Author: Farook

Bukhari-1857

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1857. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நான் பருவ வயதை நெருங்கிய நேரத்தில் பெட்டைக் கழுதையின் மேல் ஏறி (ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டேன். நபி(ஸல்) அவர்கள் மினாவில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.

முதல் வரிசைக்கு முன்னால் வாகனத்தை ஓட்டிச் சென்று இறங்கினேன். அது மேயத் துவங்கியது. நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் மக்களுடன் வரிசையில் சேர்ந்து கொண்டேன்.

இது கடைசி ஹஜ்ஜின்போது மினாவில் நடந்ததாகும் என மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.
Book :28


أَقْبَلْتُ وَقَدْ نَاهَزْتُ الحُلُمَ، أَسِيرُ عَلَى أَتَانٍ لِي «وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يُصَلِّي بِمِنًى» حَتَّى سِرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ الأَوَّلِ، ثُمَّ نَزَلْتُ عَنْهَا، فَرَتَعَتْ، فَصَفَفْتُ مَعَ النَّاسِ وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ: بِمِنًى فِي حَجَّةِ الوَدَاعِ


Bukhari-1856

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 சிறுவர்கள் ஹஜ் செய்தல். 

1856. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து (பயணச்) சுமைகளுடன் என்னை இரவிலேயே அனுப்பினார்கள்.
Book : 28


«بَعَثَنِي أَوْ قَدَّمَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الثَّقَلِ مِنْ جَمْعٍ بِلَيْلٍ»


Bukhari-1855

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1855. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் ஒட்டகத்திற்குப் பின்னால் ஃபள்லு(ரலி) அமர்ந்திருந்தார்கள். அப்போது கஸ்அம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்தார். ஃபள்லு(ரலி) அப்பெண்ணைப் பார்க்கலானார்கள். அப்பெண்ணும் அவர்களைப் பார்த்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஃபள்லு(ரலி) அவர்களின் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பினார்கள். அப்போது அப்பெண்மணி, ‘அல்லாஹ் விதித்த கடமை என் தந்தைக்கு ஏற்பட்டுவிட்டது; அவர் வாகனத்தில் அமர முடியாத முதிர்ந்த வயதுடையவராக இருக்கிறார்; அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்!’ என்றார்கள். இது கடைசி ஹஜ்ஜின்போது நடந்ததாகும்.
Book :28


كَانَ الفَضْلُ رَدِيفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ، فَجَعَلَ الفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ، فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الفَضْلِ إِلَى الشِّقِّ الآخَرِ، فَقَالَتْ: إِنَّ فَرِيضَةَ اللَّهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لاَ يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ، أَفَأَحُجُّ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ» وَذَلِكَ فِي حَجَّةِ الوَدَاعِ


Bukhari-1853

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 வாகனத்தில் அமர முடியாதவருக்காக மற்றவர் ஹஜ் செய்தல். 

1853. & 1854. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின்போது வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் ஹஜ் எனும் கடமை என் தந்தைக்கு விதியாகிவிட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்றனர்.
Book : 28


جَاءَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ عَامَ حَجَّةِ الوَدَاعِ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لاَ يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ فَهَلْ يَقْضِي عَنْهُ أَنْ أَحُجَّ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ»


Bukhari-1852

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 இறந்தவருக்காக ஹஜ் செய்தலும், அவரது நேர்த்திக்கடனை நிறைவேற்றலும், பெண்களுக்காக ஆண்கள் ஹஜ் செய்தலும். 

1852. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய், உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்’ என்றார்கள்.
Book : 28


أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ، جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ، أَفَأَحُجُّ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً؟ اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالوَفَاءِ»


Bukhari-1851

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 இஹ்ராம் கட்டியிருப்பவர் இறந்துவிட்டால் நபிவழியின்படி அவருக்காகச் செய்ய வேண்டியவை. 

1851. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் தங்கியிருந்தபோது அவரின் ஒட்டகம் அவரின் கழுத்தை முறித்து விட, அவர் மரணித்துவிட்டார்.

நபி(ஸல்) அவர்கள், ‘இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரைக் குளிப்பாட்டுங்கள்; இரண்டு ஆடைகளில் இவருக்கு கபனிடுங்கள்! இவருக்கு நறுமணம் பயன்படுத்தாதீர்கள்; இவரின் தலையை மூடாதீர்கள்! ஏனெனில், கியாமத் நாளில் இவர் தல்பியா கூறிக் கொண்டிருக்கும் நிலையில் எழுப்பப்படுவார்!’ எனக் கூறினார்கள்.
Book : 28


أَنَّ رَجُلًا كَانَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَقَصَتْهُ  نَاقَتُهُ وَهُوَ مُحْرِمٌ، فَمَاتَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْهِ، وَلاَ تَمَسُّوهُ بِطِيبٍ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ القِيَامَةِ مُلَبِّيًا»


Bukhari-1850

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1850. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் அரஃபாவில் தங்கினார். அப்போது, அவர் தம் வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். வாகனம் அவரின் கழுத்தை முறித்து அவரைக் கொன்றுவிட்டது.

