தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-316

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் (“உங்களில் யாரும் அங்கு -நரகத்திற்கு- வராமல் இருக்க முடியாது” எனும் (19:71ஆவது) வசனத்தில் இடம்பெற்றுள்ள) “வருதல்” பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:

மறுமை நாளில் நாம் இப்படி இப்படி -அதாவது எல்லா மக்களுக்கும் மேல் (உயரமான குன்றின் மீது)- வருவோம். அப்போது ஒவ்வொரு சமுதாயத்தாரும் அவரவர் தெய்வச் சிலைகளுடனும் அவர்கள் வழிபட்டுவந்தவையுடனும் அழைக்கப்படுவர். முதலில் முதல் சமுதாயம், அடுத்து அதற்கடுத்த சமுதாயம் (என வரிசை முறையுடன் அழைக்கப்படுவார்கள்). பிறகு நம்மிடம் நம் இறைவன் வந்து “நீங்கள் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?” என்று கேட்பான். அப்போது (ஓரிறை நம்பிக்கையுள்ள) மக்கள், “நாங்கள் எங்கள் இறைவனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று பதிலளிப்பார்கள். உடனே, அவன், “நான்தான் உங்கள் இறைவன்” என்பான். மக்கள் “நாங்கள் உன்னை (நேரடியாகப்) பார்க்காதவரை (உறுதி கொள்ளமாட்டோம்)” என்று கூறுவார்கள். ஆகவே, இறைவன் சிரித்தபடி அவர்களிடையே காட்சியளிப்பான். அவர்களை அழைத்துக்கொண்டு நடப்பான். அவர்களும் அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது அவர்களிலுள்ள நம்பிக்கையாளர் (முஃமின்), நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிய ஒவ்வொருவருக்கும் ஓர் ஒளி வழங்கப்படும். அவர்கள் அந்த ஒளியைப் பின்தொடர்ந்து செல்வார்கள். நரகத்தின் (மேல் அமைக்கப்பட்டிருக்கும்) பாலத்தின் மீது கொக்கிகளும் முட்களும் இருக்கும். அவை அல்லாஹ் நாடிய சிலரை (அவரவர் தீமைகளுக்கேற்ப) கவ்விப் பிடிக்கும். பிறகு நயவஞ்சகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒளி அணைக்கப்பட்டுவிடும். அதன் பிறகு (அந்தப் பாலத்தைக் கடந்து) நம்பிக்கையாளர்கள் மட்டும் தப்பிச்செல்வார்கள். (அவர்களில்) தப்பிச்செல்லும் முதல் கூட்டத்தாரின் முகங்கள் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்று ஒளிரும்; அவர்கள் எழுபதாயிரம் பேர் இருப்பர்; அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படாது. பிறகு அவர்களைத் தொடர்ந்துவரும் கூட்டத்தார் வானத்துத் தாரகைகள் போன்று ஜொலிப்பர். இவ்வாறே அடுத்தடுத்து வருபவர்களும் (அவர்களது நன்மைகளுக்கேற்ப இலங்குவர்).

பிறகு பரிந்துரை (ஷஃபாஅத்) நடைபெறும். “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறிய எவரது உள்ளத்தில் வாற்கோதுமையளவு நன்மை உள்ளதோ அவர் நரகத்திலிருந்து வெளியேறும்வரை (பரிந்துரைக்கு அனுமதி பெற்றவர்கள்) பரிந்துரைப்பார்கள். அ(ப்போது நரகத்திலிருந்து வெளியேற்றப்படுப)வர்கள் சொர்க்கத்தின் முற்றத்தில் வைக்கப்படுவார்கள். அவர்கள்மீது சொர்க்கவாசிகள் (ஜீவ) நீரைத் தெளிப்பார்கள். முடிவில் வெள்ளத்தில் வரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (பொலிவுடன்) அவர்கள் எழுவார்கள். அத்தகையவர் மீதிருந்த தீக்காயங்கள் மறைந்துவிடும். பிறகு அவர் தமக்கு இந்த உலகமும் இன்னும் அதைப் போன்று பத்து மடங்கும் (சொர்க்கத்தில் தமக்குரியதாக) ஆக்கப்படும்வரை வேண்டிக்கொண்டேயிருப்பார்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 1

(முஸ்லிம்: 316)

حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ سَعِيدٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، كِلَاهُمَا عَنْ رَوْحٍ، قَالَ عُبَيْدُ اللهِ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ الْقَيْسِيُّ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ

أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يُسْأَلُ عَنِ الْوُرُودِ، فَقَالَ: نَجِيءُ نَحْنُ يَوْمَ الْقِيَامَةِ عَنْ كَذَا وَكَذَا، انْظُرْ أَيْ ذَلِكَ فَوْقَ النَّاسِ؟ قَالَ: فَتُدْعَى الْأُمَمُ بِأَوْثَانِهَا، وَمَا كَانَتْ تَعْبُدُ، الْأَوَّلُ فَالْأَوَّلُ، ثُمَّ يَأْتِينَا رَبُّنَا بَعْدَ ذَلِكَ، فَيَقُولُ: مَنْ تَنْظُرُونَ؟ فَيَقُولُونَ: نَنْظُرُ رَبَّنَا، فَيَقُولُ: أَنَا رَبُّكُمْ، فَيَقُولُونَ: حَتَّى نَنْظُرَ إِلَيْكَ، فَيَتَجَلَّى لَهُمْ يَضْحَكُ، قَالَ: فَيَنْطَلِقُ بِهِمْ وَيَتَّبِعُونَهُ، وَيُعْطَى كُلُّ إِنْسَانٍ مِنْهُمْ مُنَافِقًا، أَوْ مُؤْمِنًا نُورًا، ثُمَّ يَتَّبِعُونَهُ وَعَلَى جِسْرِ جَهَنَّمَ كَلَالِيبُ وَحَسَكٌ، تَأْخُذُ مَنْ شَاءَ اللهُ، ثُمَّ يُطْفَأُ نُورُ الْمُنَافِقِينَ، ثُمَّ يَنْجُو الْمُؤْمِنُونَ، فَتَنْجُو أَوَّلُ زُمْرَةٍ وُجُوهُهُمْ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ سَبْعُونَ أَلْفًا لَا يُحَاسَبُونَ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ كَأَضْوَأِ نَجْمٍ فِي السَّمَاءِ، ثُمَّ كَذَلِكَ ثُمَّ تَحِلُّ الشَّفَاعَةُ، وَيَشْفَعُونَ حَتَّى يَخْرُجَ مِنَ النَّارِ مِنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ شَعِيرَةً، فَيُجْعَلُونَ بِفِنَاءِ الْجَنَّةِ، وَيَجْعَلُ أَهْلُ الْجَنَّةِ يَرُشُّونَ عَلَيْهِمُ الْمَاءَ حَتَّى يَنْبُتُوا نَبَاتَ الشَّيْءِ فِي السَّيْلِ، وَيَذْهَبُ حُرَاقُهُ، ثُمَّ يَسْأَلُ حَتَّى تُجْعَلَ لَهُ الدُّنْيَا وَعَشَرَةُ أَمْثَالِهَا مَعَهَا


Tamil-316
Shamila-191
JawamiulKalim-283




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.