Author: Farook

Bukhari-2984

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 125 ஒரு பெண், (வாகனத்தில்) தன் சகோதரனுக்குப் பின்னால் அமர்ந்து செல்வது.

2984. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்யச் சென்றபோது நான், ‘இறைத்தூதர் அவர்களே! தங்கள் தோழர்கள் ஹஜ் மற்றும் உம்ராவின் நற்பலனைப் பெற்றுத் திரும்புகிறார்கள். ஆனால், நானோ ஹஜ்ஜை விட அதிகமாக (உம்ரா எதையும்) செய்யவில்லையே!’ என்று (ஏக்கத்துடன்) கேட்டேன்.

நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘நீ (உம்ரா செய்யப்) போ! என்னிடம், ‘உன்னை (உன் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (வாகனத்தில் தனக்குப்) பின்னால் உட்கார வைத்துக் கொள்ளட்டும்’ என்று கூறிவிட்டு, அப்துர் ரஹ்மான் அவர்களை ‘தன்யீம்’ என்னுமிடத்திலிருந்து என்னை உம்ராவுக்கு அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டார்கள்.

நான் (உம்ராவை நிறைவேற்றிவிட்டுத் திரும்பி) வரும்வரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை எதிர்பார்த்து மக்காவின் மேற்பகுதியில் காத்திருந்தார்கள்.
Book : 56


يَا رَسُولَ اللَّهِ، يَرْجِعُ أَصْحَابُكَ بِأَجْرِ حَجٍّ وَعُمْرَةٍ، وَلَمْ أَزِدْ عَلَى الحَجِّ؟ فَقَالَ لَهَا: «اذْهَبِي، وَلْيُرْدِفْكِ عَبْدُ الرَّحْمَنِ»، فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ أَنْ يُعْمِرَهَا مِنَ التَّنْعِيمِ، فَانْتَظَرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَعْلَى مَكَّةَ حَتَّى جَاءَتْ


Bukhari-2983

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 124 பயண உணவை (வாகனத்தின் மீது வைத்து எடுத்துச் செல்ல முடியாத போது) தோள்களின் மீது வைத்து எடுத்துச் செல்வது.

2983. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் முந்நூறு பேர் எங்கள் பயண உணவை எங்கள் பிடரியில் சுமந்து கொண்டு (புனிதப் போருக்காகப்) புறப்பட்டோம். எங்கள் பயண உணவு (நாளாக, நாளாக) குறையலாயிற்று. எந்த அளவிற்கென்றால் நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பேரீச்சம் பழம் மட்டுமே உண்ண வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டோம்…

இதை ஜாபிர்(ரலி) அறிவித்துக் கொண்டிருந்தபோது ஒருவர், ‘அபூ அப்தில்லாஹ்வே! (ஒரு நாள் முழுவதற்கும்) ஒரு பேரீச்சம் பழம் ஒருவருக்கு எப்படிப் போதுமாகும்?’ என்று கேட்டார்.

நாங்கள் பயண உணவை இழந்தபோது மிகவும் கவலையடைந்தோம். இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்தபோது (திமிங்கல வகை) மீன் ஒன்றைக் கண்டோம். கடல் அதை (கரையில்) எறிந்து விட்டிருந்தது. நாங்கள் அதிலிருந்து பதினெட்டு நாள்கள் நாங்கள் விரும்பியவாறு உண்டோம்.
Book : 56


«خَرَجْنَا وَنَحْنُ ثَلاَثُ مِائَةٍ نَحْمِلُ زَادَنَا عَلَى رِقَابِنَا، فَفَنِيَ زَادُنَا حَتَّى كَانَ الرَّجُلُ مِنَّا يَأْكُلُ فِي كُلِّ يَوْمٍ تَمْرَةً»، قَالَ رَجُلٌ: يَا أَبَا عَبْدِ اللَّهِ، وَأَيْنَ كَانَتِ التَّمْرَةُ تَقَعُ مِنَ الرَّجُلِ؟ قَالَ: «لَقَدْ وَجَدْنَا فَقْدَهَا حِينَ فَقَدْنَاهَا، حَتَّى أَتَيْنَا البَحْرَ، فَإِذَا حُوتٌ قَدْ قَذَفَهُ البَحْرُ، فَأَكَلْنَا مِنْهُ ثَمَانِيَةَ عَشَرَ يَوْمًا مَا أَحْبَبْنَا»


