தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-199

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 57

தூயவனான அல்லாஹ், அவரவர் ஆற்றலுக்கு ஏற்பவே சுமைகளைத் தருகின்றான்.

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன; உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக்கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான். அவன் நாடியவர்களை மன்னிப்பான்; அவன் நாடியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள்மீதும் ஆற்றல் உள்ளவன் ஆவான்” எனும் (2:284ஆவது) வசனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சக்திக்குட்பட்ட தொழுகை, நோன்பு, அறப்போர், தர்மம் (ஸகாத்) ஆகியவற்றைச் செய்யுமாறு நாங்கள் உத்தரவிடப்பட்டோம். ஆனால், (இப்போது) தங்களுக்கு (மேற்கண்ட) இந்த வசனம் அருளப்பெற்றுள்ளது. இது எங்கள் சக்திக்கு மீறியதாயிற்றே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு முந்தைய இரு வேதக்காரர்(களான யூதர்களும் கிறிஸ்தவர்)களும் கூறியதைப் போன்று “செவியுற்றோம்; மாறு செய்தோம்” என்று நீங்களும் கூற விரும்புகின்றீர்களா? வேண்டாம்.(அவ்வாறு கூறிவிடாதீர்கள். மாறாக,) “எங்கள் அதிபதியே! (உன் கட்டளைகளை) நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். இன்னும் உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது” என்றே கூறுங்கள்” என்றார்கள். அவ்வாறே மக்கள், “எங்கள் அதிபதியே! (உன் கட்டளைகளை) நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். (எங்களின்) மீட்சியும் உன்னிடமே உள்ளது” என்று கூறினர். மக்கள் இவ்வாறு சொல்லச் சொல்ல அவர்களின் நாவு (இறைவனுக்குப்) பணிந்தது (உள்ளமும்தான்).

அதைத் தொடர்ந்து அல்லாஹ், “(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை நம்புகின்றார். நம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்). (இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். (மேலும் கூறுகின்றனர்:) அவனுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் (சிலரை ஏற்று சிலரை மறுத்து) நாங்கள் வேற்றுமை காட்டமாட்டோம். “எங்கள் அதிபதியே! நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது” என்றும் அவர்கள் வேண்டுகிறார்கள்” எனும் (2:285ஆவது) வசனத்தை அருளினான்.

ஆக, மக்கள் இவ்வாறு செயல்பட்டதையடுத்து அல்லாஹ், (“உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் மறைத்தாலும் உங்களிடம் அல்லாஹ் விசாரணை செய்வான்” எனும்) முந்திய வசனத்(தின் சட்டத்)தை மாற்றி (அதற்கு பதிலாகப்) பின்வரும் வசனத்தை அருளினான்: எந்த ஆன்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத பொறுப்பை அல்லாஹ் சுமத்துவதில்லை; அது சம்பாதித்த நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே. (நம்பிக்கையாளர்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) எங்கள் அதிபதியே! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களை தண்டித்து விடாதே! (2:286). “ஆகட்டும்! (அவ்வாறே செய்கிறேன்)” என்றான் அல்லாஹ்.

“எங்கள் அதிபதியே! எங்களுக்கு முன் சென்றோர்மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள்மீது சுமத்திவிடாதே!” அப்போதும் “ஆகட்டும்!” என்றான் அல்லாஹ்.

“எங்கள் சக்திக்கு மீறிய (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள்மீது சுமத்திவிடாதே!” அதற்கும் “ஆகட்டும்!” என்றான் அல்லாஹ்.

“எங்கள் பாவங்களை நீக்கி, எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள்மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் காவலன்; மறுக்கின்ற கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!” அதற்கும் “சரி! ஆகட்டும்!” என்றான் அல்லாஹ்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 1

(முஸ்லிம்: 199)

57 – بَابُ بَيَانِ قَوْلِهِ تَعَالَى: {وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ} [البقرة: 284]

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ الضَّرِيرُ، وَأُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ، وَاللَّفْظُ لِأُمَيَّةَ، قَالَا: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا رَوْحٌ وَهُوَ ابْنُ الْقَاسِمِ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ

لَمَّا نَزَلَتْ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللهُ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ} [البقرة: 284]، قَالَ: فَاشْتَدَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَوْا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ بَرَكُوا عَلَى الرُّكَبِ، فَقَالُوا: أَيْ رَسُولَ اللهِ، كُلِّفْنَا مِنَ الْأَعْمَالِ مَا نُطِيقُ، الصَّلَاةَ وَالصِّيَامَ وَالْجِهَادَ وَالصَّدَقَةَ، وَقَدِ اُنْزِلَتْ عَلَيْكَ هَذِهِ الْآيَةُ وَلَا نُطِيقُهَا، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَتُرِيدُونَ أَنْ تَقُولُوا كَمَا قَالَ أَهْلُ الْكِتَابَيْنِ مِنْ قَبْلِكُمْ سَمِعْنَا وَعَصَيْنَا؟ بَلْ قُولُوا: سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ “، قَالُوا: سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ، فَلَمَّا اقْتَرَأَهَا الْقَوْمُ، ذَلَّتْ بِهَا أَلْسِنَتُهُمْ، فَأَنْزَلَ اللهُ فِي إِثْرِهَا: {آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ} [البقرة: 285]، فَلَمَّا فَعَلُوا ذَلِكَ نَسَخَهَا اللهُ تَعَالَى، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {لَا يُكَلِّفُ اللهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا} [البقرة: 286] ” قَالَ: نَعَمْ ” {رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا} [البقرة: 286] ” قَالَ: نَعَمْ ” {رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ} [البقرة: 286] ” قَالَ: نَعَمْ ” {وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ} [البقرة: 286] ” قَالَ: نَعَمْ


Tamil-199
Shamila-125
JawamiulKalim-183




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.