முடியாது; உங்களைப் போன்று அவர்களும் செயல்படுத்தினால் தவிர” என்று கூறினார்கள். முஹாஜிர்கள், “ஆம் (அறிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அது யாதெனில்) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் “சுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் தூயவன்) என்றும், “அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும், “அல்ஹம்து லில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும் (மூன்றையும் சேர்த்து) முப்பத்து மூன்று முறை கூறுங்கள்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ சாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

பிறகு அந்த ஏழை முஹாஜிர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து “செல்வச் சீமான்களான எங்கள் சகோதரர்கள் நாங்கள் செய்துவருவதைக் கேள்விப்பட்டு அவ்வாறே அவர்களும் செய்துவருகின்றனர்” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது அல்லாஹ்வின் அருட்கொடை. அவன் நாடியவர்களுக்கு அதை வழங்குகிறான்” என்று சொன்னார்கள்.

குதைபா (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றவர்களின் அறிவிப்பில் சுமய்யு (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:

நான் இந்த ஹதீஸை என் குடும்பத்தாரில் ஒருவரிடம் அறிவித்தேன். அவர் “நீர் கூறுவது தவறு. அபூசாலிஹ் (ரஹ்) அவர்கள் “முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்லாஹு அக்பர் என்றும் கூறுவீராக!” என்றே கூறினார்கள்” என்றார். உடனே நான் அபூசாலிஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று இது பற்றித் தெரிவித்தேன். உடனே அவர்கள் எனது கையைப் பிடித்தவாறு “அல்லாஹு அக்பர் வ சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி, அல்லாஹுஅக்பர் வ சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி என்று அனைத்தும் சேர்த்து முப்பத்து மூன்று முறை எட்டும் அளவுக்குக் கூறுவீராக!” என்றார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு அஜ்லான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை நான் ரஜாஉ பின் ஹய்வா (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் அபூசாலிஹ் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்ததைப் போன்றே எனக்கு அறிவித்தார்கள்.

Book : 5

(முஸ்லிம்: 1044)

حَدَّثَنَا عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ، ح قَالَ: وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ عَجْلَانَ، كِلَاهُمَا عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ – وَهَذَا حَدِيثُ قُتَيْبَةَ –

أَنَّ فُقَرَاءَ الْمُهَاجِرِينَ أَتَوْا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالدَّرَجَاتِ الْعُلَى، وَالنَّعِيمِ الْمُقِيمِ، فَقَالَ: «وَمَا ذَاكَ؟» قَالُوا: يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَتَصَدَّقُونَ وَلَا نَتَصَدَّقُ، وَيُعْتِقُونَ وَلَا نُعْتِقُ، فَقَالَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفَلَا أُعَلِّمُكُمْ شَيْئًا تُدْرِكُونَ بِهِ مَنْ سَبَقَكُمْ وَتَسْبِقُونَ بِهِ مَنْ بَعْدَكُمْ؟ وَلَا يَكُونُ أَحَدٌ أَفْضَلَ مِنْكُمْ إِلَّا مَنْ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُمْ» قَالُوا: بَلَى، يَا رَسُولُ اللهِ قَالَ: «تُسَبِّحُونَ، وَتُكَبِّرُونَ، وَتَحْمَدُونَ، دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ مَرَّةً» قَالَ أَبُو صَالِحٍ: فَرَجَعَ فُقَرَاءُ الْمُهَاجِرِينَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: سَمِعَ إِخْوَانُنَا أَهْلُ الْأَمْوَالِ بِمَا فَعَلْنَا، فَفَعَلُوا مِثْلَهُ، فَقَالَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَلِكَ فَضْلُ اللهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ» وَزَادَ غَيْرُ قُتَيْبَةَ فِي هَذَا الْحَدِيثِ عَنِ اللَّيْثِ، عَنِ ابْنِ عَجْلَانَ، قَالَ سُمَيٌّ: فَحَدَّثْتُ بَعْضَ أَهْلِي هَذَا الْحَدِيثَ، فَقَالَ: وَهِمْتَ، إِنَّمَا قَالَ «تُسَبِّحُ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتَحْمَدُ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَتُكَبِّرُ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ» فَرَجَعْتُ إِلَى أَبِي صَالِحٍ فَقُلْتُ لَهُ ذَلِكَ، فَأَخَذَ بِيَدِي فَقَالَ: اللهُ أَكْبَرُ، وَسُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، اللهُ أَكْبَرُ، وَسُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، حَتَّى تَبْلُغَ مِنْ جَمِيعِهِنَّ ثَلَاثَةً وَثَلَاثِينَ.

قَالَ ابْنُ عَجْلَانَ: فَحَدَّثْتُ بِهَذَا الْحَدِيثِ رَجَاءَ بْنَ حَيْوَةَ، فَحَدَّثَنِي بِمِثْلِهِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.


Tamil-1044
Shamila-595
JawamiulKalim-941




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.