தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-263

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (வந்து) என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை “ஸம்ஸம்” நீரால் கழுவினார். பிறகு நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தாம்பூலம் ஒன்றைக் கொண்டு வந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார். பிறகு (பழையபடியே) நெஞ்சை மூடிவிட்டார்.

பிறகு என் கையைப் பிடித்து (என்னை அழைத்து)க் கொண்டு விண்ணில் ஏறினார். முதல் வானத்திற்கு நாங்கள் வந்தபோது முதல் வானத்தின் காவலரிடம் ஜிப்ரீல், “திறப்பீராக!” என்று கூறினார். அதற்கு அக்காவலர் “யார் அது?” எனக் கேட்டார். அவர் “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உம்முடன் யாரேனும் வந்திருக்கிறார்களா?” என்று அக்காவலர் கேட்டார். அவர், “என்னுடன் முஹம்மத் (ஸல்) வந்திருக்கிறார்” என்று பதிலளித்தார். “(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று அவர் கேட்க, ஜிப்ரீல் “ஆம்” என்று பதிலளித்தார். (முதல் வானத்தின் கதவை அதன்) காவலர் திறந்தார். நாங்கள் முதல் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர்; இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) “நல்ல இறைத்தூதரே, வருக! நல்ல மகனே, வருக!” என்று அந்த மனிதர் கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், “யார் இவர் ஜிப்ரீலே?” என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர்தாம் (ஆதிமனிதர்) ஆதம் (அலை) அவர்கள். இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் வழித்தோன்றல்கள்; வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கமிருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர் வலப் பக்கம் (சொர்க்கவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது சிரிக்கிறார். இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது அழுகிறார்” என்று பதிலளித்தார்.

பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு இரண்டாம் வானில் ஏறினார். இரண்டாம் வானம் வந்ததும் அதன் காவலரிடம் “திறப்பீராக!” என்று கூறினார். அதன் காவலரும் முதலாம் வானத்தின் காவலர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்த பின்) அவர் கதவைத் திறந்தார்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வானங்களில் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), ஈசா (அலை), மூசா (அலை) மற்றும் இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாக அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர அவர்கள் எங்கெங்கே தங்கியிருந்தார்கள் என்பது பற்றி (என்னிடம்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறவில்லை. ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை முதல் வானத்திலும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்திலும் கண்டதாகக் கூறினார்கள் என அபூதர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஜிப்ரீல் (அலை) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது, “நல்ல இறைத்தூதரும் நல்ல சகோதரருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் (வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு (அவரைக்) கடந்து சென்றபோது, நான் “இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் “இவர்தாம் இத்ரீஸ் (அலை) அவர்கள்” என்று பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் நான் மூசா (அலை) அவர்களையும் கடந்துசென்றேன். அவர்களும் “நல்ல இறைத்தூதரும் நல்ல சகோதரருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்.” என்று (வாழ்த்துக்) கூறினார்கள்.

நான் (ஜிப்ரீலிடம்), “இவர் யார்?” என்று கேட்டேன். ஜிப்ரீல், “இவர்தாம் மூசா” என்று பதிலளித்தார். பிறகு நான் ஈசா (அலை) அவர்களையும் கடந்துசென்றேன். அவர்களும் “நல்ல இறைத்தூதரும் நல்ல சகோதரருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்துக்) கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை), “இவர்தாம் மர்யமின் மைந்தர் ஈசா” என்று பதிலளித்தார். பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்துசென்றேன். அவர்கள், “நல்ல இறைத்தூதரும் நல்ல மகனுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை), “இவர்தாம் இப்ராஹீம்” என்று பதிலளித்தார்.

இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல் அன்சாரி (ரலி) ஆகியோர் அறிவித்துவந்துள்ளதாக இப்னு ஹஸ்ம் (அபூபக்ர் பின் முஹம்மத் -ரஹ்) அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.

இப்னு ஹஸ்ம் (ரஹ்), அனஸ் பின் மாலிக் (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்போது அல்லாஹ் என் சமுதாயத்தார்மீது (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா (அலை) அவர்களைக் கடந்தேன். அப்போது மூசா (அலை) அவர்கள், “உங்கள் சமுதாயத்தார்மீது உங்கள் இறைவன் என்ன கடமையாக்கினான்?” என்று கேட்டார்கள். நான், அவர்கள்மீது (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்” என்று பதிலளித்தேன். “அவ்வாறாயின் உங்கள் இறைவனிடம் திரும்பிச் செ(ன்று குறைக்கும்படி சொ)ல்லுங்கள்! ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அவற்றைத் தாங்க முடியாது” என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச்சென்றேன். (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கேட்டபோது) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிவந்து (அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்துவிட்டான் என்று) தெரிவித்தபோது (மீண்டும்) அவர்கள், “உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள். (இன்னும் சிறிது குறைத்துத் தரும்படி கேளுங்கள்.) ஏனெனில், இதையும் உங்கள் சமுதாயத்தார் தாங்கமாட்டார்கள்” என்று சொன்னார்கள். இவ்வாறாக நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (இறுதியில்), “இவை ஐவேளைத் தொழுகைகள் ஆகும். (நற்பலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். என்னிடம் இந்தச் சொல் (இனி) மாற்றப்படாது” என்று கூறிவிட்டான்.

நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிச்சென்றேன். அவர்கள், “உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்!” என்றார்கள். நான், “என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்” என்று சொன்னேன்.

பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலக எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான) “சித்ரத்துல் முன்தஹா”வுக்குப் போய்ச்சேர்ந்தார்கள். பல வண்ணங்கள் அதைப் போர்த்திக்கொண்டிருந்தன. அவையென்ன என்று எனக்குத் தெரியாது. பிறகு நான் சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டேன். அங்கே முத்தாலான கோபுரங்கள் இருந்தன. சொர்க்கத்தின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது.

