தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2793

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14

ஒருவர் தம் அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக் கொள்வதன் சிறப்பு.

 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரீ ஏழாவது ஆண்டு) கைபர்மீது போர் தொடுத்தார்கள். அப்போது கைபருக்கு அருகில் (ஓரிடத்தில்) நாங்கள் (இறுதி இரவின்) இருட்டிலேயே வைகறைத் தொழுகையைத் தொழுதோம்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிப் பயணமானார்கள். (என் வளர்ப்புத் தந்தை) அபூதல்ஹா (ரலி) அவர்களும் வாகனத்தில் ஏறிப் பயணமானார்கள். நான் அபூதல்ஹா அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்துகொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் சாலையில் (தமது வாகனத்தைச்) செலுத்தினார்கள். அப்போது எனது முழங்கால், (அருகில் சென்றுகொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொடையைத் தொட்டுக் கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வேட்டி தொடையிலிருந்து விலகியது; நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொடையின் வெண்மையைப் பார்த்தேன்.

அந்த (கைபர்) ஊருக்குள் அவர்கள் பிரவேசித்தபோது, “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்); கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தாரின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகவே அமையும்” என்று மூன்று முறை கூறினார்கள். (அந்த ஊர்) மக்கள் தங்கள் அலுவல்களுக்காகப் புறப்பட்டு வந்தபோது (எங்களைக் கண்டதும்), “அல்லாஹ்வின் மீதாணையாக, முஹம்மத் (வந்துவிட்டார்)”என்று கூறினர்.

– (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: எம்முடைய நண்பர்களில் சிலர் “முஹம்மதும் (அவரது) ஐந்து அணிகள் கொண்ட படையும் (வந்துவிட்டனர்) என்று அந்த மக்கள் கூறினர்”என அறிவித்தனர்.-

பிறகு தாக்குதல் மூலம் கைபரை நாங்கள் கைப்பற்றினோம். (போருக்குப் பின்) போர்க் கைதிகள் திரட்டப்பட்டபோது, திஹ்யா (அல்கல்பீ-ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்கு (போர்ச் செல்வமாக)த் தாருங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் சென்று ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள். திஹ்யா (ரலி) அவர்கள், (கணவனை இழந்திருந்த) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களைப் பெற்றுக்கொண்டார்கள்.

இந்நிலையில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! குறைழா, நளீர் குலத்தாரின் தலைவரான ஹுயையின் மகள் ஸஃபிய்யாவை திஹ்யாவுக்கு வழங்கிவிட்டீர்களே! ஸஃபிய்யா, உங்களுக்குத் தவிர வேறெவருக்கும் பொருத்தமாகமாட்டார்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திஹ்யாவையும் அப்பெண்ணையும் அழைத்துவாருங்கள்” என்றார்கள். ஸஃபிய்யாவுடன் திஹ்யா (ரலி) அவர்கள் வந்தார்கள். ஸஃபிய்யாவைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திஹ்யா (ரலி) அவர்களிடம்), “கைதிகளில் இவரல்லாத மற்றோர் அடிமைப் பெண்ணை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து தாமே மணந்துகொண்டார்கள்.

-(இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) அனஸ் (ரலி) அவர்களிடம் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்கள், “அபூ ஹம்ஸா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மணக்கொடையாக (மஹ்ர்) என்ன கொடுத்தார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “அவரையே மணக்கொடையாக ஆக்கினார்கள்; (அதாவது) அவரை விடுதலை செய்து (அதையே மணக்கொடையாக ஆக்கி) அவரை மணந்துகொண்டார்கள்” என்று பதிலளித்தார்கள்.-