Bukhari-2982

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2982. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

மக்களுடைய பயண உணவுகள் தீர்ந்து போய் வறுமை வாய்ப்பட்டார்கள்; எனவே, நபி(ஸல்) அவர்களிடம் தங்கள் ஒட்டகங்களை (உண்பதற்காக) அறுக்க அனுமதி கேட்டு வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். மக்களை (அவர்கள் திரும்பிச் செல்லும்போது வழியில்) உமர்(ரலி) கண்டார்கள். மக்கள் உமர்(ரலி) அவர்களுக்கு விபரத்தைத் தெரிவிக்கவே உமர்(ரலி), ‘உங்கள் ஒட்டகங்கள் (அறுத்து உண்ணப்பட்டுப்) போன பிறகு (நீண்ட தூரம் நடந்தே சென்றால்) நீங்கள் உயிர் பிழைப்பது எப்படி?’ என்று கேட்டார்கள்.

பிறகு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! மக்கள் தங்கள் ஒட்டகங்களை அறுத்து உண்ட பின்பு அவர்கள் (நடந்தே பயணம் சென்றால்) உயிர் பிழைப்பது எப்படி?’ என்று கேட்டார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘தங்கள் பயணச் சாதக் கட்டுகளில் எஞ்சியிருப்பவற்றைக் கொண்டு வரும்படி மக்களிடையே கூவி அழையுங்கள்’ என்று கூறிவிட்டு (அவையெல்லாம் கொண்டு வரப்பட்டவுடன்) அவற்றில் இறைவனின் பரக்கத் (எனும் அருள்வளத்)திற்காக பிரார்த்தித்தார்கள்.

பிறகு, மக்களைத் தம் பாத்திரங்களைக் கொண்டு வரும்படி அழைத்தார்கள். மக்கள் தங்கள் (கைகளால்) திருப்தியடையும் வரை அள்ளினார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்)

خَفَّتْ أَزْوَادُ النَّاسِ وَأَمْلَقُوا، فَأَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي نَحْرِ إِبِلِهِمْ فَأَذِنَ لَهُمْ، فَلَقِيَهُمْ عُمَرُ فَأَخْبَرُوهُ، فَقَالَ: مَا بَقَاؤُكُمْ بَعْدَ إِبِلِكُمْ؟ فَدَخَلَ عُمَرُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا بَقَاؤُهُمْ بَعْدَ إِبِلِهِمْ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَادِ فِي النَّاسِ يَأْتُونَ بِفَضْلِ أَزْوَادِهِمْ»، فَدَعَا وَبَرَّكَ عَلَيْهِ، ثُمَّ دَعَاهُمْ بِأَوْعِيَتِهِمْ، فَاحْتَثَى النَّاسُ حَتَّى فَرَغُوا، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ»


Bukhari-2981

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2981. சுவைத் இப்னு நுஃமான்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் கைபர் போர் நடந்த ஆண்டில் (கைபர் போருக்காகப்) புறப்பட்டேன். அவர்கள் ‘ஸஹ்பா’ எனுமிடத்தில் – இதுவும் கைபர் பகுதிக்கு உட்பட்டதே – இருந்தபோது அஸர் தொழுகையைத் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் உணவுகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்கு மாவு மட்டுமே) கொடுக்கப்பட்டது. அதை நாங்கள் மென்று உண்டோம்; (தண்ணீரும்) அருந்தினோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் எழுந்து, வாய் கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம். பிறகு (அனைவரும் சேர்ந்து) தொழுதோம்.
Book :56


