தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3581

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துர் ரஹ்மான் இப்னு அபூ பக்ர் (ரலி) கூறினார்.

திண்ணைத் தோழர்கள் ஏழைகளாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை, ‘எவரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ, அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரைத் தம்முடன்) அழைத்துச் செல்லட்டும். எவரிடம் நான்கு பேருக்கான உணவு இருக்கிறதோ அவர் தம்முடன் ஐந்தாமவரையும் ஆறாமவரையும் அழைத்துச் செல்லட்டும்’ என்று கூறினார்கள். அல்லது நபி (ஸல்) அவர்கள் எப்படிக் கூறினார்களோ அதைப் போன்று.

அபூ பக்ர் (ரலி) மூன்று பேரை அழைத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்து பேருடன் நடந்தார்கள். (என் தந்தை) அபூ பக்ர் (ரலி) மூன்று பேரை அழைத்து வர, அப்போது வீட்டில் நானும் (அப்துர் ரஹ்மான்), என் தந்தையும் (அபூ பக்ர்) , என் தாயும் (உம்மு ரூமான்), எங்கள் வீட்டிற்கும், (என் தந்தை) அபூ பக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்கும் கூட்டாகப் பணி செய்து வந்த வந்த பணிப்பெண்ணும் தான் இருந்தோம்.

‘என் மனைவியும்…’ என்று அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர் (ரலி) கூறினார்களா என்று எனக்குத் தெரியாது. (சந்தேகமாக இருக்கிறது) – என அறிவிப்பாளர் அபூ உஸ்மான் (ரஹ்) கூறினார்.

அபூ பக்ர் (ரலி) (விருந்தினருக்கு உணவளிக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு) நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு (நபியவர்களுடன்) இஷா தொழுகை தொழும் வரை அவர்களிடம் தங்கினார்கள். பிறகு (தொழுகையிலிருந்து) திரும்பி வந்து நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு அருந்தும் வரை (அங்கேயே) தங்கியிருந்தார்கள். (இவ்வாறு) இரவிலிருந்து அல்லாஹ் நாடிய ஒரு பகுதி கழிந்த பிறகு அபூ பக்ர்(ரலி) (தம் வீட்டிற்கு) வந்தார்கள்.

அவர்களின் மனைவி அவர்களிடம் உங்கள் விருந்தாளிகளை… அல்லது உங்கள் விருந்தாளியை உபசரிக்க வராமல் தாமதமானதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டார்கள். அபூ பக்ர் (ரலி) ‘விருந்தினருக்கு நீ இரவு உணவை அளித்தாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘நீங்கள் வரும் வரை உண்ண முடியாதென்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். (நம் வீட்டார்) அவர்களுக்கு முன் உணவை வைத்து உண்ணும்படி கூறியும் அவர்கள் (உண்ண மறுத்து) அவர்களை சும்மாயிருக்கச் செய்து விட்டனர்’ என்று பதிலளித்தார்கள்.

(என் தந்தை அபூ பக்ர் (ரலி) நான் விருந்தாளிகளைச் சரியாக கவனிக்கவில்லை என்று என்னைக் கண்டிப்பார்கள் என்றஞ்சி) நான் சென்று ஒளிந்து கொண்டேன். அவர்கள், ‘மடையா!’ (என்று கோபத்துடன்) அழைத்து, ‘உன் மூக்கறுந்து போக!’ என்று திட்டினார்கள். (தோழர்களை நோக்கி,) ‘நீங்கள் உண்ணுங்கள்’ என்று கூறிவிட்டு (தம் வீட்டாரை நோக்கி, ‘என்னை எதிர்பார்த்துத் தானே இவ்வளவு தாமதம் செய்தீர்கள்!) நான் ஒருபோதும் இதை உண்ண மாட்டேன்’ என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் ஒரு கவளத்தை எடுக்கும் போதெல்லாம் அதன் கீழ்ப்பகுதியிலிருந்து அதைவிட அதிகமாகிப் பெருகிக் கொண்டே வந்தது. இறுதியில் அவர்கள் வயிறு நிரம்பினர். அப்போது அந்த உணவு முன்பிருந்ததை விட அதிகமாகி விட்டிருந்தது. அபூ பக்ர்(ரலி) அதைப் பார்த்தார்கள். அப்போது அது முன்பிருந்த அளவு, அல்லது அதை விட அதிகமாக தென்பட்டது. உடனே அவர்கள் தம் துணைவியாரிடம் ‘பனூ ஃபிராஸ் குலத்தாரின் சகோதரியே! (என்ன இது?)’ என்று கேட்க அவர்கள், ‘என் கண் குளிர்ச்சியின் மீதாணையாக! இந்த உணவு மூன்று மடங்கு அதிகமாகி விட்டிருக்கிறது!’ என்று கூறினார்கள். அதிலிருந்து அபூ பக்கர் (ரலி) அவர்களும் உண்டார்கள்.

மேலும், ‘(நான் ஒருபோதும் உண்ணமாட்டேன் என்று என்னை சத்தியம் செய்ய வைத்தது) ஷைத்தான் தான்’ என்று கூறினார்கள். பிறகு அதிலிருந்து (மேலும்) ஒரு கவளம் உண்டார்கள். பிறகு, அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றார்கள். பிறகு, அது அவர்களிடம் இருக்கலாயிற்று.

