தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3858

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற) அபூ சுஃப்யானின் வணிகக் குழு என்ன ஆயிற்று எனக் கண்டறிய புசைசா பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்களை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்றுவிட்டு (திரும்பி) வந்தபோது, என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் வீட்டில் இருக்கவில்லை. (“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரையும் தவிர” என்று கூறினார்களா என எனக்குத் தெரியவில்லை என்று ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் உள்ளது.) அவர் வந்து (அபூசுஃப்யானின் வணிகக் குழு மக்காவை நோக்கிப் புறப்பட்டுவிட்டது” என்ற) தகவலைச் சொன்னார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து (எங்களிடம்) பேசினார்கள். “நமக்கு ஒரு முக்கிய அலுவல் உண்டு. யாரிடம் வாகனம் (ஒட்டகம்) உள்ளதோ அவர் நம்முடன் பயணமாகட்டும்” என்று சொன்னார்கள். உடனே சிலர் மதீனாவின் மேட்டுப் பகுதி கிராமத்துக்குச் சென்று தம் ஒட்டகங்களுடன் வர அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரலாயினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, (இங்கு) யாரிடம் ஒட்டகம் தயாராக உள்ளதோ அவரைத் தவிர (வேறெவரும் புறப்பட வேண்டாம்)” என்று கூறிவிட்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (சில) நபித்தோழர்களும் புறப்பட்டனர். அவர்கள் இணைவைப்பாளர்களை முந்திக்கொண்டு “பத்ர்” வந்துசேர்ந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நான் முன்னிலை வகிக்காமல் (என்னிடம் கேட்காமல்) உங்களில் யாரும் எதற்காகவும் முந்த வேண்டாம்” என்று கூறினார்கள்.

இணைவைப்பாளர்கள் நெருங்கிவந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கு எழு(ந்து தயாராகு)ங்கள்” என்று கூறினார்கள். உடனே உமைர் பின் அல்ஹுமாம் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், “வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கமா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்” என்று பதிலுரைக்க, “ஆஹா, ஆஹா” என்று உமைர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆஹா, ஆஹா என்று நீர் கூறக் காரணமென்ன?” என்று கேட்டார்கள். உமைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! வேறொன்றுமில்லை, அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகளில் நானும் ஒருவனாக இருக்கவேண்டும் என்ற ஆசைதான் (அவ்வாறு நான் சொல்லக் காரணம்)” என்றார்.

அதற்கு “சொர்க்கவாசிகளில் நீரும் ஒருவர்தாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமைர் (ரலி) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து பேரீச்சம் பழங்களை எடுத்து, அவற்றில் சிலவற்றை உண்ணத் தொடங்கினார்கள். பிறகு, “இந்தப் பேரீச்சம் பழங்களை உண்டு முடிக்கும்வரை நான் உயிர் வாழ்ந்தால் அது ஒரு நீண்ட நெடிய வாழ்க்கையாகிவிடுமே!” என்று கூறியபடி தம்மிடமிருந்த அந்தப் பேரீச்சம் பழங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, எதிரி(களை நோக்கிச் சென்று அவர்)களுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 33

(முஸ்லிம்: 3858)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ النَّضْرِ بْنِ أَبِي النَّضْرِ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللهِ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ، قَالُوا: حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا سُلَيْمَانُ وَهُوَ ابْنُ الْمُغِيرَةِ ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ

بَعَثَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُسَيْسَةَ عَيْنًا يَنْظُرُ مَا صَنَعَتْ عِيرُ أَبِي سُفْيَانَ، فَجَاءَ وَمَا فِي الْبَيْتِ أَحَدٌ غَيْرِي، وَغَيْرُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَا أَدْرِي مَا اسْتَثْنَى بَعْضَ نِسَائِهِ، قَالَ: فَحَدَّثَهُ الْحَدِيثَ، قَالَ: فَخَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَكَلَّمَ، فَقَالَ: «إِنَّ لَنَا طَلِبَةً، فَمَنْ كَانَ ظَهْرُهُ حَاضِرًا فَلْيَرْكَبْ مَعَنَا»، فَجَعَلَ رِجَالٌ يَسْتَأْذِنُونَهُ فِي ظُهْرَانِهِمْ فِي عُلْوِ الْمَدِينَةِ، فَقَالَ: «لَا، إِلَّا مَنْ كَانَ ظَهْرُهُ حَاضِرًا»، فَانْطَلَقَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ حَتَّى سَبَقُوا الْمُشْرِكِينَ إِلَى بَدْرٍ، وَجَاءَ الْمُشْرِكُونَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُقَدِّمَنَّ أَحَدٌ مِنْكُمْ إِلَى شَيْءٍ حَتَّى أَكُونَ أَنَا دُونَهُ»، فَدَنَا الْمُشْرِكُونَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُومُوا إِلَى جَنَّةٍ عَرْضُهَا السَّمَوَاتُ وَالْأَرْضُ»، قَالَ: – يَقُولُ عُمَيْرُ بْنُ الْحُمَامِ الْأَنْصَارِيُّ: – يَا رَسُولَ اللهِ، جَنَّةٌ عَرْضُهَا السَّمَوَاتُ وَالْأَرْضُ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: بَخٍ بَخٍ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يَحْمِلُكَ عَلَى قَوْلِكَ بَخٍ بَخٍ؟» قَالَ: لَا وَاللهِ يَا رَسُولَ اللهِ، إِلَّا رَجَاءَةَ أَنْ أَكُونَ مِنْ أَهْلِهَا، قَالَ: «فَإِنَّكَ مِنْ أَهْلِهَا»، فَأَخْرَجَ تَمَرَاتٍ مِنْ قَرَنِهِ، فَجَعَلَ يَأْكُلُ مِنْهُنَّ، ثُمَّ قَالَ: لَئِنْ أَنَا حَيِيتُ حَتَّى آكُلَ تَمَرَاتِي هَذِهِ إِنَّهَا لَحَيَاةٌ طَوِيلَةٌ، قَالَ: فَرَمَى بِمَا كَانَ مَعَهُ مِنَ التَّمْرِ، ثُمَّ قَاتَلَهُمْ حَتَّى قُتِلَ


Tamil-3858
Shamila-1901
JawamiulKalim-3527




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.