தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3915

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு வந்துள்ள அனுமதி.

 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரின் வணிகக் குழுவொன்றை எதிர்கொள்ள படைப் பிரிவு ஒன்றில் எங்களை அனுப்பினார்கள்.

எங்களுக்கு அபூஉபைதா பின் அல்ஜர் ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். ஒரு பை பேரீச்சம் பழத்தை எங்களுக்குப் பயண உணவாகக் கொடுத்தார்கள். எங்களுக்குக் கொடுக்க வேறெதையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. அபூஉபைதா (ரலி) அவர்கள் அதிலிருந்து ஒவ்வொரு பேரீச்சம் பழமாக எங்களுக்குக் கொடுத்துவந்தார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்) “அதை வைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள்? (அது உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்காதே?)” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் கூறினார்கள்: குழந்தை வாயிலிட்டுச் சுவைப்பதைப் போன்று நாங்களும் அந்தப் பேரீச்சம் பழத்தைச் சுவைப்போம். அதற்கு மேல் தண்ணீரும் அருந்திக்கொள்வோம். அன்றைய பகலிலிருந்து இரவு வரை அதுவே எங்களுக்குப் போதுமானதாயிருக்கும்.

நாங்கள் எங்களிடமிருந்த தடிகளால் கருவேல மரத்தில் அடி(த்து இலை பறி)ப்போம். பிறகு அதைத் தண்ணீரில் நனைத்து அதையும் உண்டோம்.

பிறகு நாங்கள் கடற்கரையோரமாக நடந்தோம். அப்போது கடலோரத்தில் பெரிய மணல் திட்டைப் போன்று ஏதோ ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. அங்கு நாங்கள் சென்றோம். அங்கே “கொழுப்புத் தலை திமிங்கலம்” (அம்பர்) எனப்படும் ஒரு பிராணி கிடந்தது.

(தளபதி) அபூஉபைதா (ரலி) அவர்கள் “செத்ததாயிற்றே?” என்று கூறினார்கள். பிறகு “இல்லை, நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதர்கள் ஆவோம். அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உள்ளோம். நீங்கள் நிர்ப்பந்தத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்கள். எனவே, (இதை) உண்ணுங்கள்” என்று கூறினார்கள்.

அந்தத் திமிங்கலத்தை வைத்துக்கொண்டு நாங்கள் ஒரு மாதம் கழித்தோம். எங்கள் முந்நூறு பேரின் உடலும் வலிமையாகிவிட்டது. நாங்கள் அந்தத் திமிங்கலத்தின் விழிப் பள்ளத்திலிருந்து பெரிய பாத்திரங்கள் மூலம் எண்ணெய் எடுத்தோம். அதன் உடலைக் காளை மாட்டின் அளவுக்குத் துண்டு போட்டோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களில் பதிமூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, அதன் விழிப் பள்ளத்தில் உட்காரவைத்தார்கள்.

மேலும், அதன் விலாஎலும்புகளில் ஒன்றை எடுத்து, அதை (பூமியில்) நட்டுவைத்தார்கள். பிறகு எங்களிடமிருந்த ஒரு பெரிய ஒட்டகத்தில் சிவிகை பூட்டி அதில் ஏறி அந்த எலும்பிற்குக் கீழே கடந்துபோனார்கள். (அந்த எலும்பு தலையைத் தொடவில்லை. அந்த அளவுக்குப் பெரியதாக இருந்து.) பிறகு அந்த மீனை (அரை வேக்காட்டில்) வேகவைத்து, பயண உணவாக எடுத்துக்கொண்டோம்.

நாங்கள் மதீனா வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களிடம் தெரிவித்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திய உணவாகும். அதில் ஏதேனும் உங்களிடம் மீதியிருந்தால் நமக்கும் உண்ணக் கொடுங்களேன்!” என்று கேட்டார்கள்.

உடனே நாங்கள் அதிலிருந்து சிறிதளவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினோம். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 34

(முஸ்லிம்: 3915)

4 – بَابُ إِبَاحَةِ مَيْتَاتِ الْبَحْرِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، ح وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ

بَعَثَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَّرَ عَلَيْنَا أَبَا عُبَيْدَةَ، نَتَلَقَّى عِيرًا لِقُرَيْشٍ، وَزَوَّدَنَا جِرَابًا مِنْ تَمْرٍ لَمْ يَجِدْ لَنَا غَيْرَهُ، فَكَانَ أَبُو عُبَيْدَةَ يُعْطِينَا تَمْرَةً تَمْرَةً، قَالَ: فَقُلْتُ: كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ بِهَا؟ قَالَ: نَمَصُّهَا كَمَا يَمَصُّ الصَّبِيُّ، ثُمَّ نَشْرَبُ عَلَيْهَا مِنَ الْمَاءِ، فَتَكْفِينَا يَوْمَنَا إِلَى اللَّيْلِ، وَكُنَّا نَضْرِبُ بِعِصِيِّنَا الْخَبَطَ، ثُمَّ نَبُلُّهُ بِالْمَاءِ فَنَأْكُلُهُ، قَالَ: وَانْطَلَقْنَا عَلَى سَاحِلِ الْبَحْرِ، فَرُفِعَ لَنَا عَلَى سَاحِلِ الْبَحْرِ كَهَيْئَةِ الْكَثِيبِ الضَّخْمِ، فَأَتَيْنَاهُ فَإِذَا هِيَ دَابَّةٌ تُدْعَى الْعَنْبَرَ، قَالَ: قَالَ أَبُو عُبَيْدَةَ: مَيْتَةٌ، ثُمَّ قَالَ: لَا، بَلْ نَحْنُ رُسُلُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَفِي سَبِيلِ اللهِ، وَقَدِ اضْطُرِرْتُمْ فَكُلُوا، قَالَ: فَأَقَمْنَا عَلَيْهِ شَهْرًا وَنَحْنُ ثَلَاثُ مِائَةٍ حَتَّى سَمِنَّا، قَالَ: وَلَقَدْ رَأَيْتُنَا نَغْتَرِفُ مِنْ وَقْبِ عَيْنِهِ بِالْقِلَالِ الدُّهْنَ، وَنَقْتَطِعُ مِنْهُ الْفِدَرَ كَالثَّوْرِ، أَوْ كَقَدْرِ الثَّوْرِ، فَلَقَدْ أَخَذَ مِنَّا أَبُو عُبَيْدَةَ ثَلَاثَةَ عَشَرَ رَجُلًا، فَأَقْعَدَهُمْ فِي وَقْبِ عَيْنِهِ، وَأَخَذَ ضِلَعًا مِنْ أَضْلَاعِهِ فَأَقَامَهَا ثُمَّ رَحَلَ أَعْظَمَ بَعِيرٍ مَعَنَا، فَمَرَّ مِنْ تَحْتِهَا وَتَزَوَّدْنَا مِنْ لَحْمِهِ وَشَائِقَ، فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ أَتَيْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْنَا ذَلِكَ لَهُ، فَقَالَ: «هُوَ رِزْقٌ أَخْرَجَهُ اللهُ لَكُمْ، فَهَلْ مَعَكُمْ مِنْ لَحْمِهِ شَيْءٌ فَتُطْعِمُونَا؟»، قَالَ: فَأَرْسَلْنَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُ فَأَكَلَهُ


Tamil-3915
Shamila-1935
JawamiulKalim-3583




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.