தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1213

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூகத்தாதா ஹாரிஸ் பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரிலிருந்து திரும்பும்போது)அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது “இன்று மாலையும் இரவும் நீங்கள் பயணம் செய்து இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நாளை (காலை) நீங்கள் நீர்நிலையைச் சென்றடைவீர்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் யாரும் யாரையும் திரும்பிப் பார்க்காமல் (விரைவாகப்) பயணம் செய்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுநிசி நேரம்வரைப் பயணம் செய்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இலேசாக உறக்கம் வரவே, அவர்கள் தமது வாகனத்திலிருந்து சாய்ந்தார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அவர்களது உறக்கத்தைக் கலைக்காமல் அவர்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டேன். அதையடுத்து அவர்கள் தமது வாகனத்தில் நேராக அமர்ந்து கொண்டார்கள். பிறகு தொடர்ந்து பயணம் செய்து இரவின் பெரும்பகுதி கடந்தபோது (மீண்டும்) உறங்கித் தமது வாகனத்திலிருந்து சாய்ந்தார்கள். அப்போதும் நான் அவர்களது உறக்கத்தைக் கலைக்காமல் அவர்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டேன். அதையடுத்து அவர்கள் தமது வாகனத்தில் நேராக அமர்ந்துகொண்டார்கள். பிறகு இன்னும் (சிறிது தூரம்) பயணம் செய்து இரவின் இறுதிப் பகுதியானபோது முன்னர் இரு முறை சாய்ந்ததைவிட மிகப் பலமாகச் சாய்ந்து கீழே விழப்போனார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அவர்களை (மீண்டும்) தாங்கிப் பிடித்துக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்தி, “யார் அது?” என்று கேட்டார்கள். “அபூகத்தாதா” என்றேன். “நீங்கள் எப்போதிருந்து என்னருகில் பயணம் செய்துவருகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான் “இரவிலிருந்து இவ்வாறு உங்கள் அருகிலேயே பயணம் செய்து வருகிறேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரை நீங்கள் காத்த காரணத்தால் அல்லாஹ்வும் உங்களைக் காப்பானாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

பிறகு “நாம் மக்களைவிட்டு மறைந்து (வெகு தொலைவிற்கு வந்து)விட்டோம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?” எனக் கேட்டார்கள். பின்னர் “மக்களில் யாரேனும் தென்படுகிறார்களா (என்று பாருங்கள்!)?” என்றார்கள். நான், “இதோ ஒரு பயணி” என்றேன். பிறகு “இதோ மற்றொரு பயணி” என்றேன். இறுதியில் நாங்கள் ஏழு பயணிகள் ஒன்றுசேர்ந்து விட்டோம்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பயண வழியிலிருந்து விலகி (ஓரிடத்திற்குச் சென்று உறங்குவதற்காகத்) தமது தலையை (ஓரிடத்தில்) சாய்த்தார்கள். பிறகு, “நீங்கள் எமது தொழுகையைக் காக்கவேண்டும் (நான் உறங்கிவிட்டால் என்னை உறக்கத்திலிருந்து எழுப்ப வேண்டும்)” என்றார்கள். (ஆனால், நாங்கள் அனைவரும் உறங்கி விட்டோம்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். அப்போது சூரிய ஒளி அவர்களது முதுகில் பட்டது. உடனே நாங்கள் திடுக்கிட்டு விழித்தெழுந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) “(இங்கிருந்து உடனே உங்கள் வாகனங்களில்) ஏறிப் புறப்படுங்கள்” என்றார்கள். உடனே நாங்கள் வாகனங்களில் ஏறிப் புறப்பட்டோம். சூரியன் நன்கு உதயமான பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கினார்கள். பிறகு தண்ணீர் குவளையைக் கொண்டுவரச் சொன்னார்கள். அந்தக் குவளை என்னிடத்தில்தான் இருந்தது. அதில் சிறிதளவு தண்ணீரும் இருந்தது. பிறகு அதிலிருந்த தண்ணீரால் சிக்கனமாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அதில் சிறிதளவு தண்ணீர் எஞ்சியது. என்னிடம், “நமக்காக உமது தண்ணீர் குவளையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள். விரைவில் இதில் ஒரு (அதிசய) சம்பவம் நிகழவிருக்கிறது” என்றார்கள்.