«أَنَّهُ خَرَجَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كَانُوا بِالصَّهْبَاءِ وَهِيَ مِنْ خَيْبَرَ، وَهِيَ أَدْنَى خَيْبَرَ، فَصَلَّوُا الْعَصْرَ فَدَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالأَطْعِمَةِ، فَلَمْ يُؤْتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا بِسَوِيقٍ، فَلُكْنَا، فَأَكَلْنَا وَشَرِبْنَا، ثُمَّ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَضْمَضَ، وَمَضْمَضْنَا وَصَلَّيْنَا»


Bukhari-2980

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2980. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில், நாங்கள் மதீனா நகருக்குச் செல்லும்போது குர்பானி (தியாகப் பிராணியின்) இறைச்சிகளைப் பயண உணவாக எடுத்துச் செல்வோம்.

அத்தியாயம்: 56


«كُنَّا نَتَزَوَّدُ لُحُومَ الأَضَاحِيِّ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى المَدِينَةِ»


Bukhari-2979

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 123 புனிதப் போர் புரியச் செல்பவருக்குப் பயண உணவை எடுத்துச் செல்லுதல்.

அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் ஹஜ்ஜுக்காக (உணவு போன்ற) பயணச் சாதனங்களைச் கொண்டு செல்லுங்கள். எனினும், (அத்தகைய) பயணச் சாதனங்களில் மிக மேலானது இறை(யச்ச) உணர்வுதான். (2:197)

2979. அஸ்மா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய முனைந்தபோது, அவர்களின் பயண உணவை நான் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டில் தயாரித்தேன். அவர்களின் பயண உணவையும் (தண்ணீருக்கான) தோல் பையையும் (ஒட்டகத்தில் வைத்துக்) கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

எனவே, நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னுடைய இந்த இடுப்புக் கச்சைத் தவிர இதைக் கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை’ என்று கூறினேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘அதை இரண்டாகக் கிழித்து, ஒன்றினால் (தண்ணீருக்கான) தோல்பையையும் மற்றொன்றினால் பயண உணர்வையும் கட்டு’ என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். இதனால் தான் எனக்கு ‘இரட்டைக் கச்சுக்காரர்’ என்று பட்டப் பெயர் சூட்டப்பட்டது.
Book : 56


صَنَعْتُ سُفْرَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِ أَبِي بَكْرٍ، حِينَ أَرَادَ أَنْ يُهَاجِرَ إِلَى المَدِينَةِ، قَالَتْ: فَلَمْ نَجِدْ لِسُفْرَتِهِ، وَلاَ لِسِقَائِهِ مَا نَرْبِطُهُمَا بِهِ، فَقُلْتُ لِأَبِي بَكْرٍ: «وَاللَّهِ مَا أَجِدُ شَيْئًا أَرْبِطُ بِهِ إِلَّا نِطَاقِي»، قَالَ: فَشُقِّيهِ بِاثْنَيْنِ، فَارْبِطِيهِ: بِوَاحِدٍ السِّقَاءَ، وَبِالْآخَرِ السُّفْرَةَ، «فَفَعَلْتُ، فَلِذَلِكَ سُمِّيَتْ ذَاتَ النِّطَاقَيْنِ»


Bukhari-2978

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2978. அபூ சுஃப்யான்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் ஈலியா (ஜெரூசலம்) நகரில் இருந்தபோது ரோம (பைஸாந்தியப்) பேரரசர் ஹெராக்ளியஸ் எங்களைக் கூப்பிட்டனுப்பினார். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கடிதத்தை வரவழைத்தார். கடிதத்தைப் படித்து(க் காட்டி) முடித்தவுடன் அவரிடம் (இருந்த பிரமுகர்களிடையே) கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அதிகரித்துவிட்டது.

