தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேத அறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும், அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையில் இருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. (எனவே,) அவர்கள் ‘ஹிரா’ குகையில் தனித்திருந்து பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுவந்தார்கள்.

பின்னர் தம் வீட்டாரிடம் திரும்பிவந்து, அதற்காக (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டுசெல்வார்கள். (அந்த உணவு தீர்ந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து அதைப் போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் பெற்றுச் செல்வார்கள். இந்நிலை, ‘ஹிரா’ குகையில் அவர்களுக்குச் சத்திய (வேத)ம் வரும்வரை நீடித்தது.

(ஒரு நாள்) அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “ஓதுவீராக” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்று சொன்னார்கள். (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்) அவர்களே (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்:

வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவுக்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு “ஓதுவீராக” என்றார். அப்போதும் “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். உடனே அவர் இரண்டாம் முறையாக என்னைப் பிடித்து, நான் திணறும் அளவுக்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு “ஓதுவீராக!” என்றார். அப்போதும் “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையாகக் கட்டித் தழுவினார்.

பின்னர் என்னை விட்டுவிட்டு, “படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை ‘அலக்’ (அட்டை போன்று ஒட்டிப்பிடித்துத் தொங்கும் கருவில்) இருந்து படைத்தான். ஓதுவீராக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி” எனும் இறைவசனங்களை (அல்குர்ஆன்: 96:1-5) அவர் ஓதினார்.

(தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:)

பிறகு (அச்சத்தால்) இதயம் படபடக்க அந்த வசனங்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து, “எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திவிட, அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு, “எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.

அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், “அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்,) தாங்கள் உறவுகளைச் சேர்ந்து வாழ்கிறீர்கள்; சுயகாலில் நிற்க முடியாதவர்களைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அஸத் பின் அப்துல்உஸ்ஸா என்பாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் சென்றார்கள்.

வரக்கா அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் (அரபி மற்றும்) எபிரேயு (ஹீப்ரு) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல்லாஹ் நாடிய அளவுக்கு எபிரேயு மொழியி(லிருந்து அரபி மொழியி)ல் எழுதுவார். அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.-

அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், “என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்கள் சகோதரர் புதல்வர் (முஹம்மத்) இடம் அவர் கூறுவதைக் கேளுங்கள்” என்றார்கள்.

அப்போது வரக்கா, நபி (ஸல்) அவர்களிடம், “என் சகோதரர் மகனே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவரத்தை அவரிடம் சொன்னார்கள்.

(இதைக் கேட்ட) வரக்கா, “(நீர் கண்ட) இவர்தான், (இறைத்தூதர்) மூஸாவிடம் இறைவன் அனுப்பிய வானவர் (ஜிப்ரீல்) ஆவார்” என்று நபியவர்களிடம் கூறி விட்டு, “(மகனே!) உம்மை உம்முடைய சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்தச் சமயத்தில் நான் இளைஞனாக (திடகாத்திரமானவனாக) இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே!” என்றார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(என் சமூக) மக்கள் என்னை (நாட்டைவிட்டு) வெளியேற்றவா செய்வார்கள்?” என்று கேட்க, வரக்கா, “ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத் தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுப்பணி பரவலாகும்)நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவி செய்வேன்” என்று சொன்னார்.

பின்னர் வரக்கா நீண்ட நாள் இருக்கவில்லை; இறந்துவிட்டார். (அந்த முதல் வஹீயுடன்) வேத அறிவிப்பு (சிறிது காலம்) நின்றுபோயிற்று.

அத்தியாயம்: 1

(புகாரி: 3)

