தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4904

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35

அபூஹுரைரா அத்தவ்சீ (ரலி) அவர்களின் சிறப்புகள்.

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயார் இணைவைப்பாளராக இருந்த போது, இஸ்லாத்திற்கு (வருமாறு) அவருக்கு நான் அழைப்பு விடுத்துவந்தேன். ஒரு நாள் நான் அவருக்கு (இஸ்லாமிய) அழைப்பு விடுத்தபோது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் குறித்து நான் விரும்பாத (வசை மொழிகள்) சிலவற்றை என் காதுபடக் கூறினார்.

உடனே நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் தாயாருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்துவந்தேன். அவர் மறுத்துவந்தார். இன்றைய தினமும் அவருக்கு நான் அழைப்பு விடுத்தேன். அவர் உங்களைக் குறித்து நான் விரும்பாத (வசை மொழிகள்) சிலவற்றை என் காதுபடக் கூறினார். ஆகவே, (இந்த) அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டுவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தவனாக நான் (வீட்டை நோக்கிப்) புறப்பட்டேன். நான் வீட்டு வாசலை அடைந்தபோது (உள்ளே) அது தாழிடப்பட்டிருந்தது. என் தாயார் என் காலடிச் சப்தத்தைக் கேட்டுவிட்டு, “அபூஹுரைரா அங்கேயே இரு” என்று கூறினார்.

அப்போது தண்ணீர் புழங்கும் சப்தம் எனக்குக் கேட்டது. என் தாயார் குளித்துவிட்டு, தமது சட்டையை அணிந்துகொண்டு, முக்காட்டுத் துணி அணியாமல் விரைந்து வந்து கதவைத் திறந்தார். பிறகு, “அபூஹுரைரா! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதி மொழிகிறேன்; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார் என்றும் உறுதி மொழிகிறேன்” என்று கூறினார்.

உடனே நான் மகிழ்ச்சியில் அழுது கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகிழ்ச்சியான செய்தி. அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு விட்டான். அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டிவிட்டான்” என்று சொன்னேன்.

அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள். நல்ல வார்த்தைகளைச் சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! இறை நம்பிக்கையுள்ள அடியார்களுக்கு என்மீதும் என் தாயார்மீதும் நேசம் ஏற்படவும் அவர்கள் மீது எனக்கும் என் தாயாருக்கும் நேசம் ஏற்படவும், தாங்கள் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! உன்னுடைய இந்தச் சிறிய அடியார் (அபூஹுரைரா) மீதும் அவருடைய தாயார்மீதும் இறைநம்பிக்கையாளர்களான உன் அடியார்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக! இறைநம்பிக்கையாளர்கள்மீது இவர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

எனவேதான், என்னைப் பார்க்காவிட்டாலும் என்னைப் பற்றிக் கேள்விப்படும் எந்த ஓர் இறை நம்பிக்கையாளரும் என்னை நேசிக்காமல் இருப்பதில்லை.

Book : 44

(முஸ்லிம்: 4904)

35 – بَابُ مِنْ فَضَائِلِ أَبِي هُرَيْرَةَ الدَّوْسِيِّ رَضِيَ اللهُ عَنْهُ

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْيَمَامِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ أَبِي كَثِيرٍ يَزِيدَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ

كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الْإِسْلَامِ وَهِيَ مُشْرِكَةٌ، فَدَعَوْتُهَا يَوْمًا فَأَسْمَعَتْنِي فِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَكْرَهُ، فَأَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي، قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي كُنْتُ أَدْعُو أُمِّي إِلَى الْإِسْلَامِ فَتَأْبَى عَلَيَّ، فَدَعَوْتُهَا الْيَوْمَ فَأَسْمَعَتْنِي فِيكَ مَا أَكْرَهُ، فَادْعُ اللهَ أَنْ يَهْدِيَ أُمَّ أَبِي هُرَيْرَةَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللهُمَّ اهْدِ أُمَّ أَبِي هُرَيْرَةَ» فَخَرَجْتُ مُسْتَبْشِرًا بِدَعْوَةِ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا جِئْتُ فَصِرْتُ إِلَى الْبَابِ، فَإِذَا هُوَ مُجَافٌ، فَسَمِعَتْ أُمِّي خَشْفَ قَدَمَيَّ، فَقَالَتْ: مَكَانَكَ يَا أَبَا هُرَيْرَةَ وَسَمِعْتُ خَضْخَضَةَ الْمَاءِ، قَالَ: فَاغْتَسَلَتْ وَلَبِسَتْ دِرْعَهَا وَعَجِلَتْ عَنْ خِمَارِهَا، فَفَتَحَتِ الْبَابَ، ثُمَّ قَالَتْ: يَا أَبَا هُرَيْرَةَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، قَالَ فَرَجَعْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُهُ وَأَنَا أَبْكِي مِنَ الْفَرَحِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ أَبْشِرْ قَدِ اسْتَجَابَ اللهُ دَعْوَتَكَ وَهَدَى أُمَّ أَبِي هُرَيْرَةَ، فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ خَيْرًا، قَالَ قُلْتُ: يَا رَسُولَ اللهِ ادْعُ اللهَ أَنْ يُحَبِّبَنِي أَنَا وَأُمِّي إِلَى عِبَادِهِ الْمُؤْمِنِينَ، وَيُحَبِّبَهُمْ إِلَيْنَا، قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللهُمَّ حَبِّبْ عُبَيْدَكَ هَذَا – يَعْنِي أَبَا هُرَيْرَةَ – وَأُمَّهُ إِلَى عِبَادِكَ الْمُؤْمِنِينَ، وَحَبِّبْ إِلَيْهِمِ الْمُؤْمِنِينَ» فَمَا خُلِقَ مُؤْمِنٌ يَسْمَعُ بِي وَلَا يَرَانِي إِلَّا أَحَبَّنِي


Tamil-4904
Shamila-2491
JawamiulKalim-4552




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.