அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையும் அதாஉ (ரஹ்) அவர்களின் பிள்ளைக்குத் தாய்மாமாவுமான அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா (ரலி) அவர்கள் என்னை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் அனுப்பி, “ஆடைகளில் (சிறிது) பட்டு வேலைப்பாடுகள் உள்ளதையும், சிவப்பு நிற மென்பட்டுத் திண்டுகளை(ப் பயன்படுத்துவதை)யும், ரஜப் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதையும், தாங்கள் தடை செய்துவருவதாக எனக்குச் செய்தி எட்டியுள்ளதே (அது உண்மையா?)” என்று கேட்கச் சொன்னார்கள்.
அதற்கு என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “ரஜப் மாதத்தில் நோன்பு நோற்பதைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டதைப் பொறுத்தவரையில், (நீங்கள் கேள்விப்பட்டது பொய்யாகும்.) எல்லாக் காலங்களிலும் நோன்பு நோற்கும் ஒருவ(னான என்)னைப் பற்றி எப்படி (இதைச் சொல்ல முடியும்)?
ஆடைகளில் பட்டு வேலைப்பாடுகள் உள்ளதைப் பொறுத்தவரையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் “(மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்தாம் (இம்மையில்) பட்டாடை அணிவார்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். பட்டு வேலைப்பாடுகள் உள்ளதும் இத்தடைக்குள் அடங்கும் என்று நான் அஞ்சினேன்.
சிவப்பு நிறத்தில் அமைந்த மென்பட்டுத் திண்டைப் பொறுத்தவரையில், இதுதான் அப்துல்லாஹ் பின் உமரின் திண்டாகும். இதுவும் சிவப்பு நிறத்தில் அமைந்த திண்டுதான்” என்று கூறினார்கள்.
நான் அஸ்மா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதைத் தெரிவித்தேன். அப்போது அஸ்மா (ரலி) அவர்கள், “இதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நீளங்கியாகும்” எனக் கூறி, கோடுபோட்ட பாரசீக (மன்னர்கள் அணியும்) பட்டு நீளங்கி ஒன்றை வெளியே எடுத்தார்கள். அதன் கழுத்துப் பகுதியில் அலங்காரப் பட்டு வேலைப்பாடு இருந்தது. அதன் முன், பின் திறப்புகள் அலங்காரப் பட்டினால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அஸ்மா (ரலி) அவர்கள், “இது, ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் இறக்கும்வரை இருந்துவந்தது. அவர்கள் இறந்த பின்னர் அதை நான் எடுத்துவைத்துக்கொண்டேன். இதை நபி (ஸல்) அவர்கள் அணிந்துவந்தார்கள். பின்னர் நாங்கள் (அருள்வளம் கருதி) இதைத் தண்ணீரில் கழுவி, அதைக்கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவருகிறோம்” என்று கூறினார்கள்.
Book : 37
(முஸ்லிம்: 4201)حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَبْدِ اللهِ، مَوْلَى أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، وَكَانَ خَالَ وَلَدِ عَطَاءٍ، قَالَ
أَرْسَلَتْنِي أَسْمَاءُ إِلَى عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، فَقَالَتْ: بَلَغَنِي أَنَّكَ تُحَرِّمُ أَشْيَاءَ ثَلَاثَةً: الْعَلَمَ فِي الثَّوْبِ، وَمِيثَرَةَ الْأُرْجُوَانِ، وَصَوْمَ رَجَبٍ كُلِّهِ، فَقَالَ لِي عَبْدُ اللهِ: أَمَّا مَا ذَكَرْتَ مِنْ رَجَبٍ فَكَيْفَ بِمَنْ يَصُومُ الْأَبَدَ؟ وَأَمَّا مَا ذَكَرْتَ مِنَ الْعَلَمِ فِي الثَّوْبِ، فَإِنِّي سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّمَا يَلْبَسُ الْحَرِيرَ مَنْ لَا خَلَاقَ لَهُ»، فَخِفْتُ أَنْ يَكُونَ الْعَلَمُ مِنْهُ، وَأَمَّا مِيثَرَةُ الْأُرْجُوَانِ، فَهَذِهِ مِيثَرَةُ عَبْدِ اللهِ، فَإِذَا هِيَ أُرْجُوَانٌ، فَرَجَعْتُ إِلَى أَسْمَاءَ فَخَبَّرْتُهَا، فَقَالَتْ: هَذِهِ جُبَّةُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْرَجَتْ إِلَيَّ جُبَّةَ طَيَالِسَةٍ كِسْرَوَانِيَّةٍ لَهَا لِبْنَةُ دِيبَاجٍ، وَفَرْجَيْهَا مَكْفُوفَيْنِ بِالدِّيبَاجِ، فَقَالَتْ: هَذِهِ كَانَتْ عِنْدَ عَائِشَةَ حَتَّى قُبِضَتْ، فَلَمَّا قُبِضَتْ قَبَضْتُهَا، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُهَا، فَنَحْنُ نَغْسِلُهَا لِلْمَرْضَى يُسْتَشْفَى بِهَا
Tamil-4201
Shamila-2069
JawamiulKalim-3862
சமீப விமர்சனங்கள்