தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-257

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களிடம், “குர்ஆனில் எந்த வசனம் முதன் முதலில் அருளப்பெற்றது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “போர்த்தியிருப்பவரே!” (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1ஆவது) வசனம்” என்றார்கள். நான், “ஓதுக (என்று தொடங்கும் 96:1ஆவது) வசனம் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அபூசலமா (ரஹ்) அவர்கள், “நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், “எந்த வசனம் முதன் முதலில் அருளப்பெற்றது?” என்று (இதே கேள்வியைக்) கேட்டேன். அதற்கு அவர்கள், “போர்த்தியிருப்பவரே!” எனும் (74:1ஆவது) வசனம்” என்றே பதிலளித்தார்கள். உடனே நான் “ஓதுக (இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க…) எனும் (96:1ஆவது) வசனம் இல்லையா?” என்று (நீங்கள் கேட்டதைப் போன்றே) கேட்டேன்.

அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதையே உங்களுக்கு நான் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா மலைக் குகையில் ஒரு மாதம் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கி, அங்கிருந்த “பத்னுல் வாதீ” பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்தேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு நான் என் முன் புறத்திலும் பின் புறத்திலும் எனக்கு வலப் பக்கத்திலும் எனக்கு இடப் பக்கத்திலும் பார்த்தேன். அங்கு யாரையும் நான் காணவில்லை. பிறகு (மீண்டும்) என்னை அழைக்கும் குரல் கேட்டுப் பார்வையைச் செலுத்தினேன். யாரையும் நான் காணவில்லை. பிறகு (மூன்றாவது முறையாக) என்னை அழைக்கும் குரல் கேட்டு அண்ணாந்து பார்த்தேன். அப்போது அவர் (வானவர் ஜிப்ரீல்) ஆகாயவெளியில் ஓர் ஆசனத்தில் இருந்தார். அப்போது நான் கடுமையாக நடுக்கமுற்றேன்.

உடனே நான் (என் துணைவியார்) கதீஜாவிடம் வந்து, “எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்று கூறினேன். அவ்வாறே (என் வீட்டார்) எனக்குப் போர்த்தி விட்டார்கள். என்மீது தண்ணீரை ஊற்றினார்கள். அப்போது மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ், “போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக” எனும் (74:1-5) வசனங்களை அருளினான்.

Book : 1

(முஸ்லிம்: 257)

وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: سَمِعْتُ يَحْيَى، يَقُولُ

سَأَلْتُ أَبَا سَلَمَةَ أَيُّ الْقُرْآنِ أُنْزِلَ قَبْلُ؟ قَالَ: يَا أَيُّهَا الْمُدَّثِّرُ، فَقُلْتُ: أَوِ اقْرَأْ؟ فَقَالَ: سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ أَيُّ الْقُرْآنِ أُنْزِلَ قَبْلُ؟ قَالَ: يَا أَيُّهَا الْمُدَّثِّرُ، فَقُلْتُ: أَوْ اقْرَأْ؟ قَالَ جَابِرٌ: أُحَدِّثُكُمْ مَا حَدَّثَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” جَاوَرْتُ بِحِرَاءٍ شَهْرًا، فَلَمَّا قَضَيْتُ جِوَارِي نَزَلْتُ فَاسْتَبْطَنْتُ بَطْنَ الْوَادِي، فَنُودِيتُ فَنَظَرْتُ أَمَامِي وَخَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، فَلَمْ أَرَ أَحَدًا، ثُمَّ نُودِيتُ فَنَظَرْتُ فَلَمْ أَرَ أَحَدًا، ثُمَّ نُودِيتُ فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا هُوَ عَلَى الْعَرْشِ فِي الْهَوَاءِ – يَعْنِي جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ – فَأَخَذَتْنِي رَجْفَةٌ شَدِيدَةٌ، فَأَتَيْتُ خَدِيجَةَ، فَقُلْتُ: دَثِّرُونِي، فَدَثَّرُونِي، فَصَبُّوا عَلَيَّ مَاءً، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {يَا أَيُّهَا الْمُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ وَثِيَابَكَ فَطَهِّرْ} [المدثر: 2]


Tamil-257
Shamila-161
JawamiulKalim-237




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.