Category: முஸ்லிம்

Muslim-5451

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5451. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று காட்சியளிப்பார்கள். அவர்களுக்குப் பிறகு இன்னும் பல படித்தரங்களும் உண்டு.

(சொர்க்கத்தில்) அவர்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். சளி துப்பவுமாட்டார்கள். அவர்களின் (தலைவாரும்) சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகில் குச்சியால் எரிக்கப்படும். அவர்களுடைய வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்கள் அனைவரது குணமும் ஒரே மனிதரின் குணத்தைப் போன்றிருக்கும். அவர்கள் தம் தந்தை ஆதம் (அலை) அவர்களைப் போன்று அறுபது முழம் உயரம் கொண்டவர்களாயிருப்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا، وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَّلُ زُمْرَةٍ تَلِجُ الْجَنَّةَ، صُوَرُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، لَا يَبْصُقُونَ فِيهَا وَلَا يَمْتَخِطُونَ وَلَا يَتَغَوَّطُونَ فِيهَا، آنِيَتُهُمْ وَأَمْشَاطُهُمْ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ، وَمَجَامِرُهُمْ مِنَ الْأَلُوَّةِ، وَرَشْحُهُمُ الْمِسْكُ وَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمْ زَوْجَتَانِ، يُرَى مُخُّ سَاقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ، مِنَ الْحُسْنِ، لَا اخْتِلَافَ بَيْنَهُمْ وَلَا تَبَاغُضَ، قُلُوبُهُمْ قَلْبٌ وَاحِدٌ، يُسَبِّحُونَ اللهَ بُكْرَةً وَعَشِيًّا»


Muslim-5450

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5450. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று (அழகாகத்) தோற்றமளிப்பார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று காட்சியளிப்பார்கள். சொர்க்கத்தில் அவர்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். எச்சில் துப்பவுமாட்டார்கள்.

அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களது வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அவர்களுடைய துணைவியர் கண்ணழகுக் கன்னியர் (அல்ஹூருல் ஈன்) ஆவர். அவர்கள் அனைவரது குணமும் ஒரே மனிதரின் குணமாகவே அமைந்திருக்கும். அவர்கள் தம் தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரம் கொண்டவர்களாயிருப்பார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 51


«إِنَّ أَوَّلَ زُمْرَةٍ يَدْخُلُونَ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، وَالَّذِينَ يَلُونَهُمْ عَلَى أَشَدِّ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً، لَا يَبُولُونَ وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَمْتَخِطُونَ وَلَا يَتْفُلُونَ، أَمْشَاطُهُمُ الذَّهَبُ وَرَشْحُهُمُ الْمِسْكُ، وَمَجَامِرُهُمُ الْأَلُوَّةُ، وَأَزْوَاجُهُمُ الْحُورُ الْعِينُ، أَخْلَاقُهُمْ عَلَى خُلُقِ رَجُلٍ وَاحِدٍ عَلَى صُورَةِ أَبِيهِمْ آدَمَ سِتُّونَ ذِرَاعًا فِي السَّمَاءِ»


Muslim-5449

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினரின் முகம் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்றிருக்கும் என்பதும்,அவர்களின் இதர தன்மைகளும், அவர்களின் துணைவியர் பற்றிய குறிப்பும்.

5449. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) மக்கள், “சொர்க்கத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் ஆண்களா, அல்லது பெண்களா?” என்று பெருமையுடன் பேசிக்கொண்டிருந்தனர்; அல்லது விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அபுல்காசிம் (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர்,பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே நுழைபவர்கள்,வானில் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரு துணைவியர் இருப்பர். அப்பெண்களின் காலின் எலும்பு மஜ்ஜை அவர்களது (கால்) சதைக்கு அப்பாலிருந்து (அவர்களது பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். சொர்க்கத்தில் துணைவி இல்லாத எவரும் இருக்கமாட்டார்”

إِمَّا تَفَاخَرُوا وَإِمَّا تَذَاكَرُوا: الرِّجَالُ فِي الْجَنَّةِ أَكْثَرُ أَمِ النِّسَاءُ؟ فَقَالَ أَبُو هُرَيْرَةَ: أَوَ لَمْ يَقُلْ أَبُو الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَوَّلَ زُمْرَةٍ تَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، وَالَّتِي تَلِيهَا عَلَى أَضْوَإِ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ، لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ زَوْجَتَانِ اثْنَتَانِ، يُرَى مُخُّ سُوقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ، وَمَا فِي الْجَنَّةِ أَعْزَبُ؟»

– حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ: اخْتَصَمَ الرِّجَالُ وَالنِّسَاءُ: أَيُّهُمْ فِي الْجَنَّةِ أَكْثَرُ؟ فَسَأَلُوا أَبَا هُرَيْرَةَ فَقَالَ: قَالَ أَبُو الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ


Muslim-5448

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

சொர்க்கத்திலுள்ள சந்தையும் அதில் சொர்க்கவாசிகள் அடைந்துகொள்ளும் அருட்கொடையும் அலங்காரமும்.