பிறகு, நாங்கள் (கைபரிலிருந்து திரும்பி வரும்) வழியில் (“சத்துஸ் ஸஹ்பா” எனுமிடத் தில்) இருந்தபோது, (புது மணப்பெண்) ஸஃபிய்யா (ரலி) அவர்களை (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (அலங்கரித்துத்) தயார்படுத்தி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார்கள். காலையில் புது மாப்பிள்ளையாக இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தம்மிடம் ஏதேனும் (உணவுப் பொருட்கள்) வைத்திருப்பவர், அதை (நம்மிடம்) கொண்டுவாருங்கள்” என்று கூறி, தோல் விரிப்பொன்றையும் விரித்தார்கள். அப்போது (அங்கிருந்தவர்களில்) ஒருவர் பாலாடைக் கட்டியைக் கொண்டுவரலானார்; மற்றொருவர் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வரலானார்; இன்னொருவர் நெய்யைக் கொண்டுவரலானார். அவற்றை ஒன்றாகக் கலந்து “ஹைஸ்” எனும் ஒரு வகைப் பலகாரத்தைத் தயார் செய்தனர். அதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த மணவிருந்தாக (வலீமா) அமைந்தது.

Book : 16

(முஸ்லிம்: 2793)

14 – بَابُ فَضِيلَةِ إِعْتَاقِهِ أَمَتَهُ، ثُمَّ يَتَزَوَّجُهَا

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا خَيْبَرَ، قَالَ: فَصَلَّيْنَا عِنْدَهَا صَلَاةَ الْغَدَاةِ بِغَلَسٍ، فَرَكِبَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَكِبَ أَبُو طَلْحَةَ، وَأَنَا رَدِيفُ أَبِي طَلْحَةَ، فَأَجْرَى نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي زُقَاقِ خَيْبَرَ، وَإِنَّ رُكْبَتِي لَتَمَسُّ فَخِذَ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَانْحَسَرَ الْإِزَارُ عَنْ فَخِذِ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنِّي لَأَرَى بَيَاضَ فَخِذِ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا دَخَلَ الْقَرْيَةَ، قَالَ: ” اللهُ أَكْبَرُ خَرِبَتْ خَيْبَرُ، إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ {فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِينَ} [الصافات: 177] “، قَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ، قَالَ: وَقَدْ خَرَجَ الْقَوْمُ إِلَى أَعْمَالِهِمْ، فَقَالُوا: مُحَمَّدٌ، وَاللهِ – قَالَ عَبْدُ الْعَزِيزِ: وَقَالَ بَعْضُ أَصْحَابِنَا: مُحَمَّدٌ، وَالْخَمِيسُ – قَالَ: وَأَصَبْنَاهَا عَنْوَةً، وَجُمِعَ السَّبْيُ، فَجَاءَهُ دِحْيَةُ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَعْطِنِي جَارِيَةً مِنَ السَّبْيِ. فَقَالَ: «اذْهَبْ فَخُذْ جَارِيَةً»، فَأَخَذَ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ، فَجَاءَ رَجُلٌ إِلَى نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا نَبِيَّ اللهِ، أَعْطَيْتَ دِحْيَةَ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ سَيِّدِ قُرَيْظَةَ وَالنَّضِيرِ؟ مَا تَصْلُحُ إِلَّا لَكَ، قَالَ: «ادْعُوهُ بِهَا»، قَالَ: فَجَاءَ بِهَا، فَلَمَّا نَظَرَ إِلَيْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «خُذْ جَارِيَةً مِنَ السَّبْيِ غَيْرَهَا»، قَالَ: وَأَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، فَقَالَ لَهُ ثَابِتٌ: يَا أَبَا حَمْزَةَ، مَا أَصْدَقَهَا؟ قَالَ: نَفْسَهَا أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، حَتَّى إِذَا كَانَ بِالطَّرِيقِ جَهَّزَتْهَا لَهُ أُمُّ سُلَيْمٍ، فَأَهْدَتْهَا لَهُ مِنَ اللَّيْلِ، فَأَصْبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرُوسًا، فَقَالَ: «مَنْ كَانَ عِنْدَهُ شَيْءٌ فَلْيَجِئْ بِهِ»، قَالَ: وَبَسَطَ نِطَعًا، قَالَ: فَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالْأَقِطِ، وَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالتَّمْرِ، وَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِالسَّمْنِ، فَحَاسُوا حَيْسًا، فَكَانَتْ وَلِيمَةَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Tamil-2793
Shamila-1365
JawamiulKalim-2569




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.