Category: முஸ்லிம்

Muslim-2176

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2176. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் “லைலத்துல் கத்ர்” இரவு குறித்துக் கூறுகையில், “அல்லாஹ்வின் மீதாணையாக! அது (எந்த இரவு என்பது) பற்றி நான் நன்கறிவேன்” என்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனது அறிவுக்கு எட்டியவரையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று வழிபடுமாறு எங்களைப் பணித்த அந்த இரவு இருபத்தேழாவது இரவேயாகும் (என்று உபை (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்) என்றே கருதுகிறேன்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று வழிபடுமாறு எங்களைப் பணித்த அந்த இரவு” எனும் இந்த வாசகத்தில்தான் ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஐயம் தெரிவித்தார்கள். அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்களிடமிருந்து என் நண்பர் ஒருவரே இதை எனக்கு அறிவித்தார் என ஷுஅபா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Book : 13


قَالَ أُبَيٌّ فِي لَيْلَةِ الْقَدْرِ: وَاللهِ، إِنِّي لَأَعْلَمُهَا، – قَالَ شُعْبَةُ: – «وَأَكْبَرُ عِلْمِي هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقِيَامِهَا، هِيَ لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ» وَإِنَّمَا شَكَّ شُعْبَةُ فِي هَذَا الْحَرْفِ: هِيَ اللَّيْلَةُ الَّتِي أَمَرَنَا بِهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَحَدَّثَنِي بِهَا صَاحِبٌ لِي عَنْهُ


Muslim-2175

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2175. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், “தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் “வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்” என்று கூறுகிறாரே?” என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், “இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! மக்கள் (மற்ற நாட்களில் வழி பாடுகளில் ஈடுபடாமல்) அசட்டு நம்பிக்கையோடு இருந்துவிடக்கூடாது என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இருபத்தேழாவது இரவுதான் என்பதை இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள்” என்று பதிலளித்தார்கள். பிறகு “அல்லாஹ் நாடினால்” என்று கூறாமல் “அது (ரமளானின்) இருபத்தேழாவது இரவே ஆகும்” என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். நான், “அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் “அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்” என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்துகொண்டேன்)” என்றார்கள்.

سَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ رَضِيَ اللهُ عَنْهُ، فَقُلْتُ: إِنَّ أَخَاكَ ابْنَ مَسْعُودٍ يَقُولُ: مَنْ يَقُمِ الْحَوْلَ يُصِبْ لَيْلَةَ الْقَدْرِ؟ فَقَالَ رَحِمَهُ اللهُ: أَرَادَ أَنْ لَا يَتَّكِلَ النَّاسُ، أَمَا إِنَّهُ قَدْ عَلِمَ أَنَّهَا فِي رَمَضَانَ، وَأَنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ، وَأَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ، ثُمَّ حَلَفَ لَا يَسْتَثْنِي، أَنَّهَا لَيْلَةُ سَبْعٍ وَعِشْرِينَ، فَقُلْتُ: بِأَيِّ شَيْءٍ تَقُولُ ذَلِكَ؟ يَا أَبَا الْمُنْذِرِ، قَالَ: بِالْعَلَامَةِ، أَوْ بِالْآيَةِ الَّتِي «أَخْبَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا تَطْلُعُ يَوْمَئِذٍ، لَا شُعَاعَ لَهَا»