5448. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.

அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறுவர்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள்

إِنَّ فِي الْجَنَّةِ لَسُوقًا، يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ، فَتَهُبُّ رِيحُ الشَّمَالِ فَتَحْثُو فِي وُجُوهِهِمْ وَثِيَابِهِمْ، فَيَزْدَادُونَ حُسْنًا وَجَمَالًا، فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ وَقَدِ ازْدَادُوا حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُ لَهُمْ أَهْلُوهُمْ: وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا، فَيَقُولُونَ: وَأَنْتُمْ، وَاللهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا


Muslim-5447

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5

நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும் தியாகம் செய்ய விரும்புவோர் பற்றிய குறிப்பு.

5447. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் என்னை ஆழமாக நேசிப்போரில் சிலர் எனக்குப்பின் தோன்றுவார்கள். அவர்களில் ஒருவர் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும்கூடத் தியாகம் செய்ய விரும்புவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 51


«مِنْ أَشَدِّ أُمَّتِي لِي حُبًّا، نَاسٌ يَكُونُونَ بَعْدِي، يَوَدُّ أَحَدُهُمْ لَوْ رَآنِي بِأَهْلِهِ وَمَالِهِ»


Muslim-5446

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5446. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகள் தமக்கு மேலேயுள்ள (சிறப்பு) அறைகளில் வசிப்பவர்களை,அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (தகுதியில்) தமக்கும் அவர்களுக்குமிடையே ஏற்றத்தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டுதான்) அப்படிப் பார்ப்பார்கள்” என்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை நபிமார்களின் தங்குமிடங்கள் தானே? மற்றவர்கள் அவற்றை அடைய முடியாதுதானே?” என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை. என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என (முறையாக) ஏற்றுக்கொண்ட மக்களே ஆவர்” என்று பதிலளித்தார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 51


«إِنَّ أَهْلَ الْجَنَّةِ لَيَتَرَاءَوْنَ أَهْلَ الْغُرَفِ مِنْ فَوْقِهِمْ، كَمَا تَتَرَاءَوْنَ الْكَوْكَبَ الدُّرِّيَّ الْغَابِرَ مِنَ الْأُفُقِ مِنَ الْمَشْرِقِ أَوِ الْمَغْرِبِ، لِتَفَاضُلِ مَا بَيْنَهُمْ» قَالُوا: يَا رَسُولَ اللهِ تِلْكَ مَنَازِلُ الْأَنْبِيَاءِ لَا يَبْلُغُهَا غَيْرُهُمْ، قَالَ «بَلَى، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ رِجَالٌ آمَنُوا بِاللهِ وَصَدَّقُوا الْمُرْسَلِينَ»


Muslim-5445

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

சொர்க்கவாசி(களில் கீழ்த் தட்டில் இருப்பவர்)கள் (மேல்)அறைகளில் உள்ளவர்களை வானிலுள்ள நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பது.

5445. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கவாசி(களில் கீழ்த் தட்டில் இருப்பவர்)கள் மேல்அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இந்த ஹதீஸை நுஅமான் பின் அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு) “கிழக்கு அடிவானில், அல்லது மேற்கு அடிவானில் நீங்கள் ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று” என்று (கூடுதலாக) அறிவித்ததை நான் கேட்டேன்.

«إِنَّ أَهْلَ الْجَنَّةِ لَيَتَرَاءَوْنَ الْغُرْفَةَ فِي الْجَنَّةِ كَمَا تَرَاءَوْنَ الْكَوْكَبَ فِي السَّمَاءِ»

– قَالَ: فَحَدَّثْتُ بِذَلِكَ النُّعْمَانَ بْنَ أَبِي عَيَّاشٍ، فَقَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: كَمَا تَرَاءَوْنَ الْكَوْكَبَ الدُّرِّيَّ فِي الْأُفُقِ الشَّرْقِيِّ أَوِ الْغَرْبِيِّ

– وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَبِي حَازِمٍ، بِالْإِسْنَادَيْنِ جَمِيعًا، نَحْوَ حَدِيثِ يَعْقُوبَ