தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1633

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

மழைவேண்டிப் பிரார்த்தித்தல்.

 அனஸ் பின் மாலிக் (ரலி) அவ்ர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் “தாருல் களா” திசையிலிருக்கும் வாசல் வழியாகப் பள்ளிவாசலுக்குள் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றவாறு உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். வந்த மனிதர் நின்றுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத்தால் கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் நமக்கு மழை பொழிவிப்பான்” என்று கூறினார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தி, “இறைவா, எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா, எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா, எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அப்போது நாங்கள் வானத்தில் மேகக் கூட்டங்களையோ திரள்களையோ காணவில்லை. எங்களுக்கும் (மதீனாவிற்கு அருகிலுள்ள) “சல்உ” மலைக்குமிடையே எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை (என்பதை நாங்கள் தெளிவாகக் காண முடிந்தது). அப்போது அம்மலைக்குப் பின்னாலிருந்து கேடயம் போன்று (வட்ட வடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு பரவியது; பிறகு மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வாரம்வரை நாங்கள் சூரியனையே பார்க்கவில்லை.

அடுத்த வெள்ளியன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும் போது, ஒரு மனிதர் அதேவாசல் வழியாக (பள்ளிவாசலுக்குள்) வந்தார். (வந்தவர்) நின்றவாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (தொடர்ந்து பெய்த பெருமழையால்) எங்கள் (கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன (போக்கு வரத்து தடைப்பட்டுவிட்டது). எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா, எங்கள் சுற்றுப்புறங்கள் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா, சிறு குன்றுகள், அகன்ற மலைகள், ஓடைகள்,விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “இ(ரண்டாவதாக வ)ந்த மனிதர் முதலில் வந்தவர்தாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 9

(முஸ்லிம்: 1633)

2 – بَابُ الدُّعَاءِ فِي الِاسْتِسْقَاءِ

وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا، وَقَالَ الْآخَرُونَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ

أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ يَوْمَ جُمُعَةٍ، مِنْ بَابٍ كَانَ نَحْوَ دَارِ الْقَضَاءِ، وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا، ثُمَّ قَالَ: يَا رَسُولَ اللهِ هَلَكَتِ الْأَمْوَالُ، وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللهَ يُغِثْنَا ، قَالَ: فَرَفَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، ثُمَّ قَالَ: «اللهُمَّ أَغِثْنَا، اللهُمَّ أَغِثْنَا، اللهُمَّ أَغِثْنَا»، قَالَ أَنَسٌ: وَلَا وَاللهِ مَا نَرَى فِي السَّمَاءِ مِنْ سَحَابٍ وَلَا قَزَعَةٍ، وَمَا بَيْنَنَا وَبَيْنَ سَلْعٍ مِنْ بَيْتٍ وَلَا دَارٍ، قَالَ: فَطَلَعَتْ مِنْ وَرَائِهِ سَحَابَةٌ مِثْلُ التُّرْسِ، فَلَمَّا تَوَسَّطَتِ السَّمَاءَ انْتَشَرَتْ، ثُمَّ أَمْطَرَتْ، قَالَ: فَلَا وَاللهِ مَا رَأَيْنَا الشَّمْسَ سَبْتًا، قَالَ: ثُمَّ دَخَلَ رَجُلٌ مِنْ ذَلِكَ الْبَابِ فِي الْجُمُعَةِ الْمُقْبِلَةِ، وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يَخْطُبُ، فَاسْتَقْبَلَهُ قَائِمًا، فَقَالَ: يَا رَسُولَ اللهِ هَلَكَتِ الْأَمْوَالُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللهَ يُمْسِكْهَا عَنَّا، قَالَ: فَرَفَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، ثُمَّ قَالَ: «اللهُمَّ حَوْلَنَا وَلَا عَلَيْنَا، اللهُمَّ عَلَى الْآكَامِ، وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ» فَانْقَلَعَتْ، وَخَرَجْنَا نَمْشِي فِي الشَّمْسِ قَالَ شَرِيكٌ: فَسَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: أَهُوَ الرَّجُلُ الْأَوَّلُ؟ قَالَ: لَا أَدْرِي


Tamil-1633
Shamila-897
JawamiulKalim-1499




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.