தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3694

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45

“தூ கரத்” உள்ளிட்ட போர்கள்.

 சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுப்பதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். “தூ கரத்” எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்துகொண்டிருந்தன.

அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுடைய ஓர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பால் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டன” என்று கூறினார். நான், “அவற்றை யார் பிடித்துச் சென்றனர்?” என்று கேட்டேன். அதற்கு அந்த அடிமை, “ஃகத்ஃபான் குலத்தார்” என்று பதிலளித்தார்.

உடனே நான் உரக்கச் சப்தமிட்டு “உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!” (யா ஸபாஹா!) என்று மதீனாவின் இரு மலைகளுக்கிடையிலிருந்த அனைவருக்கும் கேட்கும்படி மூன்று முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று “தூ கரத்” எனும் இடத்தில் அவர்களை அடைந்தேன். அவர்கள் (அங்கிருந்த நீர்நிலையில்) தண்ணீர் புகட்டத் தலைப்பட்டிருந்தனர்.

“அக்வஇன் மகன் நான்! இன்று அற்பர்கள் (அழியும்) நாள்”

என்று பாடியபடி கூறிக்கொண்டே அவர்கள்மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும், நான் “ரஜ்ஸ்” எனும் யாப்பு வகைக் கவிதையைப் பாடிக்கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன்.

(அவர்களை நான் விரட்டிச் சென்றபோது) அவர்கள் விட்டுவிட்டுப்போன முப்பது சால்வை களை நான் எடுத்துக்கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு) வந்து சேர்ந்தனர்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கூட்டத்தார் தாகத்துடன் இருந்தபோதும் அவர்களை தண்ணீர் குடிக்கவிடாமல் நான் தடுத்துவிட்டேன். எனவே, (அவர்கள் ஓட்டிச்சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க) அவர்களை நோக்கி ஒரு படைப்பிரிவை இப்போதே அனுப்புங்கள்” என்று கூறினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அக்வஉ உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்துவிட்டாய். ஆகவே, மென்மையாக நடந்துகொள்” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவுக்குத்) திரும்பிவந்தோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழையும் வரையில் என்னைத் தமக்குப் பின்னே தமது ஒட்டகத்தின் மீது அமர்த்திக்கொண்டார்கள்.

Book : 32

(முஸ்லிம்: 3694)

45 – بَابُ غَزْوَةِ ذِي قَرَدٍ وَغَيْرِهَا

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ: سَمِعْتُ سَلَمَةَ بْنَ الْأَكْوَعِ، يَقُولُ

خَرَجْتُ قَبْلَ أَنْ يُؤَذَّنَ بِالْأُولَى, وَكَانَتْ لِقَاحُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْعَى بِذِي قَرَدٍ, قَالَ : فَلَقِيَنِي غُلَامٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ, فَقَالَ : أُخِذَتْ لِقَاحُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ . فَقُلْتُ : مَنْ أَخَذَهَا ؟ قَالَ : غَطَفَانُ . قَالَ : فَصَرَخْتُ ثَلَاثَ صَرَخَاتٍ : يَا صَبَاحَاهْ, قَالَ : فَأَسْمَعْتُ مَا بَيْنَ لَابَتَيِ الْمَدِينَةِ , ثُمَّ انْدَفَعْتُ عَلَى وَجْهِي حَتَّى أَدْرَكْتُهُمْ بِذِي قَرَدٍ, وَقَدْ أَخَذُوا يَسْقُونَ مِنَ الْمَاءِ, فَجَعَلْتُ أَرْمِيهِمْ بِنَبْلِي, وَكُنْتُ رَامِيًا, وَأَقُولُ :

أَنَا ابْنُ الْأَكْوَعِ وَالْيَوْمُ يَوْمُ الرُّضَّعِ

فَأَرْتَجِزُ حَتَّى اسْتَنْقَذْتُ اللِّقَاحَ مِنْهُمْ, وَاسْتَلَبْتُ مِنْهُمْ ثَلَاثِينَ بُرْدَةً . قَالَ : وَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ, فَقُلْتُ : يَا نَبِيَّ اللهِ, إِنِّي قَدْ حَمَيْتُ الْقَوْمَ الْمَاءَ وَهُمْ عِطَاشٌ, فَابْعَثْ إِلَيْهِمُ السَّاعَةَ, فَقَالَ : يَا ابْنَ الْأَكْوَعِ مَلَكْتَ فَأَسْجِحْ قَالَ : ثُمَّ رَجَعْنَا, وَيُرْدِفُنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَاقَتِهِ حَتَّى دَخَلْنَا الْمَدِينَةَ .


Tamil-3694
Shamila-1806
JawamiulKalim-3377




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.