தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2975

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9

கணவன் இறந்து “இத்தா”விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது கட்டாயமாகும்; மற்ற நேரங்களில் மூன்று நாட்கள் தவிர துக்கம் கடைப்பிடிப்பது தடை செய்யப்பட்டதாகும்.

 ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அது அவருடைய தந்தை அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் (சிரியா நாட்டில்) இறந்த நேரம். (மூன்றாவது நாளில்) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மஞ்சள் நிறமுள்ள கலவையான நறுமணப்பொருளை, அல்லது வேறொன்றைக் கொண்டுவருமாறு கூறி, அதை (அங்கிருந்த) ஒரு சிறுமியின் மீது தடவினார்கள். பிறகு தம் இரு கன்னங்களிலும் தடவிக்கொண்டார்கள். பிறகு “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீதிருந்தபடி “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும், இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர” என்று கூறக்கேட்டுள்ளேன். (ஆதலால்தான் இப்போது நறுமணம் பூசினேன்)” என்றார்கள்.

– பின்னர் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அது அவருடைய சகோதரர் இறந்த நேரம். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண்டார்கள்.

பின்னர், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர” என்று கூறக் கேட்டுள்ளேன்”என்றார்கள்.

– என் தாயார் உம்மு சலமா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறக் கேட்டுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் மகளுடைய கணவர் இறந்துவிட்டார். (இத்தாவிலிருக்கும்) என் மகளின் கண்ணில் வலி ஏற்பட்டுவிட்டது. அவளுக்கு நாங்கள் அஞ்சனம் (சுர்மா) தீட்டிவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேண்டாம்” என்று -இரண்டு அல்லது மூன்று முறை- கூறினார்கள். ஒவ்வொரு முறையும் “வேண்டாம்” என்றே கூறினார்கள். பிறகு, “(கணவனை இழந்த ஒரு பெண்ணின்) “இத்தா”க் காலம் நான்கு மாதங்களும் பத்து நாட்களும்தாம். (ஆனால்,)அறியாமைக் காலத்தில் உங்களில் (கணவனை இழந்த) ஒரு பெண் (ஒரு வருடம் இத்தா இருப்பாள்.) ஆண்டின் முடிவில் (“இத்தா” நிறைவுற்றதன் அடையாளமாக) ஒட்டகச்சாணத்தை எறிவாள். (அந்த நிலை இப்போது இல்லையே)” என்றார்கள்.

– ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களிடம், “ஆண்டின் முடிவில் ஒட்டகச் சாணத்தை எறிவாள் என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

(அறியாமைக் காலத்தில்) ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்துகொண்டு, தன் ஆடைகளிலேயே மிகவும் மோசமானதை அணிந்து கொள்வாள். ஒரு வருடம் கழியும்வரை எந்த நறுமணத்தையும் வேறு எதையும் தொடமாட்டாள். (ஓராண்டு கழிந்த) பிறகு கழுதை, ஆடு போன்ற கால்நடை ஒன்று, அல்லது பறவை ஒன்று (அவளிடம்) கொண்டுவரப்படும். அதன் மீது (அழுக்குத் திரண்ட தனது உடலைக்) கடுமையாகத் தேய்த்துக்கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும் எந்த உயிரினமும் (அந்த முடை நாற்றத்தால்) சாகாமல் பிழைத்தல் அரிது. பிறகு அவள் (அந்தக் குடிசையிலிருந்து) வெளியே வருவாள். அப்போது (அவளிடம்) ஒட்டகச் சாணம் கொடுக்கப்படும். உடனே அவள் அதை (தனக்கெதிரே) தூக்கி எறிந்துவிடுவாள். (இதுவே “இத்தா”முடிந்ததற்கு அடையாளமாகும்.) பிறகு அவள் தான் விரும்பிய நறுமணத்தையோ மற்ற பொருட்களையோ பழையபடி உபயோகித்துக்கொள்வாள்.

