பாடம் : 96
(மறுமை நாளில்) ஆதம் (அலை) அவர்களிடம், “ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் நரகத்திற்குச் செல்லவிருக்கும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது பேரை நீங்கள் தனியாகப் பிரித்திடுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் (மறுமை நாளில் ஆதிமனிதரை நோக்கி), “ஆதமே!” என்பான். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “(இறைவனின் அழைப்பை ஏற்று, இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்” என்று கூறுவார்கள். அப்போது இறைவன், “(உங்கள் வழித்தோன்றல்களில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்” என்று சொல்வான். அதற்கு அவர்கள், “எத்தனை நரகவாசிகளை (அவ்வாறு பிரிக்க வேண்டும்)?” என்று கேட்பார்கள். அதற்கு இறைவன், “ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை(த் தனியாகப் பிரித்திடுங்கள்)” என்று பதிலளிப்பான். அப்போது(ள்ள பயங்கரச் சூழ்நிலையில்) பாலகன்கூட நரைத்து (மூப்படைந்து)விடுகின்ற, கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருவரும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்துவிடுகின்ற நேரம் இதுதான். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது, மக்களுக்கு மிகவும் சிரமமானதாக இருந்தது. எனவே அவர்கள், “(ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும்) அந்த ஒரு நபர் எங்களில் யார்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பயப்படாதீர்கள்!) நற்செய்தி பெறுங்கள். யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தாரில் ஓராயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (நரகத்திற்குச் செல்ல தனியாகப் பிரிக்கப்பட்டோரில்) இருப்பார்” என்று கூறிவிட்டுப் பின்னர், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் பேராவல் கொள்கிறேன்” என்று கூறினார்கள். உடனே நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) அல்லாஹ்வைப் புகழ்ந்து, “அல்லாஹ் மிகப் பெரியவன்” (அல்லாஹு அக்பர்) என்று முழங்கினோம். பின்னர், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, “அல்லாஹ் மிகப் பெரியவன்” (அல்லாஹு அக்பர்) என்று முழக்கமிட்டோம். பின்னர், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் பேராவல் கொள்கிறேன். மற்றச் சமுதாயங்களுடன் ஒப்பிடும்போது உங்கள் (எண்ணிக்கையின்) நிலை, “கறுப்புக் காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்” அல்லது “கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்றுதான்” என்று கூறினார்கள்.
Book : 1
(முஸ்லிம்: 379)96 – بَابُ قَوْلِهِ يَقُولُ اللهُ لِآدَمَ أَخْرِجْ بَعْثَ النَّارِ مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَمِائَةٍ وَتِسَعَةٍ وَتِسْعِينَ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ الْعَبْسِيُّ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ
يَا آدَمُ فَيَقُولُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ، قَالَ يَقُولُ: أَخْرِجْ بَعْثَ النَّارِ قَالَ: وَمَا بَعْثُ النَّارِ قَالَ: مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَمِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ قَالَ: فَذَاكَ حِينَ يَشِيبُ الصَّغِيرُ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللهِ شَدِيدٌ ” قَالَ: فَاشْتَدَّ ذَلِكَ عَلَيْهِمْ قَالُوا: يَا رَسُولَ اللهِ أَيُّنَا ذَلِكَ الرَّجُلُ؟ فَقَالَ: «أَبْشِرُوا فَإِنَّ مِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ أَلْفًا، وَمِنْكُمْ رَجُلٌ» قَالَ: ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ» فَحَمِدْنَا اللهَ وَكَبَّرْنَا. ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ» فَحَمِدْنَا اللهَ وَكَبَّرْنَا. ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ، إِنَّ مَثَلَكُمْ فِي الْأُمَمِ كَمَثَلِ الشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ، أَوْ كَالرَّقْمَةِ فِي ذِرَاعِ الْحِمَارِ»
Tamil-379
Shamila-222
JawamiulKalim-332
சமீப விமர்சனங்கள்