தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4844

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்கூட விடுபடாமல் அனைவரும் நபி (ஸல்) அவர்(களின் இறப்பு நெருங்கியபோது அவர்)களுக்கு அருகில் இருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்கள் நடந்துவந்தார்கள். அவரது நடை சிறிதும் பிசகாமல் அப்படியே நபி (ஸல்) அவர்களின் நடையைப் போன்றே இருந்தது.

ஃபாத்திமாவைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள், “என் மகளே! வருக!” என்று வரவேற்றார்கள். பிறகு அவரை “தமது வலப் பக்கத்தில்” அல்லது “இடப் பக்கத்தில்” அமர்த்திக்கொண்டார்கள். பிறகு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய பதற்றத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.

அப்போது அவரிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே?” என்று கேட்டேன்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தபோது ஃபாத்திமாவிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன soசொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஃபாத்திமா, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை” என்று கூறிவிட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நான், “உங்கள்மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்து நம்பிக்கையுடன் கேட்கிறேன். அந்த இரகசியம் என்னவென்று நீங்கள் சொல்லியே ஆகவேண்டும்” என்றேன். ஃபாத்திமா, “சரி! இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு தெரிவித்தார்:

முதலாவது முறை என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஓரிரு முறை குர்ஆனை ஓதிக்காட்(டி நினைவூட்)டுவார். ஆனால், அவர் இந்த முறை இரண்டு தடவை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடியாக (இவ்வுலகைவிட்டு) சென்றுவிடுவேன்.

ஆகவேதான், உங்கள் முன்னிலையில் நான் அவ்வாறு அழுதேன். எனது பதற்றத்தைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, “ஃபாத்திமா! “இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கு” அல்லது “இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு” தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?” என்று இரகசியமாகக் கேட்டார்கள். ஆகவேதான், உங்கள் முன்னிலையில் அவ்வாறு சிரித்தேன்.

Book : 44

(முஸ்லிம்: 4844)

حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ فِرَاسٍ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ

كُنَّ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهُ، لَمْ يُغَادِرْ مِنْهُنَّ وَاحِدَةً، فَأَقْبَلَتْ فَاطِمَةُ تَمْشِي، مَا تُخْطِئُ مِشْيَتُهَا مِنْ مِشْيَةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا، فَلَمَّا رَآهَا رَحَّبَ بِهَا، فَقَالَ: «مَرْحَبًا بِابْنَتِي» ثُمَّ أَجْلَسَهَا عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ، ثُمَّ سَارَّهَا فَبَكَتْ بُكَاءً شَدِيدًا، فَلَمَّا رَأَى جَزَعَهَا سَارَّهَا الثَّانِيَةَ فَضَحِكَتْ، فَقُلْتُ لَهَا: خَصَّكِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْنِ نِسَائِهِ بِالسِّرَارِ، ثُمَّ أَنْتِ تَبْكِينَ؟ فَلَمَّا قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَأَلْتُهَا مَا قَالَ لَكِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: مَا كُنْتُ أُفْشِي عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِرَّهُ، قَالَتْ: فَلَمَّا تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: عَزَمْتُ عَلَيْكِ، بِمَا لِي عَلَيْكِ مِنَ الْحَقِّ، لَمَا حَدَّثْتِنِي مَا قَالَ لَكِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: أَمَّا الْآنَ، فَنَعَمْ، أَمَّا حِينَ سَارَّنِي فِي الْمَرَّةِ الْأُولَى، فَأَخْبَرَنِي أَنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُهُ الْقُرْآنَ فِي كُلِّ سَنَةٍ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ، وَإِنَّهُ عَارَضَهُ الْآنَ مَرَّتَيْنِ، وَإِنِّي لَا أُرَى الْأَجَلَ إِلَّا قَدِ اقْتَرَبَ، فَاتَّقِي اللهَ وَاصْبِرِي، فَإِنَّهُ نِعْمَ السَّلَفُ أَنَا لَكِ ” قَالَتْ: فَبَكَيْتُ بُكَائِي الَّذِي رَأَيْتِ، فَلَمَّا رَأَى جَزَعِي سَارَّنِي الثَّانِيَةَ فَقَالَ: «يَا فَاطِمَةُ أَمَا تَرْضِيْنَ أَنْ تَكُونِي سَيِّدَةَ نِسَاءِ الْمُؤْمِنِينَ، أَوْ سَيِّدَةَ نِسَاءِ هَذِهِ الْأُمَّةِ» قَالَتْ: فَضَحِكْتُ ضَحِكِي الَّذِي رَأَيْتِ


Tamil-4844
Shamila-2450
JawamiulKalim-4494




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.