தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4502

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஹிஷாம் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமை அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அப்போது அவர்கள் தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அப்போது வீட்டின் மூலையிலிருந்த பேரீச்சமர காய்ந்த குச்சிகளுக்கு இடையிலிருந்து ஏதோ அசையும் சப்தத்தை நான் கேட்டேன். உடனே நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒரு பாம்பு இருந்தது. அதைக் கொல்வதற்காக நான் துள்ளிக் குதித்து எழுந்தேன்.

உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் அமருமாறு எனக்குச் சைகை செய்தார்கள். ஆகவே, நான் அமர்ந்துகொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபின் அவ்வீட்டிலிருந்த ஓர் அறையை எனக்குச் சுட்டிக்காட்டி, “இந்த அறையை நீர் காண்கிறீரா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

இந்த அறையில் புதிதாகத் திருமணமான எங்கள் இளைஞர் ஒருவர் இருந்தார். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அகழ்ப்போருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, அந்த இளைஞர் நண்பகல் நேரங்களில் தம் வீட்டாரிடம் திரும்பிச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். (அவர் திரும்பிச் செல்லப்போனபோது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமது ஆயுதத்தை உம்முடனேயே வைத்துக்கொள். ஏனெனில், பனூ குறைழா யூதர்களை உம்முடைய விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். அவ்வாறே அந்த மனிதர் (தம்முடன்) ஆயுதத்தை எடுத்துக்கொண்டார்.

பிறகு அவர் திரும்பி வந்தபோது அவரது (புது) மனைவி வீட்டு வாசலில் இரு நிலைக் கால்களுக்கிடையே நின்றுகொண்டிருந்தாள். உடனே அவர் அவள்மீது எறிவதற்காக ஈட்டியை நோக்கித் தமது கையைக் கொண்டு சென்றார். உடனே அவருடைய மனைவிக்கு ரோஷம் ஏற்பட்டு, “ஈட்டி எறிவதை நிறுத்துங்கள். (முதலில்) வீட்டுக்குள் நுழைந்து,நான் வெளியே வந்து நின்றதற்கு என்ன காரணம் என்பதைப் பாருங்கள்” என்று கூறினாள். அவ்வாறே அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது, அங்கு மிகப் பெரிய பாம்பு ஒன்று படுக்கை விரிப்பின் மீது சுருண்டு கிடந்தது.

உடனே அவர் அதன் அருகில் ஈட்டியைக் கொண்டுசென்று (அதன் மீது ஈட்டியைச் செலுத்தி) அதன் உடலுக்குள் ஈட்டியைச் செருகினார். பிறகு அறையிலிருந்து வெளியே வந்து வீட்டி(ன் வளாகத்தி)ல் அந்த ஈட்டியை நட்டு வைத்தார். அந்த ஈட்டியில் கிடந்து பாம்பு துடித்தது. பிறகு அவ்விருவரில் யார் முதலில் இறந்தார்கள். அந்த பாம்பா? அல்லது அந்த இளைஞரா என்பது தெரியவில்லை. (பாம்பும் இளைஞரும் இருவருமே இறந்துவிட்டனர்.)

உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தகவல் தெரிவித்தோம்; “அவரை (மீண்டும்) உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்கள் நண்பருக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்” என்று சொன்னார்கள்.

பிறகு “மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் (பாம்பு வடிவத்தில்) கண்டால், அதற்கு நீங்கள் (வெளியேறுமாறு) மூன்று நாட்கள் அறிவிப்புச் செய்யுங்கள். அதற்குப் பின்னரும் அது உங்களுக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான்தான்” என்றார்கள்.

Book : 39

(முஸ்லிம்: 4502)

وحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ صَيْفِيٍّ – وَهُوَ عِنْدَنَا مَوْلَى ابْنِ أَفْلَحَ – أَخْبَرَنِي أَبُو السَّائِبِ، مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ

أَنَّهُ دَخَلَ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فِي بَيْتِهِ، قَالَ: فَوَجَدْتُهُ يُصَلِّي، فَجَلَسْتُ أَنْتَظِرُهُ حَتَّى يَقْضِيَ صَلَاتَهُ، فَسَمِعْتُ تَحْرِيكًا فِي عَرَاجِينَ فِي نَاحِيَةِ الْبَيْتِ، فَالْتَفَتُّ فَإِذَا حَيَّةٌ فَوَثَبْتُ لِأَقْتُلَهَا، فَأَشَارَ إِلَيَّ أَنِ اجْلِسْ فَجَلَسْتُ، فَلَمَّا انْصَرَفَ أَشَارَ إِلَى بَيْتٍ فِي الدَّارِ، فَقَالَ: أَتَرَى هَذَا الْبَيْتَ؟ فَقُلْتُ: نَعَمْ، قَالَ: كَانَ فِيهِ فَتًى مِنَّا حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ، قَالَ: فَخَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْخَنْدَقِ فَكَانَ ذَلِكَ الْفَتَى يَسْتَأْذِنُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنْصَافِ النَّهَارِ فَيَرْجِعُ إِلَى أَهْلِهِ، فَاسْتَأْذَنَهُ يَوْمًا، فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خُذْ عَلَيْكَ سِلَاحَكَ، فَإِنِّي أَخْشَى عَلَيْكَ قُرَيْظَةَ، فَأَخَذَ الرَّجُلُ سِلَاحَهُ، ثُمَّ رَجَعَ فَإِذَا امْرَأَتُهُ بَيْنَ الْبَابَيْنِ قَائِمَةً فَأَهْوَى إِلَيْهَا الرُّمْحَ لِيَطْعُنَهَا بِهِ وَأَصَابَتْهُ غَيْرَةٌ، فَقَالَتْ لَهُ: اكْفُفْ عَلَيْكَ رُمْحَكَ وَادْخُلِ الْبَيْتَ حَتَّى تَنْظُرَ مَا الَّذِي أَخْرَجَنِي، فَدَخَلَ فَإِذَا بِحَيَّةٍ عَظِيمَةٍ مُنْطَوِيَةٍ عَلَى الْفِرَاشِ فَأَهْوَى إِلَيْهَا بِالرُّمْحِ فَانْتَظَمَهَا بِهِ، ثُمَّ خَرَجَ فَرَكَزَهُ فِي الدَّارِ فَاضْطَرَبَتْ عَلَيْهِ، فَمَا يُدْرَى أَيُّهُمَا كَانَ أَسْرَعَ مَوْتًا الْحَيَّةُ أَمِ الْفَتَى، قَالَ: فَجِئْنَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْنَا ذَلِكَ لَهُ وَقُلْنَا ادْعُ اللهَ يُحْيِيهِ لَنَا فَقَالَ: «اسْتَغْفِرُوا لِصَاحِبِكُمْ» ثُمَّ قَالَ: «إِنَّ بِالْمَدِينَةِ جِنًّا قَدْ أَسْلَمُوا، فَإِذَا رَأَيْتُمْ مِنْهُمْ شَيْئًا، فَآذِنُوهُ ثَلَاثَةَ أَيَّامٍ، فَإِنْ بَدَا لَكُمْ بَعْدَ ذَلِكَ، فَاقْتُلُوهُ، فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ»


Tamil-4502
Shamila-2236
JawamiulKalim-4157




9 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-2798 , அஹ்மத்-11090 , 11215 , 11369 , முஸ்லிம்-4502 , 4503 , 4504 , அபூதாவூத்-5256 , 5257 , 5258 , 5259 , திர்மிதீ-1484 ,

மேலும் பார்க்க: புகாரி-3297 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.