அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் எனப்படும் அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் மானக்கேடான ஒரு செயலைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குத் தண்டனையை நிலைநாட்டுங்கள்”என்று கூறினார். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலமுறை திருப்பி அனுப்பினார்கள்.
பிறகு அவருடைய குலத்தாரிடம் விசாரித்தார்கள். அதற்கு அம்மக்கள், “அவரைப் பற்றித் தவறாக எதையும் நாங்கள் அறியவில்லை. ஆயினும், அவர் ஒரு செயலைச் செய்துவிட்டு, “தம்மீது தண்டனை நிறைவேற்றப்பட்டால் தவிர அக்குற்றத்திலிருந்து தம்மால் வெளியேற முடியாது” என்று கருதுகிறார்” என்று கூறினர்.
பிறகு மாஇஸ் (ரலி) அவர்கள் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவருக்குக் கல்லெறி தண்டனையை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நாங்கள் அவரை “பகீஉல் ஃகர்கத்” பொது மையவாடிக்கு அழைத்துச் சென்றோம். (கல்லெறியும்போது தப்பி ஓடாமலிருப்பதற்காக) அவரை நாங்கள் கட்டி வைக்கவுமில்லை. (அவரை நிறுத்துவதற்காக) நாங்கள் குழியும் தோண்டவில்லை.
அவரை எலும்பு, மண் கட்டி, சுட்ட செங்கல் ஆகியவற்றால் அடித்தோம். அடி தாங்க முடியாமல் அவர் ஓடினார். அவருக்குப் பின்னால் நாங்களும் ஓடினோம். இறுதியில் அவர் (பாறைகள் நிறைந்த) “அல்ஹர்ரா”ப் பகுதியின் முனைக்குச் சென்று எங்களுக்காக நிமிர்ந்து நின்றார். நாங்கள் அவர்மீது “ஹர்ரா”வின் பெருங்கற்களை எறிந்தோம். அவர் அமைதியாகிவிட்டார்.
பின்னர் அன்று மாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடையே) நின்று உரையாற்றினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போருக்காக நாம் புறப்படும்போதெல்லாம் சிலர் (போருக்குச் செல்லாமல்) நம்முடைய குடும்பத்தாரிடையே தங்கிவிடுகின்றனர். அவர்கள் மலை ஆடு (புணரும்போது) சப்தமிடுவதைப் போன்று சப்தமிட்டுக்கொண்டு இருந்துவிடுகிறார்கள். இத்தகைய (இழி)செயலை செய்யும் மனிதர் எவரேனும் என்னிடம் கொண்டுவரப்பட்டால் அவருக்குத் தக்க தண்டனை வழங்குவது என்மீது கடமையாகும்” என்று கூறினார்கள்.
(அன்றைய நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாஇஸ் (ரலி) அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரவுமில்லை; (தண்டனையை நிறைவேற்றிய பின் அவரை) இழித்துப் பேசவுமில்லை.
Book : 29
(முஸ்லிம்: 3497)حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا دَاوُدُ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ
أَنَّ رَجُلًا مِنْ أَسْلَمَ، يُقَالُ لَهُ مَاعِزُ بْنُ مَالِكٍ، أَتَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أَصَبْتُ فَاحِشَةً، فَأَقِمْهُ عَلَيَّ، فَرَدَّهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِرَارًا، قَالَ: ثُمَّ سَأَلَ قَوْمَهُ، فَقَالُوا: مَا نَعْلَمُ بِهِ بَأْسًا إِلَّا أَنَّهُ أَصَابَ شَيْئًا يَرَى أَنَّهُ لَا يُخْرِجُهُ مِنْهُ إِلَّا أَنْ يُقَامَ فِيهِ الْحَدُّ، قَالَ: فَرَجَعَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَنَا أَنْ نَرْجُمَهُ، قَالَ: فَانْطَلَقْنَا بِهِ إِلَى بَقِيعِ الْغَرْقَدِ، قَالَ: فَمَا أَوْثَقْنَاهُ، وَلَا حَفَرْنَا لَهُ، قَالَ: فَرَمَيْنَاهُ بِالْعَظْمِ، وَالْمَدَرِ، وَالْخَزَفِ، قَالَ: فَاشْتَدَّ، وَاشْتَدَدْنَا خَلْفَهُ حَتَّى أَتَى عُرْضَ الْحَرَّةِ، فَانْتَصَبَ لَنَا فَرَمَيْنَاهُ بِجَلَامِيدِ الْحَرَّةِ – يَعْنِي الْحِجَارَةَ – حَتَّى سَكَتَ، قَالَ: ثُمَّ قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا مِنَ الْعَشِيِّ، فَقَالَ: «أَوَ كُلَّمَا انْطَلَقْنَا غُزَاةً فِي سَبِيلِ اللهِ تَخَلَّفَ رَجُلٌ فِي عِيَالِنَا، لَهُ نَبِيبٌ كَنَبِيبِ التَّيْسِ، عَلَيَّ أَنْ لَا أُوتَى بِرَجُلٍ فَعَلَ ذَلِكَ إِلَّا نَكَّلْتُ بِهِ»، قَالَ: فَمَا اسْتَغْفَرَ لَهُ وَلَا سَبَّهُ
Tamil-3497
Shamila-1694
JawamiulKalim-3212
சமீப விமர்சனங்கள்