எங்களுக்கும் ஒரு சமுதாயத்திற்குமிடையே சமாதான ஒப்பந்தம் இருந்து வந்தது. ஒப்பந்தக் காலம் முடிவடைந்து விட்டது. (இனி அவர்கள் போருக்கு வந்தால், அவர்களை எதிர் கொள்வதற்காக), நபி (ஸல்) அவர்கள் எங்களை பன்னிரண்டு பேராக பிரித்து ஒவ்வொருவரிடமும் சில படை வீரர்களை ஒப்படைத்தார்கள்.

ஒவ்வொருவருடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். எனினும் நபி (ஸல்) அவர்கள், படையினருடன் ( அந்த உணவிலிருந்து) அவர்களின் பங்கு (உணவு)தனையும் கொடுத்தனுப்பினார்கள். அவர்கள் அனைவரும் (அதிலிருந்து) உண்டார்கள்.

மற்றோர் அறிவிப்பில், (‘எங்களைப் பன்னிரண்டு பேராகப் பிரித்து’ என்பதற்கு பதிலாக,) ‘எங்களில் பன்னிரண்டு பேரைத் தளபதிகளாக்கி’ என்று இடம் பெற்றுள்ளது.
Book :61

(புகாரி: 3581)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، أَنَّهُ حَدَّثَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ أَصْحَابَ الصُّفَّةِ كَانُوا أُنَاسًا فُقَرَاءَ، وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَرَّةً: «مَنْ كَانَ عِنْدَهُ طَعَامُ اثْنَيْنِ فَلْيَذْهَبْ بِثَالِثٍ، وَمَنْ كَانَ عِنْدَهُ طَعَامُ أَرْبَعَةٍ فَلْيَذْهَبْ بِخَامِسٍ أَوْ سَادِسٍ» أَوْ كَمَا قَالَ: وَأَنَّ أَبَا بَكْرٍ جَاءَ بِثَلاَثَةٍ، وَانْطَلَقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَشَرَةٍ، وَأَبُو بَكْرٍ ثَلاَثَةً، قَالَ: فَهُوَ أَنَا وَأَبِي وَأُمِّي، وَلاَ أَدْرِي هَلْ قَالَ: امْرَأَتِي وَخَادِمِي، بَيْنَ بَيْتِنَا وَبَيْنَ بَيْتِ أَبِي بَكْرٍ، وَأَنَّ أَبَا بَكْرٍ تَعَشَّى عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ لَبِثَ حَتَّى صَلَّى العِشَاءَ، ثُمَّ رَجَعَ فَلَبِثَ حَتَّى تَعَشَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ بَعْدَ مَا مَضَى مِنَ اللَّيْلِ مَا شَاءَ اللَّهُ، قَالَتْ لَهُ امْرَأَتُهُ: مَا حَبَسَكَ عَنْ أَضْيَافِكَ أَوْ ضَيْفِكَ؟، قَالَ: أَوَعَشَّيْتِهِمْ؟ قَالَتْ: أَبَوْا حَتَّى تَجِيءَ، قَدْ عَرَضُوا عَلَيْهِمْ فَغَلَبُوهُمْ، فَذَهَبْتُ فَاخْتَبَأْتُ، فَقَالَ يَا غُنْثَرُ، فَجَدَّعَ وَسَبَّ، وَقَالَ: كُلُوا، وَقَالَ: لاَ أَطْعَمُهُ أَبَدًا، قَالَ: وَايْمُ اللَّهِ، مَا كُنَّا نَأْخُذُ مِنَ اللُّقْمَةِ إِلَّا رَبَا مِنْ أَسْفَلِهَا أَكْثَرُ مِنْهَا حَتَّى شَبِعُوا، وَصَارَتْ أَكْثَرَ مِمَّا كَانَتْ قَبْلُ، فَنَظَرَ أَبُو بَكْرٍ فَإِذَا شَيْءٌ أَوْ أَكْثَرُ، قَالَ لِامْرَأَتِهِ: يَا أُخْتَ بَنِي فِرَاسٍ، قَالَتْ : لاَ وَقُرَّةِ عَيْنِي، لَهِيَ الآنَ أَكْثَرُ مِمَّا قَبْلُ بِثَلاَثِ مَرَّاتٍ، فَأَكَلَ مِنْهَا أَبُو بَكْرٍ وَقَالَ: إِنَّمَا كَانَ الشَّيْطَانُ، يَعْنِي يَمِينَهُ، ثُمَّ أَكَلَ مِنْهَا لُقْمَةً، ثُمَّ حَمَلَهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَصْبَحَتْ عِنْدَهُ، وَكَانَ بَيْنَنَا وَبَيْنَ قَوْمٍ عَهْدٌ، فَمَضَى الأَجَلُ فَتَفَرَّقْنَا اثْنَا عَشَرَ رَجُلًا، مَعَ كُلِّ رَجُلٍ مِنْهُمْ أُنَاسٌ، اللَّهُ أَعْلَمُ كَمْ مَعَ كُلِّ رَجُلٍ، غَيْرَ أَنَّهُ بَعَثَ مَعَهُمْ، قَالَ: أَكَلُوا مِنْهَا أَجْمَعُونَ، أَوْ كَمَا قَالَ وَغَيْرُهُ يَقُولُ فَعَرَفْنَا مِنَ العِرَافَةِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.