இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதர் (அல்ஃகிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது, தம் சகோதரர் (உனைஸ்) இடம், “இந்தப் பள்ளத்தாக்கை (மக்காவை) நோக்கிப் பயணம் செய்து, தமக்கு வானத்திலிருந்து இறைச்செய்தி வருவதாகக் கூறிவரும் இந்த மனிதரைக் குறித்த விவரத்தை (திரட்டி) என்னிடம் கொண்டுவந்து சொல். அவரது சொல்லை அவரிடமிருந்தே கேட்டபிறகு என்னிடம் வா” என்று கூறியனுப்பினார்கள்.
அவ்வாறே அந்தச் சகோதரர் புறப்பட்டு மக்காவுக்குச் சென்று நபி (ஸல்) அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு அபூதர் (ரலி) அவர்களிடம் திரும்பிச் சென்று, “அவர் நற்குணங்களைக் கடைப்பிடிக்கும்படி (மக்களுக்கு) கட்டளையிடுவதை நான் பார்த்தேன். ஒரு வாக்கையும் (அவரிடமிருந்து செவியுற்றேன்); அது கவிதை இல்லை” என்று சொன்னார்.
அபூதர், “நான் விரும்பிய விதத்தில் (போதுமான விவரங்களுடன் என்னிடம் வந்து) நீ என்னைத் திருப்தியடையச் செய்யவில்லை” என்று கூறிவிட்டார்கள். பிறகு பயண உணவு எடுத்துக்கொண்டு நீர் நிரம்பிய தமது தோல்பை ஒன்றைச் சுமந்துகொண்டு அபூதர் புறப்பட்டார். மக்கா வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றார்.
நபி (ஸல்) அவர்களை அபூதர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷியர் தமக்குத் தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை.
இரவு நேரமானதும் (அங்கேயே) படுத்துக்கொண்டார். அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கண்டு, அவர் வெளியூர்க்காரர் என்பதைப் புரிந்துகொண்டார்கள். அலீ (ரலி) அவர்களைக் கண்டவுடன் (அலீ (ரலி) அவர்களின் அழைப்பின் பேரில்) அபூதர் அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து (அவர்களது இல்லத்திற்குச்) சென்றார்கள். விடியும்வரை அவர்களில் எவரும் மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக்கொள்ளவில்லை.
(விடிந்த) பிறகு அபூதர் தம் தோல்பையையும் பயண உணவையும் தூக்கிக்கொண்டு பள்ளி வாசலுக்குச் சென்றார். அன்று மாலையாகும்வரை நபி (ஸல்) அவர்களைக் காணாத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார்.
பிறகு தமது படுக்கைக்குத் திரும்பினார். அன்றும் அலீ (ரலி) அவர்கள் அவரைக் கடந்துசென்றார்கள். “தமது தங்குமிடத்தைக் கண்டுபிடிக்கும் நேரம் இம்மனிதருக்கு இன்னும் வரவில்லையோ?” என்று கூறிவிட்டு, அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். (அன்றும்) அவர்களில் எவரும் மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக்கொள்ளவில்லை.
மூன்றாம் நாள் வந்தபோதும் அபூதர் அவ்வாறே செய்தார். அன்றும் அலீ (ரலி) அவர்கள் அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பி தம்முடன் அழைத்துச் சென்றார்கள்.
பிறகு, “நீங்கள் எதற்காக இந்த ஊருக்கு வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?” என்று கேட்டார்கள். அபூதர், “(நான் தேடிவந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதாக நீங்கள் உறுதிமொழியளித்தால் (நீங்கள் கேட்டதைச்) செய்கிறேன்” என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதி மொழியளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார்.
அப்போது அலீ (ரலி) அவர்கள், “(நீர் தேடிவந்த) அந்த மனிதர் உண்மையாளர்தான்; அவர் அல்லாஹ்வின் தூதர்தான். காலையில் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். (நாம் செல்லும் போது) உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று நான் அஞ்சுகின்ற எதையேனும் நான் கண்டால், சிறுநீர் கழிப்பதைப் போன்று நின்றுகொள்வேன். நான் (நிற்காமல்) போய்க்கொண்டேயிருந்தால், நான் நுழையும் வீட்டுக்குள் நீங்களும் நுழையும்வரை என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்” என்று சொன்னார்கள்.
அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலீ (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்தபோது அவர்களுடன் அபூதர்ரும் நுழைந்தார். அங்கு நபி (ஸல்) அவர்களின் சொல்லைச் செவியுற்று அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் உங்கள் “ஃகிஃபார்” குலத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்துசேரும்வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்” என்று சொன்னார்கள்.
அபூதர் (ரலி) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன்மீது சத்தியமாக! நான் இந்தச் செய்தியை (மக்கா இறைமறுப்பாளர்களான) இவர்களிடையேயும் உரக்கச் சொல்வேன்” என்று சொல்லிவிட்டு, (கஅபா) பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் நான் உறுதிமொழிகிறேன்” என்று கூறினார்.
உடனே அங்கிருந்த (குறைஷி) மக்கள், கொதித்தெழுந்து, அவரை அடித்துக் கீழே சாய்த்தனர். அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அவர்மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! இவர் “ஃகிஃபார்” குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும் வழி (ஃகிஃபார் குலத்தார் வசிக்கும்) ஷாம் (சிரியா) நாட்டுப் பாதையில்தான் உள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியாதா?” என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர் (ரலி) அவர்களைக் காப்பாற்றினார்கள்.