மேற்கண்ட மூன்று ஹதீஸ்களையும் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களே அறிவித்தார்கள்.

Book : 18

(முஸ்லிம்: 2975)

9 – بَابُ وُجُوبِ الْإِحْدَادِ فِي عِدَّةِ الْوَفَاةِ، وَتَحْرِيمِهِ فِي غَيْرِ ذَلِكَ إِلَّا ثَلَاثَةَ أَيَّامٍ

وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ حُمَيْدِ بْنِ نَافِعٍ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، أَنَّهَا أَخْبَرَتْهُ، هَذِهِ الْأَحَادِيثَ الثَّلَاثَةَ، قَالَ: قَالَتْ زَيْنَبُ

دَخَلْتُ عَلَى أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ تُوُفِّيَ أَبُوهَا أَبُو سُفْيَانَ، فَدَعَتْ أُمُّ حَبِيبَةَ بِطِيبٍ فِيهِ صُفْرَةٌ خَلُوقٌ – أَوْ غَيْرُهُ – فَدَهَنَتْ مِنْهُ جَارِيَةً، ثُمَّ مَسَّتْ بِعَارِضَيْهَا، ثُمَّ قَالَتْ: وَاللهِ مَا لِي بِالطِّيبِ مِنْ حَاجَةٍ، غَيْرَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ عَلَى الْمِنْبَرِ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ تُحِدُّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ، إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»

– قَالَتْ زَيْنَبُ: ثُمَّ دَخَلْتُ عَلَى زَيْنَبَ بِنْتِ جَحْشٍ حِينَ تُوُفِّيَ أَخُوهَا، فَدَعَتْ بِطِيبٍ، فَمَسَّتْ مِنْهُ، ثُمَّ قَالَتْ: وَاللهِ مَا لِي بِالطِّيبِ مِنْ حَاجَةٍ، غَيْرَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ عَلَى الْمِنْبَرِ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ، تُحِدُّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ، إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»

– قَالَتْ زَيْنَبُ: سَمِعْتُ أُمِّي أُمَّ سَلَمَةَ، تَقُولُ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنَّ ابْنَتِي تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا، وَقَدِ اشْتَكَتْ عَيْنُهَا، أَفَنَكْحُلُهَا؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا» – مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، كُلَّ ذَلِكَ يَقُولُ: لَا – ثُمَّ قَالَ: «إِنَّمَا هِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ، وَقَدْ كَانَتْ إِحْدَاكُنَّ فِي الْجَاهِلِيَّةِ تَرْمِي بِالْبَعْرَةِ عَلَى رَأْسِ الْحَوْلِ»

– قَالَ حُمَيْدٌ: فَقُلْتُ لِزَيْنَبَ، وَمَا تَرْمِي بِالْبَعْرَةِ عَلَى رَأْسِ الْحَوْلِ؟ فَقَالَتْ زَيْنَبُ: «كَانَتِ الْمَرْأَةُ إِذَا تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا دَخَلَتْ حِفْشًا، وَلَبِسَتْ شَرَّ ثِيَابِهَا، وَلَمْ تَمَسَّ طِيبًا، وَلَا شَيْئًا حَتَّى تَمُرَّ بِهَا سَنَةٌ، ثُمَّ تُؤْتَى بِدَابَّةٍ – حِمَارٍ، أَوْ شَاةٍ، أَوْ طَيْرٍ – فَتَفْتَضُّ بِهِ، فَقَلَّمَا تَفْتَضُّ بِشَيْءٍ إِلَّا مَاتَ، ثُمَّ تَخْرُجُ، فَتُعْطَى بَعْرَةً، فَتَرْمِي بِهَا، ثُمَّ تُرَاجِعُ بَعْدُ مَا شَاءَتْ مِنْ طِيبٍ أَوْ غَيْرِهِ»


Tamil-2975
Shamila-1486,
1487,
1488,
1489
JawamiulKalim-2738,
2739,
2740




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.