தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3605

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் என் வலப் பக்கமும் இடப்பக்கமும் பார்த்தேன். என்னருகே (இருபக்கங்களிலும்) இளம் வயது அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றுகொண்டிருந்தனர்.”(இவர்களுக்கிடையே வந்து நிற்கிறோமே!) இவர்களைவிட வலுவானவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா!”என்று நான் எண்ணினேன்.

அப்போது அவர்களில் ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தி “என் தந்தையின் சகோதரரே! (என மரியாதை நிமித்தம் அழைத்து) நீங்கள் அபூஜஹ்லை அறிவீர்களா?” என்று கேட்டார்.

நான், “ஆம் (அறிவேன்). உமக்கு அவனிடம் என்ன வேலை, என் சகோதரர் மகனே!” என்று கேட்டேன்.

அதற்கு அந்த இளவல், “அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஏசுகிறான் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் அவனைப் பார்த்தால், எங்களில் ஒருவர் இறக்கும்வரை அவனது உடலைவிட்டு எனது உடல் பிரியாது (ஒன்று நான், அல்லது அவன் மரணிக்கும்வரை அவனுடன் போரிட்டுக்கொண்டேயிருப்பேன்)” என்று கூறினார்.

இதைக் கேட்டு நான் வியந்துபோனேன். அப்போது மற்றோர் இளவலும் என்னைத் தொட்டுணர்த்தி முதலாமவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம்தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூஜஹ்ல் மக்களிடையே (பம்பரமாகச்) சுற்றி வருவதைக் கண்டு, “அதோ தெரிகிறானே? அவன்தான் நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி” என்று கூறினேன். உடனே அவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அவனை நோக்கிச் சென்று தம்மிடமிருந்த வாட்களால் அவனை வெட்டிக் கொன்றார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூஜஹ்லைக் கொன்று விட்ட செய்தியைத் தெரிவித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யார் அவனைக் கொன்றார்?” என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் “நான்தான் கொன்றேன்” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் வாட்க(ளில் படிந்த இரத்தக் கறைக)ளைத் துடைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் “இல்லை” என்று பதிலுரைத்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விரு வாட்களையும் கூர்ந்து பார்த்துவிட்டு, “நீங்கள் இருவருமே அவனை வெட்டிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள்.

(முதலில் வெட்டியவர் என்ற அடிப்படையில்) “முஆத் பின் அம்ர் பின் அல்ஜமூஹுக்கே அபூஜஹ்லின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் (சலப்) உரியவை” என்று தீர்ப்பளித்தார்கள். முஆத் பின் அம்ர் பின் அல்ஜமூஹ் (ரலி) மற்றும் முஆத் பின் அஃப்ரா (ரலி) ஆகிய இருவருமே அந்த இளவல்கள் ஆவர்.

Book : 32

(முஸ்லிம்: 3605)

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ، عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ قَالَ

بَيْنَا أَنَا وَاقِفٌ فِي الصَّفِّ يَوْمَ بَدْرٍ، نَظَرْتُ عَنْ يَمِينِي وَشِمَالِي، فَإِذَا أَنَا بَيْنَ غُلَامَيْنِ مِنَ الْأَنْصَارِ حَدِيثَةٍ أَسْنَانُهُمَا، تَمَنَّيْتُ لَوْ كُنْتُ بَيْنَ أَضْلَعَ مِنْهُمَا، فَغَمَزَنِي أَحَدُهُمَا، فَقَالَ: يَا عَمِّ، هَلْ تَعْرِفُ أَبَا جَهْلٍ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ، وَمَا حَاجَتُكَ إِلَيْهِ يَا ابْنَ أَخِي؟ قَالَ: أُخْبِرْتُ أَنَّهُ يَسُبُّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَئِنْ رَأَيْتُهُ لَا يُفَارِقُ سَوَادِي سَوَادَهُ حَتَّى يَمُوتَ الْأَعْجَلُ مِنَّا، قَالَ: فَتَعَجَّبْتُ لِذَلِكَ، فَغَمَزَنِي الْآخَرُ، فَقَالَ: مِثْلَهَا، قَالَ: فَلَمْ أَنْشَبْ أَنْ نَظَرْتُ إِلَى أَبِي جَهْلٍ يَزُولُ فِي النَّاسِ، فَقُلْتُ: أَلَا تَرَيَانِ؟ هَذَا صَاحِبُكُمَا الَّذِي تَسْأَلَانِ عَنْهُ، قَالَ: فَابْتَدَرَاهُ فَضَرَبَاهُ بِسَيْفَيْهِمَا حَتَّى قَتَلَاهُ، ثُمَّ انْصَرَفَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَاهُ، فَقَالَ: «أَيُّكُمَا قَتَلَهُ؟» فَقَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا: أَنَا قَتَلْتُ، فَقَالَ: «هَلْ مَسَحْتُمَا سَيْفَيْكُمَا؟» قَالَا: لَا، فَنَظَرَ فِي السَّيْفَيْنِ، فَقَالَ: «كِلَاكُمَا قَتَلَهُ»، وَقَضَى بِسَلَبِهِ لِمُعَاذِ بْنِ عَمْرِو بْنِ الْجَمُوحِ، وَالرَّجُلَانِ مُعَاذُ بْنُ عَمْرِو بْنِ الْجَمُوحِ، وَمُعَاذُ بْنُ عَفْرَاءَ


Tamil-3605
Shamila-1752
JawamiulKalim-3302




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.