அபூதர் (ரலி) அவர்கள் அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அதே போன்று (உரத்த குரலில் உறுதிமொழி) சொல்ல, அவர்மீது பாய்ந்து (குறைஷியர்) தாக்கினர். (அன்றும்) அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர் (ரலி) அவர்கள்மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல்) அவரைக் காப்பாற்றினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 44
(முஸ்லிம்: 4879)وحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ السَّامِيُّ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ – وَتَقَارَبَا فِي سِيَاقِ الْحَدِيثِ، وَاللَّفْظُ لِابْنِ حَاتِمٍ – قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ
لَمَّا بَلَغَ أَبَا ذَرٍّ مَبْعَثُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ قَالَ لِأَخِيهِ: ارْكَبْ إِلَى هَذَا الْوَادِي، فَاعْلَمْ لِي عِلْمَ هَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ يَأْتِيهِ الْخَبَرُ مِنَ السَّمَاءِ، فَاسْمَعْ مِنْ قَوْلِهِ ثُمَّ ائْتِنِي، فَانْطَلَقَ الْآخَرُ حَتَّى قَدِمَ مَكَّةَ، وَسَمِعَ مِنْ قَوْلِهِ، ثُمَّ رَجَعَ إِلَى أَبِي ذَرٍّ فَقَالَ: رَأَيْتُهُ يَأْمُرُ بِمَكَارِمِ الْأَخْلَاقِ، وَكَلَامًا مَا هُوَ بِالشِّعْرِ، فَقَالَ: مَا شَفَيْتَنِي فِيمَا أَرَدْتُ فَتَزَوَّدَ وَحَمَلَ شَنَّةً لَهُ، فِيهَا مَاءٌ حَتَّى قَدِمَ مَكَّةَ، فَأَتَى الْمَسْجِدَ فَالْتَمَسَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا يَعْرِفُهُ، وَكَرِهَ أَنْ يَسْأَلَ عَنْهُ، حَتَّى أَدْرَكَهُ – يَعْنِي اللَّيْلَ – فَاضْطَجَعَ، فَرَآهُ عَلِيٌّ فَعَرَفَ أَنَّهُ غَرِيبٌ، فَلَمَّا رَآهُ تَبِعَهُ، فَلَمْ يَسْأَلْ وَاحِدٌ مِنْهُمَا صَاحِبَهُ عَنْ شَيْءٍ، حَتَّى أَصْبَحَ، ثُمَّ احْتَمَلَ قِرْبَتَهُ وَزَادَهُ إِلَى الْمَسْجِدِ، فَظَلَّ ذَلِكَ الْيَوْمَ، وَلَا يَرَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى أَمْسَى، فَعَادَ إِلَى مَضْجَعِهِ، فَمَرَّ بِهِ عَلِيٌّ، فَقَالَ: مَا آنَ لِلرَّجُلِ أَنْ يَعْلَمَ مَنْزِلَهُ؟ فَأَقَامَهُ، فَذَهَبَ بِهِ مَعَهُ، وَلَا يَسْأَلُ وَاحِدٌ مِنْهُمَا صَاحِبَهُ عَنْ شَيْءٍ، حَتَّى إِذَا كَانَ يَوْمُ الثَّالِثِ فَعَلَ مِثْلَ ذَلِكَ، فَأَقَامَهُ عَلِيٌّ مَعَهُ، ثُمَّ قَالَ لَهُ: أَلَا تُحَدِّثُنِي؟ مَا الَّذِي أَقْدَمَكَ هَذَا الْبَلَدَ؟ قَالَ: إِنْ أَعْطَيْتَنِي عَهْدًا وَمِيثَاقًا لَتُرْشِدَنِّي، فَعَلْتُ، فَفَعَلَ. فَأَخْبَرَهُ فَقَالَ: فَإِنَّهُ حَقٌّ وَهُوَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا أَصْبَحْتَ فَاتَّبِعْنِي، فَإِنِّي إِنْ رَأَيْتُ شَيْئًا أَخَافُ عَلَيْكَ، قُمْتُ كَأَنِّي أُرِيقُ الْمَاءَ، فَإِنْ مَضَيْتُ فَاتَّبِعْنِي حَتَّى تَدْخُلَ مَدْخَلِي، فَفَعَلَ، فَانْطَلَقَ يَقْفُوهُ، حَتَّى دَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَخَلَ مَعَهُ، فَسَمِعَ مِنْ قَوْلِهِ، وَأَسْلَمَ مَكَانَهُ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْجِعْ إِلَى قَوْمِكَ فَأَخْبِرْهُمْ حَتَّى يَأْتِيَكَ أَمْرِي» فَقَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَأَصْرُخَنَّ بِهَا بَيْنَ ظَهْرَانَيْهِمْ فَخَرَجَ حَتَّى أَتَى الْمَسْجِدَ، فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، وَثَارَ الْقَوْمُ فَضَرَبُوهُ حَتَّى أَضْجَعُوهُ، فَأَتَى الْعَبَّاسُ فَأَكَبَّ عَلَيْهِ، فَقَالَ: وَيْلَكُمْ أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّهُ مِنْ غِفَارٍ، وَأَنَّ طَرِيقَ تُجَّارِكُمْ إِلَى الشَّامِ عَلَيْهِمْ، فَأَنْقَذَهُ مِنْهُمْ، ثُمَّ عَادَ مِنَ الْغَدِ بِمِثْلِهَا، وَثَارُوا إِلَيْهِ فَضَرَبُوهُ، فَأَكَبَّ عَلَيْهِ الْعَبَّاسُ فَأَنْقَذَهُ
Tamil-4879
Shamila-2474
JawamiulKalim-4527
சமீப விமர்சனங்கள்