அடுத்து பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுதார்கள். பின்னர் அதிகாலைத் தொழுகையைத் தொழுதார்கள். (இதையெல்லாம்) ஒவ்வொரு நாளும் செய்வதைப் போன்றே அவர்கள் செய்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நாங்களும் வாகனத்தில் ஏறி அவர்களுடன் சென்றோம். அப்போது எங்களில் சிலர் சிலரிடம் “நமது தொழுகை விஷயத்தில் நாம் செய்துவிட்ட குறைபாட்டிற்குப் பரிகாரம் என்ன?” என்று இரகசியமாகப் பேசிக்கொண்டோம். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அறிவீர்: என்னிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறதல்லவா?” என்று கேட்டுவிட்டு, “அறிவீர்: உறக்கத்தால் குறைபாடு ஏற்பட்டுவிடுவதில்லை; குறைபாடெல்லாம் ஒரு தொழுகையை மறுதொழுகை நேரம் வரும்வரை தொழாமல் இருப்பதுதான். இவ்வாறு செய்துவிட்டவர் அது பற்றிய உணர்வு வந்தவுடன் தொழுதுகொள்ளட்டும். மறுநாளாகிவிட்டால் அந்த நாளின் தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுகொள்ளட்டும்”என்றார்கள்.

பிறகு “மக்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?” என்று (தம்முடன் இருந்த தோழர்களிடம்) கேட்டுவிட்டு, “மக்கள் தங்களுடைய நபியைக் காணாமல் தேடிக்கொண்டிருப்பார்கள்; அபூபக்ரும் உமரும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்களைப் பின்னால் விட்டுவிட்டுச் சென்றுவிடமாட்டார்கள்” என்று கூறுவார்கள். ஆனால், மற்றவர்களோ, “(இல்லை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு முன்பே சென்றுவிட்டார்கள்” என்று கூறுவார்கள். மக்கள் அபூபக்ர் மற்றும் உமர் ஆகிய இருவருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் அவர்கள் நேர்வழியடைவார்கள்” என்று கூறினார்கள்.

பிறகு நாங்கள் மக்களிடம் நண்பகல் நேரத்தில் சென்றடைந்தோம். அப்போது (வெப்பத்தால்) பொருட்களெல்லாம் சூடேறி விட்டிருந்தன. மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அழிந்தோம்; எங்களுக்கு (கடுமையான) தாகம் ஏற்பட்டுள்ளது”என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களுக்கு எந்த அழிவும் இல்லை” என்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “எனது சிறிய பாத்திரத்தை எடுத்து வாருங்கள்!” என்று கூறி அந்த நீர்குவளையைக் கேட்டார்கள். பின்னர் (அதிலிருந்து சிறிது தண்ணீரை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஊற்ற,அதை நான் மக்களுக்குப் புகட்டிக்கொண்டிருந்தேன். மக்கள் அந்தக் குவளையில் தண்ணீரைக் கண்டதுதான் தாமதம், (அதைப் பெறுவதற்காக முண்டியடித்து) அதன் மீது விழுந்தனர். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இங்கிதம் பேணுங்கள். உங்கள் அனைவரின் தாகமும் தீரும்” என்றார்கள். அவவாறே மக்கள் நடந்துகொண்டனர்.

இவ்விதம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் ஊற்ற அதை நான் மக்களுக்குப் புகட்டிக்கொண்டிருந்தேன். இறுதியில் என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் மிஞ்சவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் ஊற்றியபடி என்னிடம் “நீங்கள் பருகுங்கள்!” என்றார்கள். நான் “தாங்கள் பருகாதவரை நான் பருகமாட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களுக்குத் தண்ணீர் புகட்டுபவரே அவர்களில் இறுதியாகப் பருக வேண்டும்” என்றார்கள். ஆகவே, நான் பருகினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பருகினார்கள். பிறகு மக்கள் தாகம் தணிந்து மகிழ்ச்சியடைந்தவர்களாக அந்த நீரை நோக்கி வந்தனர்.

இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் இந்த ஹதீஸை ஜுமுஆப் பள்ளிவாசலில் அறிவித்துக்கொண்டிருந்தேன். அப்போது (அங்கிருந்த) இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், “இளைஞரே! நீங்கள் என்ன அறிவிக்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். ஏனெனில்,அன்றிரவு பயணம் செய்த குழுவினரில் நானும் ஒருவனாவேன்” என்றார்கள். நான், “அப்படியானால், நீங்கள்தாம் இந்த ஹதீஸ் தொடர்பாக நன்கு அறிவீர்கள்” என்றேன். அதற்கு இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் “நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?” என்று கேட்டார்கள். நான், “அன்சாரிகளில் (மதீனாவாசிகளில்) ஒருவன்” என்றேன். அதற்கு அவர்கள், “அப்படியானால் நீங்களே அறிவியுங்கள். (அன்சாரிகளாகிய) நீங்கள்தாம் உங்களது ஹதீஸ் தொடர்பாக நன்கு அறிவீர்கள்” என்றார்கள். ஆகவே, நான் மக்களிடம் (இந்த ஹதீஸை) அறிவித்தேன். அப்போது இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், “அன்றிரவு (பயணத்தில்) நானும் கலந்துகொண்டேன். ஆனால், நீங்கள் இதை மனனமிட்டதைப் போன்று வேறெவரும் மனனமிட்டிருப்பார்கள் என்று நான் கருதவில்லை” என்றார்கள்.

