தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3600

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் பூமியில் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் செயல்களைப் பதிவு செய்யும் வானவர்களை விட கூடுதல் சிறப்புப் பெற்றவர்கள். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தினரை அவர்கள் கண்டால், “நீங்கள் தேடிக்கொண்டிருப்பதன் பக்கம் விரைந்து வாருங்கள்” என்று ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வார்கள். அப்போது அங்கு வருகை தரும் அவ்வானவர்கள் அம்மக்களை முதல் வானம் வரை சூழ்ந்துகொள்வார்கள்.

அந்நேரத்தில் அல்லாஹ் (வானவர்களிடம்) “என் அடியார்கள் என்ன செய்து கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் விட்டு வந்தீர்கள்?” என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், “உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும் உன்னை நினைவுகூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அம்மக்களை விட்டு வந்தோம்” என்று பதில் கூறுவார்கள். அப்போது அல்லாஹ், “அவர்கள் என்னைப் பார்த்துள்ளார்களா?” என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், “இல்லை” என்பர். அப்போது அல்லாஹ் “அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்” என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், “அம்மக்கள் உன்னைப் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னைப் புகழ்ந்து, பெருமைப்படுத்தி, நினைவுகூர்ந்து போற்றிக் கொண்டிருப்பார்கள்” என்று சொல்வார்கள்.

அப்போது அல்லாஹ், “அம்மக்கள் என்ன வேண்டுகின்றார்கள்?” எனக் கேட்பான். அதற்கு வானவர்கள், “சொர்க்கத்தை வேண்டுகின்றார்கள்” என்று கூறுவர். “அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என அல்லாஹ் கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை” என்பார்கள். அப்போது அல்லாஹ், “அதனை அவர்கள் பார்த்திருந்தால் நிலைமை எவ்வாறிருக்கும்” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், அம்மக்கள் அதனைப் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது பேராசை கொண்டு அதிக வேட்கையுடன் வேண்டுவார்கள்” என்று கூறுவார்கள்.

பிறகு அல்லாஹ், “அம்மக்கள் எதிலிருந்து பாதுகாவல் தேடுகிறார்கள்?” என்று கேட்பான். “நரகிலிருந்து பாதுகாவல் தேடுகிறார்கள் என்று வானவர்கள் கூறுவார்கள். “அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா?” என்று அல்லாஹ் கேட்பான் “இல்லை” என வானவர்கள் கூறுவார்கள். ‘அம்மக்கள் அதனைப் பார்த்திருந்தால் அவர்களின் நிலைமை எப்படி இருக்கும்?” என அல்லாஹ் கேட்பான். “அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும், அதனை அதிகம் அஞ்சுபவர்களாகவும், அதிலிருந்து அதிகம் பாதுகாப்பு கோருபவர்களாகவும் இருந்திருப்பார்கள்” என வானவர்கள் கூறுவர். அப்போது அல்லாஹ், “நான் அம்மக்களை மன்னித்துவிட்டேன் என்பதற்கு உங்களை சாட்சிகளாக ஆக்குகின்றேன்” என்று (வானவர்களை நோக்கி) கூறுவான்.

அதற்கு அவ்வானவர்கள், “அம்மக்களிடையே அதிகமாக தவறு செய்த குற்றவாளி ஒருவர் இருக்கிறார். அவர் (இறைதியானம் செய்வதற்காக) அவர்களை நாடி வரவில்லை. மாறாக வேறு ஏதோ தேவைக்காகவே வந்துள்ளார்” என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், “அவர்கள் (நற்பேறு பெற்ற) மக்கள் ஆவர். அவர்களிடம் வந்து அமர்ந்த ஒருவர் (நற்பேறு பெறுவாரே தவிர) வாய்ப்புக் கேடானவராக மாட்டார்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


திர்மிதீ கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து பல அறிவிப்பாளர்தொடர்களில் இந்த நபிமொழி வந்துள்ளது.

(திர்மிதி: 3600)

بَابُ مَا جَاءَ إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الأَرْضِ

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَوْ عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

” إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الأَرْضِ فُضُلًا عَنْ كُتَّابِ النَّاسِ، فَإِذَا وَجَدُوا أَقْوَامًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا: هَلُمُّوا إِلَى بُغْيَتِكُمْ، فَيَجِيئُونَ فَيَحُفُّونَ بِهِمْ إِلَى سَمَاءِ الدُّنْيَا، فَيَقُولُ اللَّهُ: أَيَّ شَيْءٍ تَرَكْتُمْ عِبَادِي يَصْنَعُونَ، فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ يَحْمَدُونَكَ وَيُمَجِّدُونَكَ وَيَذْكُرُونَكَ، قَالَ: فَيَقُولُ: فَهَلْ رَأَوْنِي، فَيَقُولُونَ: لَا، قَالَ: فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْنِي؟ قَالَ: فَيَقُولُونَ: لَوْ رَأَوْكَ لَكَانُوا أَشَدَّ تَحْمِيدًا، وَأَشَدَّ تَمْجِيدًا، وَأَشَدَّ لَكَ ذِكْرًا، قَالَ: فَيَقُولُ: وَأَيُّ شَيْءٍ يَطْلُبُونَ؟ قَالَ: فَيَقُولُونَ: يَطْلُبُونَ الجَنَّةَ، قَالَ: فَيَقُولُ: وَهَلْ رَأَوْهَا؟ قَالَ: فَيَقُولُونَ: لَا، فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْهَا؟ قَالَ: فَيَقُولُونَ: لَوْ رَأَوْهَا؟ لَكَانُوا أَشَدَّ لَهَا طَلَبًا، وَأَشَدَّ عَلَيْهَا حِرْصًا، قَالَ: فَيَقُولُ: فَمِنْ أَيِّ شَيْءٍ يَتَعَوَّذُونَ؟ قَالُوا: يَتَعَوَّذُونَ مِنَ النَّارِ، قَالَ: فَيَقُولُ: وَهَلْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَا، فَيَقُولُ: فَكَيْفَ لَوْ رَأَوْهَا؟ فَيَقُولُونَ: لَوْ رَأَوْهَا لَكَانُوا مِنْهَا أَشَدَّ هَرَبًا، وَأَشَدَّ مِنْهَا خَوْفًا، وَأَشَدَّ مِنْهَا تَعَوُّذًا، قَالَ: فَيَقُولُ: فَإِنِّي أُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ، فَيَقُولُونَ: إِنَّ فِيهِمْ فُلَانًا الخَطَّاءَ لَمْ يُرِدْهُمْ إِنَّمَا جَاءَهُمْ لِحَاجَةٍ، فَيَقُولُ: هُمُ القَوْمُ لَا يَشْقَى لَهُمْ جَلِيسٌ “

«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»، «وَقَدْ رُوِيَ عَنْ أَبِي هُرَيْرَةَ مِنْ غَيْرِ هَذَا الوَجْهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3524.
Tirmidhi-Shamila-3600.
Tirmidhi-Alamiah-3524.
Tirmidhi-JawamiulKalim-3554.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.