பாடம் : 7
கடல் அலை போன்று அடுக்கடுக்காய் வரும் குழப்பங்கள்.
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒருமுறை கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், “உங்களில் யார் (இனி தலைதூக்கவிருக்கும்) குழப்பங்கள் (ஃபித்னா) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை, அவர்கள் சொன்னதைப் போன்றே நினைவில் வைத்திருக்கிறார்?” என்று கேட்டார்கள். “நான் (நினைவில் வைத்திருக்கிறேன்)”என்றேன்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள் “நீர் துணிவு மிக்க மனிதர்தான்” என்று கூறிவிட்டு, “எப்படிச் சொன்னார்கள்?” என்று கேட்டார்கள். நான், “ஒரு மனிதன் தன் குடும்பத்தார் விஷயத்திலும் (அதாவது அவர்கள்மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பதன் மூலமும்), தனது செல்வம் விஷயத்திலும் (அதாவது அது இறைவனைப் பணிந்து வாழும் வாழ்க்கையிலிருந்து திசை திருப்புவதன் மூலமும்), தன் விஷயத்திலும், தன் குழந்தை குட்டிகள் விஷயத்திலும், தன் அண்டை வீட்டார் விஷயத்திலும் (நிறைவேற்ற வேண்டிய உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) சோதனையில் (ஃபித்னா) ஆழ்த்தப்படும்போது தொழுகை, தானதர்மம், நன்மை புரியும்படி ஏவுதல், தீமையிலிருந்து தடுத்தல் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமையும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டேன் என்றேன்.
உமர் (ரலி) அவர்கள், “நான் (சோதனை எனும் பொருள் கொண்ட ஃபித்னாவான) இதைப் பற்றிக் கேட்கவில்லை. கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (அல்லாஹ்வின் தூதரால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட “குழப்பம்”எனும் பொருள் கொண்ட ஃபித்னா)வைப் பற்றியே கேட்கிறேன்” என்று சொன்னார்கள்.
நான், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கும் அதற்குமிடையே என்ன தொடர்பு? (அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.) உங்களுக்கும் அதற்குமிடையே மூடப்பட்ட கதவொன்று உள்ளது (உங்கள் ஆட்சியில் அவற்றில் ஏதும் தலைதூக்கப் போவதில்லை)” என்று கூறினேன்.
உமர் (ரலி) அவர்கள், “அந்தக் கதவு உடைக்கப்படுமா? அல்லது திறக்கப்படுமா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை;அது உடைக்கப்படும்” என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “(அப்படியானால்) அது ஒருபோதும் மூடப்படாமலிருக்க ஏற்றதே ஆகும்” என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், “உமர் (ரலி) அவர்கள் அந்தக் கதவு (என்பது) யாரைக் குறிக்கும் என அறிந்திருந்தார்களா?” என்று கேட்டோம்.
ஹுதைஃபா (ரலி) அவர்கள், “ஆம்; பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று உமர் (ரலி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் அவருக்கு அறிவித்தேன்” என்று பதிலளித்தார்கள்.
அந்தக் கதவு என்பது யாரைக் குறிக்கிறது என ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே,அவர்களிடம் மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்களைக் கேட்கச் சொன்னோம். அவர் (அந்தக் கதவு என்பது யாரைக் குறிக்கிறது என்று) கேட்டதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், “உமர் (ரலி) அவர்கள்தான் அந்தக் கதவு” என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 52
(முஸ்லிம்: 5545)7 – بَابٌ فِي الْفِتْنَةِ الَّتِي تَمُوجُ كَمَوْجِ الْبَحْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ أَبُو كُرَيْبٍ، جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ، قَالَ ابْنُ الْعَلَاءِ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ
كُنَّا عِنْدَ عُمَرَ، فَقَالَ: أَيُّكُمْ يَحْفَظُ حَدِيثَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْفِتْنَةِ كَمَا قَالَ؟ قَالَ: فَقُلْتُ: أَنَا، قَالَ: إِنَّكَ لَجَرِيءٌ، وَكَيْفَ قَالَ؟ قَالَ: قُلْتُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَنَفْسِهِ وَوَلَدِهِ وَجَارِهِ، يُكَفِّرُهَا الصِّيَامُ، وَالصَّلَاةُ، وَالصَّدَقَةُ، وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ» فَقَالَ عُمَرُ: لَيْسَ هَذَا أُرِيدُ، إِنَّمَا أُرِيدُ الَّتِي تَمُوجُ كَمَوْجِ الْبَحْرِ، قَالَ: فَقُلْتُ: مَا لَكَ وَلَهَا، يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ؟ إِنَّ بَيْنَكَ وَبَيْنَهَا بَابًا مُغْلَقًا، قَالَ: أَفَيُكْسَرُ الْبَابُ أَمْ يُفْتَحُ؟ قَالَ: قُلْتُ: لَا، بَلْ يُكْسَرُ، قَالَ: ذَلِكَ أَحْرَى أَنْ لَا يُغْلَقَ أَبَدًا، قَالَ: فَقُلْنَا لِحُذَيْفَةَ: هَلْ كَانَ عُمَرُ يَعْلَمُ مَنِ الْبَابُ؟ قَالَ: نَعَمْ، كَمَا يَعْلَمُ أَنَّ دُونَ غَدٍ اللَّيْلَةَ، إِنِّي حَدَّثْتُهُ حَدِيثًا لَيْسَ بِالْأَغَالِيطِ، قَالَ: فَهِبْنَا أَنْ نَسْأَلَ حُذَيْفَةَ: مَنِ الْبَابُ؟ فَقُلْنَا لِمَسْرُوقٍ: سَلْهُ فَسَأَلَهُ، فَقَالَ: عُمَرُ
Tamil-5545
Shamila-144
JawamiulKalim-5154
சமீப விமர்சனங்கள்