நபி(ஸல்) அவர்கள், ‘இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரைக் குளிப்பாட்டுங்கள்; இரண்டு ஆடைகளில் இவருக்குக் கஃபனிடுங்கள்! இவருக்கு நறுமணம் பயன்படுத்தாதீர்கள்; தலையை மூடாதீர்கள்! ஏனெனில், மறுமை நாளில் அல்லாஹ், இவரை தல்பியா கூறிக் கொண்டிருப்பவராக எழுப்புவான்!’ என்று கூறினார்கள்.
Book :28


بَيْنَا رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ، إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ، فَوَقَصَتْهُ أَوْ قَالَ: فَأَوْقَصَتْهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تَمَسُّوهُ طِيبًا، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، وَلاَ تُحَنِّطُوهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ القِيَامَةِ مُلَبِّيًا»


Bukhari-1849

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1849. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் அரஃபாவில் தங்கினார். அப்போது அவர் தன் வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். வாகனம் (ஒட்டகம்) அவரின் கழுத்தை முறித்து அவரைக் கொன்றது.

நபி(ஸல்) அவர்கள் ‘இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரைக் குளிப்பாட்டுங்கள்; இரண்டு ஆடைகளில் இவருக்குக் கபனிடுங்கள்! இவருக்கு நறுமணம் பயன்படுத்தாதீர்கள்; இவரின் தலையை மூடாதீர்கள்! ஏனெனில், இவர் தல்பியா கூறிக் கொண்டிருக்கும் நிலையில் மறுமை நாளில் இவரை அல்லாஹ் எழுப்புவான்!’ என்று கூறினார்கள்.
Book :28


بَيْنَا رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ، إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ، فَوَقَصَتْهُ أَوْ قَالَ: فَأَقْعَصَتْهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ أَوْ قَالَ: ثَوْبَيْهِ، وَلاَ تُحَنِّطُوهُ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ القِيَامَةِ يُلَبِّي


Bukhari-1847

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 ஒருவர் (இஹ்ராமுடைய சட்டங்களை) அறியாமல், சட்டை அணிந்திருக்கும் நிலையில் இஹ்ராம் கட்டுதல்.

(இஹ்ராம் கட்டிய) ஒருவர் அறியாமலோ மறதியாகவோ நறுமணம் பூசிக் கொண்டால் அல்லது தைக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டால் அதற்காக எந்தப் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை! என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 

1847. & 1848. யஃலா(ரலி) அறிவித்தார்.

நான் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒருவர் அவர்களிடம் வந்தார். மஞ்சள் அல்லது அதைப் போன்ற கறை படிந்த (கம்பளியால் ஆன) மேலங்கியை அவர் அணிந்திருந்தார். ‘நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்கும்போது அவர்களைப் பார்க்க விரும்புகிறாயா?’ என்று உமர்(ரலி) என்னிடம் வினவினார்கள். நபி(ஸல்) அவர்களின் மீது வஹீ (இறைச்செய்தி) இறங்கி, பின்னர் அது அவர்களைவிட்டு நீங்கியது; (அதை பார்த்தேன்). அப்போது அவரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘உம்முடைய ஹஜ்ஜில் செய்யக் கூடியதையே உம்ராவிலும் செய்வீராக!’ என்று கூறினார்கள்.

1848. ஒருவர் இன்னொரு மனிதரின் கையைக் கடித்துவிட்டார். உடனே கடிபட்டவர் கடித்தவரின் முன் பற்களை உடைத்தார். பல்லுடைக்கப்பட்டதற்கு எந்த நஷ்ட ஈடும் தர வேண்டியதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.
Book : 28


كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَاهُ رَجُلٌ عَلَيْهِ جُبَّةٌ فِيهِ أَثَرُ صُفْرَةٍ أَوْ نَحْوُهُ، كَانَ عُمَرُ يَقُولُ لِي: تُحِبُّ إِذَا نَزَلَ عَلَيْهِ الوَحْيُ أَنْ تَرَاهُ؟ فَنَزَلَ عَلَيْهِ ثُمَّ سُرِّيَ عَنْهُ، فَقَالَ: «اصْنَعْ فِي عُمْرَتِكَ مَا تَصْنَعُ فِي حَجِّكَ»


Bukhari-1846

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1846. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒருவர் வந்து, ‘இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்!’ எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘அவனைக் கொன்று விடுங்கள்!’ என்று உத்தரவிட்டார்கள்.

அத்தியாயம்: 28


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَامَ الفَتْحِ، وَعَلَى رَأْسِهِ المِغْفَرُ، فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ فَقَالَ: إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الكَعْبَةِ فَقَالَ «اقْتُلُوهُ»


Next Page » « Previous Page