அத்தியாயம்: 5

(முஸ்லிம்: 1213)

وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ يَعْنِي ابْنَ الْمُغِيرَةِ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِي قَتَادَةَ، قَالَ

خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنَّكُمْ تَسِيرُونَ عَشِيَّتَكُمْ وَلَيْلَتَكُمْ، وَتَأْتُونَ الْمَاءَ إِنْ شَاءَ اللهُ غَدًا»، فَانْطَلَقَ النَّاسُ لَا يَلْوِي أَحَدٌ عَلَى أَحَدٍ، قَالَ أَبُو قَتَادَةَ: فَبَيْنَمَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسِيرُ حَتَّى ابْهَارَّ اللَّيْلُ، وَأَنَا إِلَى جَنْبِهِ، قَالَ: فَنَعَسَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَالَ عَنْ رَاحِلَتِهِ، فَأَتَيْتُهُ فَدَعَمْتُهُ مِنْ غَيْرِ أَنْ أُوقِظَهُ حَتَّى اعْتَدَلَ عَلَى رَاحِلَتِهِ، قَالَ: ثُمَّ سَارَ حَتَّى تَهَوَّرَ اللَّيْلُ، مَالَ عَنْ رَاحِلَتِهِ، قَالَ: فَدَعَمْتُهُ مِنْ غَيْرِ أَنْ أُوقِظَهُ حَتَّى اعْتَدَلَ عَلَى رَاحِلَتِهِ، قَالَ: ثُمَّ سَارَ حَتَّى إِذَا كَانَ مِنْ آخِرِ السَّحَرِ، مَالَ مَيْلَةً هِيَ أَشَدُّ مِنَ الْمَيْلَتَيْنِ الْأُولَيَيْنِ، حَتَّى كَادَ يَنْجَفِلُ، فَأَتَيْتُهُ فَدَعَمْتُهُ، فَرَفَعَ رَأْسَهُ، فَقَالَ: «مَنْ هَذَا؟» قُلْتُ: أَبُو قَتَادَةَ، قَالَ: «مَتَى كَانَ هَذَا مَسِيرَكَ مِنِّي؟» قُلْتُ: مَا زَالَ هَذَا مَسِيرِي مُنْذُ اللَّيْلَةِ، قَالَ: «حَفِظَكَ اللهُ بِمَا حَفِظْتَ بِهِ نَبِيَّهُ»، ثُمَّ قَالَ: «هَلْ تَرَانَا نَخْفَى عَلَى النَّاسِ؟»، ثُمَّ قَالَ: «هَلْ تَرَى مِنْ أَحَدٍ؟» قُلْتُ: هَذَا رَاكِبٌ، ثُمَّ قُلْتُ: هَذَا رَاكِبٌ آخَرُ، حَتَّى اجْتَمَعْنَا فَكُنَّا سَبْعَةَ رَكْبٍ، قَالَ: فَمَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الطَّرِيقِ، فَوَضَعَ رَأْسَهُ، ثُمَّ قَالَ: «احْفَظُوا عَلَيْنَا صَلَاتَنَا»، فَكَانَ أَوَّلَ مَنِ اسْتَيْقَظَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالشَّمْسُ فِي ظَهْرِهِ، قَالَ: فَقُمْنَا فَزِعِينَ، ثُمَّ قَالَ: «ارْكَبُوا»، فَرَكِبْنَا فَسِرْنَا حَتَّى إِذَا ارْتَفَعَتِ الشَّمْسُ نَزَلَ، ثُمَّ دَعَا بِمِيضَأَةٍ كَانَتْ مَعِي فِيهَا شَيْءٌ  مِنْ مَاءٍ، قَالَ: فَتَوَضَّأَ مِنْهَا وُضُوءًا دُونَ وُضُوءٍ، قَالَ: وَبَقِيَ فِيهَا شَيْءٌ مَنْ مَاءٍ، ثُمَّ قَالَ لِأَبِي قَتَادَةَ: «احْفَظْ عَلَيْنَا مِيضَأَتَكَ، فَسَيَكُونُ لَهَا نَبَأٌ»، ثُمَّ أَذَّنَ بِلَالٌ بِالصَّلَاةِ، فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، ثُمَّ صَلَّى الْغَدَاةَ، فَصَنَعَ كَمَا كَانَ يَصْنَعُ كُلَّ يَوْمٍ، قَالَ: وَرَكِبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَكِبْنَا مَعَهُ، قَالَ: فَجَعَلَ بَعْضُنَا يَهْمِسُ إِلَى بَعْضٍ مَا كَفَّارَةُ مَا صَنَعْنَا بِتَفْرِيطِنَا فِي صَلَاتِنَا؟ ثُمَّ قَالَ: «أَمَا لَكُمْ فِيَّ أُسْوَةٌ»، ثُمَّ قَالَ: «أَمَا إِنَّهُ لَيْسَ فِيَّ النَّوْمِ تَفْرِيطٌ، إِنَّمَا التَّفْرِيطُ عَلَى مَنْ لَمْ يُصَلِّ الصَّلَاةَ حَتَّى يَجِيءَ وَقْتُ الصَّلَاةَ الْأُخْرَى، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَلْيُصَلِّهَا حِينَ يَنْتَبِهُ لَهَا، فَإِذَا كَانَ الْغَدُ فَلْيُصَلِّهَا عِنْدَ وَقْتِهَا»، ثُمَّ قَالَ: «مَا تَرَوْنَ النَّاسَ صَنَعُوا؟» قَالَ: ثُمَّ قَالَ: «أَصْبَحَ النَّاسُ فَقَدُوا نَبِيَّهُمْ»، فَقَالَ أَبُو بَكْرٍ، وَعُمَرُ: رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَكُمْ، لَمْ يَكُنْ لِيُخَلِّفَكُمْ، وَقَالَ النَّاسُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَيْدِيكُمْ، فَإِنْ يُطِيعُوا أَبَا بَكْرٍ، وَعُمَرَ يَرْشُدُوا، قَالَ: فَانْتَهَيْنَا إِلَى النَّاسِ حِينَ امْتَدَّ النَّهَارُ، وَحَمِيَ كُلُّ شَيْءٍ، وَهُمْ يَقُولُونَ: يَا رَسُولَ اللهِ هَلَكْنَا، عَطِشْنَا، فَقَالَ: «لَا هُلْكَ عَلَيْكُمْ»، ثُمَّ قَالَ: «أَطْلِقُوا لِي غُمَرِي» قَالَ: وَدَعَا بِالْمِيضَأَةِ، فَجَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُبُّ، وَأَبُو قَتَادَةَ يَسْقِيهِمْ، فَلَمْ يَعْدُ أَنْ رَأَى النَّاسُ مَاءً فِي الْمِيضَأَةِ تَكَابُّوا عَلَيْهَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْسِنُوا الْمَلَأَ كُلُّكُمْ سَيَرْوَى» قَالَ: فَفَعَلُوا، فَجَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُبُّ وَأَسْقِيهِمْ حَتَّى مَا بَقِيَ غَيْرِي، وَغَيْرُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ثُمَّ صَبَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِي: «اشْرَبْ»، فَقُلْتُ: لَا أَشْرَبُ حَتَّى تَشْرَبَ يَا رَسُولَ اللهِ قَالَ: «إِنَّ سَاقِيَ الْقَوْمِ آخِرُهُمْ شُرْبًا»، قَالَ: فَشَرِبْتُ، وَشَرِبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَأَتَى النَّاسُ الْمَاءَ جَامِّينَ رِوَاءً، قَالَ: فَقَالَ عَبْدُ اللهِ بْنُ رَبَاحٍ: إِنِّي لَأُحَدِّثُ هَذَا الْحَدِيثَ فِي مَسْجِدِ الْجَامِعِ، إِذْ قَالَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ انْظُرْ أَيُّهَا الْفَتَى كَيْفَ تُحَدِّثُ، فَإِنِّي أَحَدُ الرَّكْبِ تِلْكَ اللَّيْلَةَ، قَالَ: قُلْتُ: فَأَنْتَ أَعْلَمُ بِالْحَدِيثِ، فَقَالَ: مِمَّنْ أَنْتَ؟ قُلْتُ: مِنَ الْأَنْصَارِ، قَالَ: حَدِّثْ، فَأَنْتُمْ أَعْلَمُ بِحَدِيثِكُمْ، قَالَ: فَحَدَّثْتُ الْقَوْمَ، فَقَالَ عِمْرَانُ: لَقَدْ شَهِدْتُ تِلْكَ اللَّيْلَةَ، وَمَا شَعَرْتُ أَنْ أَحَدًا حَفِظَهُ كَمَا حَفِظْتُهُ


Muslim-Tamil-1213.
Muslim-TamilMisc-1099.
Muslim-Shamila-681.
Muslim-Alamiah-1099.
Muslim-JawamiulKalim-1105.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.