தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1913

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுனைன் போரின்போது (எதிரிகளான) “ஹவாஸின்” குலத்தாரும் “கத்ஃபான்” குலத்தாரும் தம் குழந்தை குட்டிகளுடனும் கால்நடைகளுடனும் (இஸ்லாமியப் படையினரை) நோக்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் (அறப்) போராளிகள் பத்தாயிரம் பேரும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களும் இருந்தனர். அவர்கள் (அனைவரும் எதிரிகளின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல்) நபி (ஸல்) அவர்களைத் தனியாக விட்டுவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் இருமுறை அழைப்பு விடுத்தார்கள்; அவ்விரண்டுக்குமிடையே வேறெதுவும் பேசாமல் (தொடர்ச்சியாக) அழைத்தார்கள். தமது வலப்பக்கம் திரும்பி “அன்சாரிகளே!” என்று அழைக்க, அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்” என்று கூறினர். பிறகு தம் இடப்பக்கம் திரும்பி, “அன்சாரிகளே!” என்று அழைத்தார்கள். அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் வெள்ளைக் கோவேறு கழுதையின் மீது இருந்தார்கள். பிறகு அதிலிருந்து இறங்கி, “நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன்” என்று சொன்னார்கள். பிறகு (அந்தப் போரில் ஹவாஸின் மற்றும் ஃகத்ஃபான் குலத்தைச் சேர்ந்த) இணைவைப்பாளர்கள் தோல்வி கண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமான போர்ச்செல்வங்களைப் பெற்றார்கள்; அவற்றை முஹாஜிர்களிடையேயும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப் பட்டவர்களிடையேயும் பங்கிட்டார்கள். அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை.

ஆகவே, அன்சாரிகள் (சிலர்), “கடுமையான பிரச்சினை என்றால் நாங்கள் அழைக்கப்படுகிறோம். போர்ச் செல்வங்களோ மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன” என்று (மனக்குறையுடன்) பேசிக்கொண்டனர். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளை ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டி, “அன்சாரிகளே! உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தி என்ன? (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். அவர்கள் (அதை ஒப்புக்கொள்வதைப் போன்று) மௌனமாயிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகளே! மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டுசெல்ல, நீங்கள் (இறைத்தூதர்) முஹம்மதை உடைமையாக்கிக் கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள். அன்சாரிகள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (அதையே) விரும்புகிறோம்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களெல்லாம் ஒரு பள்ளத்தாக்கில் செல்ல, அன்சாரிகள் மட்டும் ஒரு கணவாயில் செல்வார்களாயின், நான் அன்சாரிகள் செல்லும் கணவாயையே தேர்ந்தெடுப்பேன்” என்று சொன்னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் (இதைத் தமக்கு அறிவித்த தம் பாட்டனாரான அனஸ் (ரலி) அவர்களிடம்), “அபூஹம்ஸா! (இந்நிகழ்ச்சி நடைபெற்றபோது) தாங்கள் அங்கு இருந்தீர்களா?” என்று கேட்க, அனஸ் (ரலி) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களைவிட்டு எங்கே போவேன்?” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 12

(முஸ்லிம்: 1913)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَإِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ – يَزِيدُ أَحَدُهُمَا عَلَى الْآخَرِ الْحَرْفَ بَعْدَ الْحَرْفِ – قَالَا: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ هِشَامِ بْنِ زَيْدِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ

لَمَّا كَانَ يَوْمُ حُنَيْنٍ أَقْبَلَتْ هَوَازِنُ وَغَطَفَانُ، وَغَيْرُهُمْ بِذَرَارِيِّهِمْ وَنَعَمِهِمْ، وَمَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ عَشَرَةُ آلَافٍ، وَمَعَهُ الطُّلَقَاءُ، فَأَدْبَرُوا عَنْهُ، حَتَّى بَقِيَ وَحْدَهُ، قَالَ: فَنَادَى يَوْمَئِذٍ نِدَاءَيْنِ، لَمْ يَخْلِطْ بَيْنَهُمَا شَيْئًا، قَالَ: فَالْتَفَتَ عَنْ يَمِينِهِ، فَقَالَ: «يَا مَعْشَرَ الْأَنْصَارِ» فَقَالُوا: لَبَّيْكَ، يَا رَسُولَ اللهِ، أَبْشِرْ نَحْنُ مَعَكَ، قَالَ: ثُمَّ الْتَفَتَ عَنْ يَسَارِهِ فَقَالَ: «يَا مَعْشَرَ الْأَنْصَارِ» قَالُوا: لَبَّيْكَ، يَا رَسُولَ اللهِ، أَبْشِرْ نَحْنُ مَعَكَ، قَالَ: وَهُوَ عَلَى بَغْلَةٍ بَيْضَاءَ، فَنَزَلَ فَقَالَ: أَنَا عَبْدُ اللهِ وَرَسُولُهُ، فَانْهَزَمَ الْمُشْرِكُونَ، وَأَصَابَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَنَائِمَ كَثِيرَةً، فَقَسَمَ فِي الْمُهَاجِرِينَ وَالطُّلَقَاءِ، وَلَمْ يُعْطِ الْأَنْصَارَ شَيْئًا، فَقَالَتِ الْأَنْصَارُ: إِذَا كَانَتِ الشِّدَّةُ فَنَحْنُ نُدْعَى، وَتُعْطَى الْغَنَائِمُ غَيْرَنَا، فَبَلَغَهُ ذَلِكَ، فَجَمَعَهُمْ فِي قُبَّةٍ، فَقَالَ: «يَا مَعْشَرَ الْأَنْصَارِ، مَا حَدِيثٌ بَلَغَنِي عَنْكُمْ؟» فَسَكَتُوا، فَقَالَ: «يَا مَعْشَرَ الْأَنْصَارِ، أَمَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالدُّنْيَا وَتَذْهَبُونَ بِمُحَمَّدٍ تَحُوزُونَهُ إِلَى بُيُوتِكُمْ؟» قَالُوا: بَلَى، يَا رَسُولَ اللهِ، رَضِينَا، قَالَ: فَقَالَ: «لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا، وَسَلَكَتْ الْأَنْصَارُ شِعْبًا، لَأَخَذْتُ شِعْبَ الْأَنْصَارِ» قَالَ هِشَامٌ: فَقُلْتُ: يَا أَبَا حَمْزَةَ، أَنْتَ شَاهِدٌ ذَاكَ؟ قَالَ: وَأَيْنَ أَغِيبُ عَنْهُ؟


Tamil-1913
Shamila-1059
JawamiulKalim-1763




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.