குரல்கள் உயர்ந்தன. நாங்கள் (அரசவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம். அப்போது நான் என் தோழர்களிடம், ‘அபூ சுப்ஷாவின் மகனுடைய (முஹம்மதுடைய) அந்தஸ்து உயர்ந்து விட்டிருக்கிறது. மஞ்சள் நிறத்தவரின் (கிழக்கு ஐரோப்பியர்களின் அதிபர் (கூட) அவருக்கு அஞ்சுகிறார்’ என்று கூறினேன்.
Book :56


أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ وَهُمْ بِإِيلِيَاءَ، ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا فَرَغَ مِنْ قِرَاءَةِ الكِتَابِ كَثُرَ عِنْدَهُ الصَّخَبُ، فَارْتَفَعَتِ الأَصْوَاتُ، وَأُخْرِجْنَا فَقُلْتُ لِأَصْحَابِي حِينَ أُخْرِجْنَا: «لَقَدْ أَمِرَ أَمْرُ ابْنِ أَبِي كَبْشَةَ إِنَّهُ يَخَافُهُ مَلِكُ بَنِي الأَصْفَرِ»


Bukhari-2977

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 122

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மாத காலப் பயணத் தொலைவுக்கு(ள் இருக்கும் நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் என்னைக் குறித்த) அச்ச உணர்வை விதைத்து அல்லாஹ் எனக்கு உதவி புரிந்துள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்: (சத்தியத்தை) நிராகரித்தவர்களின் உள்ளங்களில் விரைவில் நாம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவோம். ஏனெனில், (இறைவனுக்கு இணையானவை என்று நிரூபிக்கும்) எந்த ஆதாரத்தையும் எவற்றுக்கு அல்லாஹ் தரவில்லையோ அவற்றை அவனுடன் அவர்கள் இணையாக்கி விட்டார்கள். (3:151)

ஜாபிர் (ரலி) அவர்கள் (இதுபற்றி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

2977. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒருங்கிணைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் விதைக்கப்பட்டு எனக்கு உதவப்பட்டுள்ளது.

(ஒருமுறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய சாவிகள் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, “நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை (தோண்டி) வெளியே எடுத்து

«بُعِثْتُ بِجَوَامِعِ الكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، فَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ، فَوُضِعَتْ فِي يَدِي»

قَالَ أَبُو هُرَيْرَةَ: وَقَدْ ذَهَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنْتُمْ تَنْتَثِلُونَهَا


Bukhari-2976

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2976. நாஃபிஃ இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

ஸுபைர்(ரலி) அவர்களிடம் அப்பாஸ்(ரலி) (ஹஜூன் என்னுமிடத்தைச் சுட்டிக் காட்டி), ‘நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) உங்களை இங்கு தான் கொடியை நடச் சொன்னார்கள்’ என்று கூறினார்கள்.
Book :56


«هَا هُنَا أَمَرَكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَرْكُزَ الرَّايَةَ»


Bukhari-2975

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2975. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார்.
அலீ(ரலி) கைபர் போரின்போது நபி(ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. ‘நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே’ என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி(ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் மாலை நேரம் வந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்’ என்றோ, ‘அத்தகைய ஒருவர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்’ என்றோ அல்லது, ‘அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்’ என்றோ சொல்லிவிட்டு, ‘அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்’ என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ(ரலி) வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், ‘இதோ, அலீ அவர்கள்!’ என்று கூறினர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.
Book :56


كَانَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ تَخَلَّفَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خَيْبَرَ، وَكَانَ بِهِ رَمَدٌ، فَقَالَ: أَنَا أَتَخَلَّفُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ عَلِيٌّ فَلَحِقَ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا كَانَ مَسَاءُ اللَّيْلَةِ الَّتِي فَتَحَهَا فِي صَبَاحِهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَأُعْطِيَنَّ الرَّايَةَ – أَوْ قَالَ: لَيَأْخُذَنَّ – غَدًا رَجُلٌ يُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ، أَوْ قَالَ: يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، يَفْتَحُ اللَّهُ عَلَيْهِ “، فَإِذَا نَحْنُ بِعَلِيٍّ وَمَا نَرْجُوهُ، فَقَالُوا: هَذَا عَلِيٌّ، فَأَعْطَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَفَتَحَ اللَّهُ عَلَيْهِ


Next Page » « Previous Page