Book : 1

(முஸ்லிம்: 263)

وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ أَبُو ذَرٍّ، يُحَدِّثُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

فُرِجَ سَقْفُ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ مِنْ مَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا فَأَفْرَغَهَا فِي صَدْرِي، ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ، فَلَمَّا جِئْنَا السَّمَاءَ الدُّنْيَا قَالَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ لِخَازِنِ السَّمَاءِ الدُّنْيَا: افْتَحْ، قَالَ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا جِبْرِيلُ، قَالَ: هَلْ مَعَكَ أَحَدٌ؟ قَالَ: نَعَمْ، مَعِيَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “، قَالَ: فَأُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، فَفَتَحَ، قَالَ: فَلَمَّا عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا، فَإِذَا رَجُلٌ عَنْ يَمِينِهِ أَسْوِدَةٌ، وَعَنْ يَسَارِهِ أَسْوِدَةٌ، قَالَ: فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى، قَالَ: فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ، وَالِابْنِ الصَّالِحِ “، قَالَ: ” قُلْتُ: يَا جِبْرِيلُ، مَنْ هَذَا؟ قَالَ: هَذَا آدَمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهَذِهِ الْأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ نَسَمُ بَنِيهِ، فَأَهْلُ الْيَمِينِ أَهْلُ الْجَنَّةِ، وَالْأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ، فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى “،

قَالَ: ” ثُمَّ عَرَجَ بِي جِبْرِيلُ حَتَّى أَتَى السَّمَاءَ الثَّانِيَةَ، فَقَالَ لِخَازِنِهَا: افْتَحْ، قَالَ: فَقَالَ لَهُ خَازِنُهَا مِثْلَ مَا قَالَ خَازِنُ السَّمَاءِ الدُّنْيَا: فَفَتَحَ “، فَقَالَ أَنَسُ بْنُ مَالِكٍ، فَذَكَرَ أَنَّهُ وَجَدَ فِي السَّمَاوَاتِ آدَمَ، وَإِدْرِيسَ، وَعِيسَى، وَمُوسَى، وَإِبْرَاهِيمَ صَلَوَاتُ اللهِ عَلَيْهِمْ أَجْمَعِينَ، وَلَمْ يُثْبِتْ كَيْفَ مَنَازِلُهُمْ، غَيْرَ أَنَّهُ ذَكَرَ أَنَّهُ قَدْ وَجَدَ آدَمَ عَلَيْهِ السَّلَامُ فِي السَّمَاءِ الدُّنْيَا، وَإِبْرَاهِيمَ فِي السَّمَاءِ السَّادِسَةِ، قَالَ: فَلَمَّا مَرَّ جِبْرِيلُ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِدْرِيسَ صَلَوَاتُ اللهِ عَلَيْهِ قَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ، وَالْأَخِ الصَّالِحِ، قَالَ: ” ثُمَّ مَرَّ، فَقُلْتُ: مَنْ هَذَا؟ فَقَالَ: هَذَا إِدْرِيسُ، قَالَ: ثُمَّ مَرَرْتُ بِمُوسَى عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ، وَالْأَخِ الصَّالِحِ “، قَالَ: ” قُلْتُ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا مُوسَى “، قَالَ: ” ثُمَّ مَرَرْتُ بِعِيسَى، فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ، وَالْأَخِ الصَّالِحِ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا عِيسَى ابْنُ مَرْيَمَ “، قَالَ: ” ثُمَّ مَرَرْتُ بِإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ، وَالِابْنِ الصَّالِحِ “، قَالَ: ” قُلْتُ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا إِبْرَاهِيمُ “،

قَالَ ابْنُ شِهَابٍ، وَأَخْبَرَنِي ابْنُ حَزْمٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَأَبَا حَبَّةَ الْأَنْصَارِيَّ، يَقُولَانِ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثُمَّ عَرَجَ بِي حَتَّى ظَهَرْتُ لِمُسْتَوًى أَسْمَعُ فِيهِ صَرِيفَ الْأَقْلَامِ»، قَالَ ابْنُ حَزْمٍ، وَأَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَفَرَضَ اللهُ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلَاةً»، قَالَ: فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى أَمُرَّ بِمُوسَى، فَقَالَ مُوسَى عَلَيْهِ السَّلَامُ: مَاذَا فَرَضَ رَبُّكَ عَلَى أُمَّتِكَ؟ قَالَ: قُلْتُ: فَرَضَ عَلَيْهِمْ خَمْسِينَ صَلَاةً، قَالَ لِي مُوسَى عَلَيْهِ السَّلَامُ: فَرَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ، قَالَ: فَرَاجَعْتُ رَبِّي، فَوَضَعَ شَطْرَهَا، قَالَ: فَرَجَعْتُ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَامُ، فَأَخْبَرْتُهُ قَالَ: رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ، قَالَ: فَرَاجَعْتُ رَبِّي، فَقَالَ: هِيَ خَمْسٌ وَهِيَ خَمْسُونَ لَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ، قَالَ: فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَقُلْتُ: قَدْ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي، قَالَ: ثُمَّ انْطَلَقَ بِي جِبْرِيلُ حَتَّى نَأْتِيَ سِدْرَةَ الْمُنْتَهَى فَغَشِيَهَا أَلْوَانٌ لَا أَدْرِي مَا هِيَ؟ قَالَ: ثُمَّ أُدْخِلْتُ الْجَنَّةَ، فَإِذَا فِيهَا جَنَابِذُ اللُّؤْلُؤَ، وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ


Tamil-263
Shamila-163
JawamiulKalim-241,
242




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.