தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3578

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

அபூ தல்ஹா (ரலி) (தம் மனைவி) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்கும்) பசியைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி), ‘ஆம், இருக்கிறது’ என்று கூறிவிட்டு வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு, உம்மு சுலைம் (ரலி), தம் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் அதைச் சுருட்டி என் கை (அக்குளு)க்குக் கீழே அதை மறைத்து வைத்து அதன் ஒரு பகுதியில் என் கையைக் கட்டிவிட்டார்கள். பிறகு என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள்.

நான் அதைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்கள் இருந்தனர். நான் அவர்களுக்கு முன் நின்றேன். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உன்னை அபூ தல்ஹா அனுப்பினரா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்றேன். ‘உணவுடனா அனுப்பியுள்ளார்?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) தம்முடன் இருந்தவர்களிடம், ‘எழுந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன்.

இறுதியில், அபூ தல்ஹா (ரலி) அவர்களிடம் வந்து (நபி – ஸல் – அவர்கள் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருக்கும்) விபரத்தைத் தெரிவித்தேன். உடனே, அபூ தல்ஹா (ரலி) (என் தாயாரிடம்), ‘உம்மு சுலைமே! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மிடம் அவர்களுக்கு உணவளிக்க எதுவுமில்லையே’ என்று கூறினார்கள். உம்மு சுலைம் (ரலி), ‘அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்’ என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா (தாமே நபி-ஸல்- அவர்களை முன்சென்று வரவேற்பதற்காக) நடந்து சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ தல்ஹா தம்முடனிருக்க, உம்மு சுலைம் அவர்களை நோக்கிச் சென்று, ‘உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டு வா!’ என்று கூறினார்கள். உடனே, அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி உத்திரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம் (ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவன் நாடியவற்றை (பிஸ்மில்லாஹ்வையும் மற்ற பிரார்த்தனைகளையும்) கூறினார்கள்.

பிறகு, ‘பத்து பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்’ என்று (அபூ தல்ஹாவிடம்) கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா (ரலி) அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்’ என்று கூறினார்கள்.

அவ்வாறே அபூ தல்ஹா (ரலி) அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டு விட்டு வெளியேறினார்கள். பிறகு, ‘பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா (ரலி) அனுமதி கொடுத்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள்.

பிறகு, ‘பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா (ரலி) அனுமதி கொடுத்தார்கள். பிறகு, அவர்கள் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் இருந்தார்கள்.

(புகாரி: 3578)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ

قَالَ أَبُو طَلْحَةَ لِأُمِّ سُلَيْمٍ لَقَدْ سَمِعْتُ صَوْتَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَعِيفًا، أَعْرِفُ فِيهِ الجُوعَ، فَهَلْ عِنْدَكِ مِنْ شَيْءٍ؟ قَالَتْ: نَعَمْ، فَأَخْرَجَتْ أَقْرَاصًا مِنْ شَعِيرٍ، ثُمَّ أَخْرَجَتْ خِمَارًا لَهَا، فَلَفَّتِ الخُبْزَ بِبَعْضِهِ، ثُمَّ دَسَّتْهُ تَحْتَ يَدِي وَلاَثَتْنِي بِبَعْضِهِ، ثُمَّ أَرْسَلَتْنِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَذَهَبْتُ بِهِ، فَوَجَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ، وَمَعَهُ النَّاسُ، فَقُمْتُ عَلَيْهِمْ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آرْسَلَكَ أَبُو طَلْحَةَ» فَقُلْتُ: نَعَمْ، قَالَ: «بِطَعَامٍ» فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَنْ مَعَهُ: «قُومُوا» فَانْطَلَقَ وَانْطَلَقْتُ بَيْنَ أَيْدِيهِمْ، حَتَّى جِئْتُ أَبَا طَلْحَةَ فَأَخْبَرْتُهُ، فَقَالَ أَبُو طَلْحَةَ: يَا أُمَّ سُلَيْمٍ قَدْ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاسِ، وَلَيْسَ عِنْدَنَا مَا نُطْعِمُهُمْ؟ فَقَالَتْ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَانْطَلَقَ أَبُو طَلْحَةَ حَتَّى لَقِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو طَلْحَةَ مَعَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلُمِّي يَا أُمَّ سُلَيْمٍ، مَا عِنْدَكِ» فَأَتَتْ بِذَلِكَ الخُبْزِ، فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفُتَّ، وَعَصَرَتْ أُمُّ سُلَيْمٍ عُكَّةً فَأَدَمَتْهُ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، ثُمَّ قَالَ: «ائْذَنْ لِعَشَرَةٍ» فَأَذِنَ لَهُمْ، فَأَكَلُوا حَتَّى شَبِعُوا ثُمَّ خَرَجُوا، ثُمَّ قَالَ: «ائْذَنْ لِعَشَرَةٍ» فَأَذِنَ لَهُمْ، فَأَكَلُوا حَتَّى شَبِعُوا ثُمَّ خَرَجُوا، ثُمَّ قَالَ: «ائْذَنْ لِعَشَرَةٍ» فَأَذِنَ لَهُمْ، فَأَكَلُوا حَتَّى شَبِعُوا ثُمَّ خَرَجُوا، ثُمَّ قَالَ: «ائْذَنْ لِعَشَرَةٍ» فَأَكَلَ القَوْمُ كُلُّهُمْ وَشَبِعُوا، وَالقَوْمُ سَبْعُونَ أَوْ ثَمَانُونَ رَجُلًا





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.