தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4039

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை அபூ ராஃபிஉவிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னுஅத்தீக் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்தார்கள். அபூ ராஃபிஉ இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் புண்படுத்தி வந்ததுடன், அவர்களுக்கெதிராக(ப் பகைவர்களுக்கு) உதவியும் செய்து வந்தான். அவன் ஹிஜாஸ் பிரதேசத்திலிருந்த தன்னுடைய கோட்டையில் இருந்தான். எனவே, அன்சாரிகள் அந்தக் கோட்டையை நெருங்கினார்கள். அப்போது சூரியன் மறைந்து விட்டிருந்தது. மக்கள் தங்கள் மேய்ச்சல் கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அப்துல்லாஹ் இப்னு அத்தீக் (ரலி) தம் சகாக்களிடம், ‘நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் காவலனிடம் சென்று ஏதாவது தந்திரம் செய்து (கோட்டைக்கு) உள்ளே நுழைய முடியுமா என்று பார்த்து வருகிறேன்’ என்று கூறினார். உடனே அவர் சென்று கோட்டை வாசலை நெருங்கினார். பிறகு, தம் ஆடையினால் தம்மை மூடிக் கொண்டு இயற்கைக்கடனை நிறைவேற்றுவது போல் (கோட்டைக்கு வெளியே ஓரிடத்தில்) அமர்ந்தார். (கோட்டை வாசிகளான) மக்கள் (அனைவரும்) உள்ளே நுழைந்துவிட்டனர். அப்போது காவலன், ‘அல்லாஹ்வின் அடியானே! (கோட்டைக்கு) உள்ளே நுழைய விரும்பினால் நுழைந்து கொள். நான் வாசலை மூடப் போகிறேன்’ என்று கூறினான். உடனே நான் உள்ளே நுழைந்து (ஓரிடத்தில்) பதுங்கிக் கொண்டேன்

மக்கள் (அனைவரும்) நுழைந்ததும் அவன் வாசலை மூடிவிட்டான். பிறகு சாவிகளை ஒரு கொளுவி(கொக்கி)யில் தொங்கவிட்டான். நான் சாவிகளை நோக்கிச் சென்று அவற்றை எடுத்துக் கொண்டேன். பிறகு வாசலைத் திறந்தேன். அபூ ராஃபிஉவிடம் இராக்கதை சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அவன் தன்னுடைய மாடியறையில் இருந்தான். அவனுடைய இராக்கதை நண்பர்கள் அவனைப் பிரிந்து (விடைபெற்றுச்) சென்றபோது அவனை நோக்கி நான் (ஏணியில்) ஏறினேன். (கோட்டையின்) ஒவ்வொரு வாசலையும் திறக்கும் போதும் உள்ளிருந்து நான் தாழிட்டுக் கொண்டே சென்றேன். மக்கள் என்னை இனம் கண்டு கொண்டாலும் அபூ ராஃபிஉவை நான் கொன்று விடும் வரையில் அவர்கள் என்னை வந்தடைய போவதில்லை’ என்று நான் (என் மனத்திற்குள்) கூறிக் கொண்டேன். பிறகு அவனிடம் போய்ச் சேர்ந்தேன்.

அவன் இருட்டான ஓர் அறையில் தன் குடும்பத்தாருக்கிடையே இருந்தான். அந்த வீட்டில் அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அப்போது நான், ‘அபூ ராஃபிஉவே!’ என்று அழைத்தேன். அவன், ‘யார் அது?’ என்று கேட்டான். குரல் வந்த திசையை நோக்கிக் குறிவைத்து வாளால் பதற்றத்துடன் ஒரு வெட்டு வெட்டினேன். (இருப்பினும், என் நோக்கம்) எதையும் நான் நிறைவேற்றி (விட்)ட(தாகத் கருத)வில்லை. அப்போது அவன் கூச்சலிட்டான். உடனே நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறி விட்டேன். சிறிது நேரம் தாமதித்து மீண்டும் அவனிடம் வந்து, ‘அபூ ராஃபிஉவே! இது என்ன சத்தம்’ என்று (அவனுக்கு உதவ வந்தவன் போல்) கேட்டேன். அதற்கு அவன், ‘உன்னுடைய தாய்க்குக் கேடு நேரட்டும்! எவனோ ஒருவன் வீட்டில் (நுழைந்து) சற்றுமுன் என்னை வாளால் வெட்டினான்’ என்று கூறினான். உடனே நான் ஆழப்பதியும் படி இன்னொரு வெட்டு வெட்டினேன். (அப்போதும்) அவனை நான் கொல்ல (முடிய)வில்லை. பிறகு வாள் முனையை அவன் வயிற்றில் வைத்து அழுத்தினேன். அது முதுகு வழியே வெளியேறியது. அப்போது நான் அவனைக் கொன்று விட்டேன் என்று அறிந்து கொண்டேன்.