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ

أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الوَحْيِ الرُّؤْيَا الصَّالِحَةُ فِي النَّوْمِ، فَكَانَ لاَ يَرَى رُؤْيَا إِلَّا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ، ثُمَّ حُبِّبَ إِلَيْهِ الخَلاَءُ، وَكَانَ يَخْلُو بِغَارِ حِرَاءٍ فَيَتَحَنَّثُ فِيهِ – وَهُوَ التَّعَبُّدُ – اللَّيَالِيَ ذَوَاتِ العَدَدِ قَبْلَ أَنْ يَنْزِعَ إِلَى أَهْلِهِ، وَيَتَزَوَّدُ لِذَلِكَ، ثُمَّ يَرْجِعُ إِلَى خَدِيجَةَ فَيَتَزَوَّدُ لِمِثْلِهَا، حَتَّى جَاءَهُ الحَقُّ وَهُوَ فِي غَارِ حِرَاءٍ، فَجَاءَهُ المَلَكُ فَقَالَ: اقْرَأْ، قَالَ: «مَا أَنَا بِقَارِئٍ»، قَالَ: ” فَأَخَذَنِي فَغَطَّنِي حَتَّى بَلَغَ مِنِّي الجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي، فَقَالَ: اقْرَأْ، قُلْتُ: مَا أَنَا بِقَارِئٍ، فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ حَتَّى بَلَغَ مِنِّي الجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي، فَقَالَ: اقْرَأْ، فَقُلْتُ: مَا أَنَا بِقَارِئٍ، فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّالِثَةَ ثُمَّ أَرْسَلَنِي، فَقَالَ: {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ. خَلَقَ الإِنْسَانَ مِنْ عَلَقٍ. اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ} [العلق: 2] “

فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْجُفُ فُؤَادُهُ، فَدَخَلَ عَلَى خَدِيجَةَ بِنْتِ خُوَيْلِدٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَ: «زَمِّلُونِي زَمِّلُونِي» فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ، فَقَالَ لِخَدِيجَةَ وَأَخْبَرَهَا الخَبَرَ: «لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي» فَقَالَتْ خَدِيجَةُ: كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتَكْسِبُ المَعْدُومَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ، فَانْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ حَتَّى أَتَتْ بِهِ وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ العُزَّى ابْنَ عَمِّ خَدِيجَةَ وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الجَاهِلِيَّةِ، وَكَانَ يَكْتُبُ الكِتَابَ العِبْرَانِيَّ، فَيَكْتُبُ مِنَ الإِنْجِيلِ بِالعِبْرَانِيَّةِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكْتُبَ، وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ،

فَقَالَتْ لَهُ خَدِيجَةُ: يَا ابْنَ عَمِّ، اسْمَعْ مِنَ ابْنِ أَخِيكَ، فَقَالَ لَهُ وَرَقَةُ: يَا ابْنَ أَخِي مَاذَا تَرَى؟ فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَبَرَ مَا رَأَى، فَقَالَ لَهُ وَرَقَةُ: هَذَا النَّامُوسُ الَّذِي نَزَّلَ اللَّهُ عَلَى مُوسَى، يَا لَيْتَنِي فِيهَا جَذَعًا، لَيْتَنِي أَكُونُ حَيًّا إِذْ يُخْرِجُكَ قَوْمُكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَ مُخْرِجِيَّ هُمْ»، قَالَ: نَعَمْ، لَمْ يَأْتِ رَجُلٌ قَطُّ بِمِثْلِ مَا جِئْتَ بِهِ إِلَّا عُودِيَ، وَإِنْ يُدْرِكْنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا. ثُمَّ لَمْ يَنْشَبْ وَرَقَةُ أَنْ تُوُفِّيَ، وَفَتَرَ الوَحْيُ


Bukhari-Tamil-3.
Bukhari-TamilMisc-3.
Bukhari-Shamila-3.
Bukhari-Alamiah-3.
Bukhari-JawamiulKalim-3.




2 comments on Bukhari-3

  1. இத்தனைராவிகள் வரக்காவை பற்றி பெருமானார் சொன்ன சிறப்பின் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள்:

    1. ورقة بن نوفل
    2. عائشة أم المؤمنين
    3. ورقة بن نوفل
    4. أسماء
    5. جابر بن عبدالله
    6. علي بن أبي طالب
    7. ابن عباس
    8. عمرو بن شرحبيل
    .عروة بن الزبير
    (நபி பிறக்கும் போது வரகாவிற்க்கு உண்மை மார்க்கத்தை தேடுவதின் தேட்டம் பிறந்தது)

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இந்த அனைத்து செய்திகளையும் அறிவிப்பாளர்தொடருடன், நூல் பெயருடன் தொகுத்து அனுப்பவும். இன்ஷா அல்லாஹ் பார்க்கிறோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.