பிறகு ஒவ்வொரு கதவாக எல்லாக் கதவுகளையும் திறந்து கொண்டே சென்று அவனுடைய ஏணிப்படியை அடைந்தேன். (ஏணியில் இறங்கலானேன்.) தரைக்கு வந்து விட்டேன் என்று நினைத்துக் கொண்டு என்னுடைய காலை வைத்தேன். (ஆனால்,) நிலவு காயும் (அந்த) இரவில் நான் விழுந்து விட்டேன். அப்போது என்னுடைய கால் உடைந்துவிட்டது. உடனே நான் தலைப்பாகதை(த் துணி)யால் அதற்குக் கட்டுப்போட்டேன். பிறகு நடந்து வந்து (கோட்டை) வாசலில் அமர்ந்து கொண்டேன். ‘நான் அவனைக் கொன்று விட்டேன் என்று (உறுதியாக) அறியும் வரையில் நான் இந்த இரவில் (இங்கிருந்து) நகர மாட்டேன்’ என்று (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். பிறகு, அதிகாலையில் சேவல் கூவியபோது மரணச் செய்தி அறிவிப்பவன் கோட்டைச் சுவர் மீது நின்று, ‘ஹிஜாஸ் வாசிகளின் (பிரபல) வியாபாரி அபூ ராஃபிஉ இறந்துவிட்டார்’ என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் என் சகாக்களிடம் வந்து, ‘விரைவாகச் செல்லுங்கள். அபூ ராஃபிஉவை அல்லாஹ் கொன்றுவிட்டான்’ என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களை அடைந்து நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், ‘உன்னுடைய காலை நீட்டு’ என்று கூறினார்கள். நான் என் காலை நீட்டினேன். அதில் (தம் கரத்தால்) தடவிவிட்டார்கள். (என்னுடைய கால் குணமடைந்து) ஒருபோதும் நோய் காணாதது போல் அது மாறிவிட்டது.
Book :64

(புகாரி: 4039)

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ:

بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَبِي رَافِعٍ اليَهُودِيِّ رِجَالًا مِنَ الأَنْصَارِ، فَأَمَّرَ عَلَيْهِمْ عَبْدَ اللَّهِ بْنَ عَتِيكٍ، وَكَانَ أَبُو رَافِعٍ يُؤْذِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيُعِينُ عَلَيْهِ، وَكَانَ فِي حِصْنٍ لَهُ بِأَرْضِ الحِجَازِ، فَلَمَّا دَنَوْا مِنْهُ، وَقَدْ غَرَبَتِ الشَّمْسُ، وَرَاحَ النَّاسُ بِسَرْحِهِمْ، فَقَالَ عَبْدُ اللَّهِ لِأَصْحَابِهِ: اجْلِسُوا مَكَانَكُمْ، فَإِنِّي مُنْطَلِقٌ، وَمُتَلَطِّفٌ لِلْبَوَّابِ، لَعَلِّي أَنْ أَدْخُلَ، فَأَقْبَلَ حَتَّى دَنَا مِنَ البَابِ، ثُمَّ تَقَنَّعَ بِثَوْبِهِ كَأَنَّهُ يَقْضِي حَاجَةً، وَقَدْ دَخَلَ النَّاسُ، فَهَتَفَ بِهِ البَوَّابُ، يَا عَبْدَ اللَّهِ: إِنْ كُنْتَ تُرِيدُ أَنْ تَدْخُلَ فَادْخُلْ، فَإِنِّي أُرِيدُ أَنْ أُغْلِقَ البَابَ، فَدَخَلْتُ فَكَمَنْتُ، فَلَمَّا دَخَلَ النَّاسُ أَغْلَقَ البَابَ، ثُمَّ عَلَّقَ الأَغَالِيقَ عَلَى وَتَدٍ، قَالَ: فَقُمْتُ إِلَى الأَقَالِيدِ فَأَخَذْتُهَا، فَفَتَحْتُ البَابَ، وَكَانَ أَبُو رَافِعٍ يُسْمَرُ عِنْدَهُ، وَكَانَ فِي عَلاَلِيَّ لَهُ، فَلَمَّا ذَهَبَ عَنْهُ أَهْلُ سَمَرِهِ صَعِدْتُ إِلَيْهِ، فَجَعَلْتُ كُلَّمَا فَتَحْتُ بَابًا أَغْلَقْتُ عَلَيَّ مِنْ دَاخِلٍ، قُلْتُ: إِنِ القَوْمُ نَذِرُوا بِي لَمْ يَخْلُصُوا إِلَيَّ حَتَّى أَقْتُلَهُ، فَانْتَهَيْتُ إِلَيْهِ، فَإِذَا هُوَ فِي بَيْتٍ مُظْلِمٍ وَسْطَ عِيَالِهِ، لاَ أَدْرِي أَيْنَ هُوَ مِنَ البَيْتِ، فَقُلْتُ: يَا أَبَا رَافِعٍ، قَالَ: مَنْ هَذَا؟ فَأَهْوَيْتُ نَحْوَ الصَّوْتِ فَأَضْرِبُهُ ضَرْبَةً بِالسَّيْفِ وَأَنَا دَهِشٌ، فَمَا أَغْنَيْتُ شَيْئًا، وَصَاحَ، فَخَرَجْتُ مِنَ البَيْتِ، فَأَمْكُثُ غَيْرَ بَعِيدٍ، ثُمَّ دَخَلْتُ إِلَيْهِ، فَقُلْتُ: مَا هَذَا الصَّوْتُ يَا أَبَا رَافِعٍ؟ فَقَالَ: لِأُمِّكَ الوَيْلُ، إِنَّ رَجُلًا فِي البَيْتِ ضَرَبَنِي قَبْلُ بِالسَّيْفِ، قَالَ: فَأَضْرِبُهُ ضَرْبَةً أَثْخَنَتْهُ وَلَمْ أَقْتُلْهُ، ثُمَّ وَضَعْتُ ظِبَةَ السَّيْفِ فِي بَطْنِهِ حَتَّى أَخَذَ فِي ظَهْرِهِ، فَعَرَفْتُ أَنِّي قَتَلْتُهُ، فَجَعَلْتُ أَفْتَحُ الأَبْوَابَ بَابًا بَابًا، حَتَّى انْتَهَيْتُ إِلَى دَرَجَةٍ لَهُ، فَوَضَعْتُ رِجْلِي، وَأَنَا أُرَى أَنِّي قَدِ انْتَهَيْتُ إِلَى الأَرْضِ، فَوَقَعْتُ فِي لَيْلَةٍ مُقْمِرَةٍ، فَانْكَسَرَتْ سَاقِي فَعَصَبْتُهَا بِعِمَامَةٍ، ثُمَّ انْطَلَقْتُ حَتَّى جَلَسْتُ عَلَى البَابِ، فَقُلْتُ: لاَ أَخْرُجُ اللَّيْلَةَ حَتَّى أَعْلَمَ: أَقَتَلْتُهُ؟ فَلَمَّا صَاحَ الدِّيكُ قَامَ النَّاعِي عَلَى السُّورِ، فَقَالَ: أَنْعَى أَبَا رَافِعٍ تَاجِرَ أَهْلِ الحِجَازِ، فَانْطَلَقْتُ إِلَى أَصْحَابِي، فَقُلْتُ: النَّجَاءَ، فَقَدْ قَتَلَ اللَّهُ أَبَا رَافِعٍ، فَانْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَدَّثْتُهُ، فَقَالَ: «ابْسُطْ رِجْلَكَ» فَبَسَطْتُ رِجْلِي فَمَسَحَهَا، فَكَأَنَّهَا لَمْ أَشْتَكِهَا قَطُّ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.