Author: Farook

Bukhari-653

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

653. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இறைவழியில் குத்திக் கொல்லப்படுபவன், வயிற்றுப் போக்கில் இறப்பவன், தண்ணீரில் மூழ்கி மரிப்பவன், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இறப்பவன், போரில் கொல்லப்படுபவன் ஆகிய ஐந்து பேர்களும் ஷஹீதுகள் ஆவார்கள்.

பாங்கு சொல்வதிலும் தொழுகையின் முதல்வரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்காகப் போட்டி போட்டு முந்தி வந்து, அதன் விளைவாக அவர்களிடையில் சீட்டுக் குலுக்கி எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதற்கும் அவர்கள் தயாராகி விடுவார்கள்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :10


الشُّهَدَاءُ خَمْسَةٌ: المَطْعُونُ، وَالمَبْطُونُ، وَالغَرِيقُ، وَصَاحِبُ الهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ  وَقَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا لاَسْتَهَمُوا عَلَيْهِ


Bukhari-652

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32 லுஹ்ர் (உள்ளிட்ட) தொழுகையை ஆரம்ப நேரத்திலேயே (சென்று) நிறைவேற்றுவது. 

652. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 10


«بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ»


Bukhari-651

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

651. ‘யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

அத்தியாயம்: 10


«أَعْظَمُ النَّاسِ أَجْرًا فِي الصَّلاَةِ أَبْعَدُهُمْ، فَأَبْعَدُهُمْ مَمْشًى وَالَّذِي يَنْتَظِرُ الصَّلاَةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الإِمَامِ أَعْظَمُ أَجْرًا مِنَ الَّذِي يُصَلِّي، ثُمَّ يَنَامُ»


Bukhari-650

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

650. உம்மு தர்தா(ரலி) அறிவித்தார்.

அபூ தர்தா கோபமாக என்னிடம் வந்தார்கள். நீங்கள் கோபமாக இருக்கக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களின் சமூகம் கூட்டாகத் தொழுகிறார்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களிடம் நான் காணவில்லை!’ எனக் கூறினார்கள்.
Book :10


دَخَلَ عَلَيَّ أَبُو الدَّرْدَاءِ وَهُوَ مُغْضَبٌ، فَقُلْتُ: مَا أَغْضَبَكَ؟ فَقَالَ: «وَاللَّهِ مَا أَعْرِفُ مِنْ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا إِلَّا أَنَّهُمْ يُصَلُّونَ جَمِيعًا»


Bukhari-649

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

649. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :10


«تَفْضُلُهَا بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً»


Bukhari-648

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 ஃபஜ்ர் தொழுகையை (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவதன் சிறப்பு

648. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று சேருகிறார்கள்.’ இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு, நீங்கள் விரும்பினால் ‘நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன், சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது’ (திருக்குர்ஆன் 17:78) என்ற வசனத்தை ஓதுங்கள் என்றார்கள்.
Book : 10


«تَفْضُلُ صَلاَةُ الجَمِيعِ صَلاَةَ أَحَدِكُمْ وَحْدَهُ، بِخَمْسٍ وَعِشْرِينَ جُزْءًا، وَتَجْتَمِعُ مَلاَئِكَةُ اللَّيْلِ وَمَلاَئِكَةُ النَّهَارِ فِي صَلاَةِ الفَجْرِ» ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ: فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ: {إِنَّ قُرْآنَ الفَجْرِ كَانَ مَشْهُودًا} [الإسراء: 78]


Bukhari-647

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

647. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது, ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் ‘இறைவா! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக! உன்னுடைய கருணையை அவருக்குச் சொரிவாயாக!’ என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :10


صَلاَةُ الرَّجُلِ فِي الجَمَاعَةِ تُضَعَّفُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ، وَفِي سُوقِهِ، خَمْسًا وَعِشْرِينَ ضِعْفًا، وَذَلِكَ أَنَّهُ: إِذَا تَوَضَّأَ، فَأَحْسَنَ الوُضُوءَ، ثُمَّ خَرَجَ إِلَى المَسْجِدِ، لاَ يُخْرِجُهُ إِلَّا الصَّلاَةُ، لَمْ يَخْطُ خَطْوَةً، إِلَّا رُفِعَتْ لَهُ بِهَا دَرَجَةٌ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، فَإِذَا صَلَّى، لَمْ تَزَلِ المَلاَئِكَةُ تُصَلِّي عَلَيْهِ، مَا دَامَ فِي مُصَلَّاهُ: اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ، اللَّهُمَّ ارْحَمْهُ، وَلاَ يَزَالُ أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا انْتَظَرَ الصَّلاَةَ


Bukhari-646

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

646. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும்.’ என அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book :10


أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «صَلاَةُ الجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الفَذِّ بِخَمْسٍ وَعِشْرِينَ دَرَجَةً»


Bukhari-645

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 30

கூட்டுத் தொழுகையின் சிறப்பு.

அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் (தமது பள்ளிவாசலில்) கூட்டுத் தொழுகை (ஜமாஅத்) தவறிவிடும் போது வேறொரு பள்ளிவாசலுக்கு (கூட்டுத் தொழுகையில் சேரச்) சென்றுவிடுவார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் ஒரு பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அங்கு தொழுகை (நடந்து) முடிந்து விட்டிருந்தது. ஆகவே பாங்கும், இகாமத்தும் சொல்லி ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

645. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10


«صَلاَةُ الجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً»


Bukhari-644

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்: 29

கூட்டுத் தொழுகை (ஜமாஅத்தாகத் தொழுவது) கடமையானதாகும்.

ஒரு தாய் (தன் மகன் மீதுள்ள) பாசம் காரணமாக இஷாத் தொழுகையின் ஜமாஅத்திற்கு செல்ல வேண்டாமென அவனைத் தடுத்தால் அதற்கு மகன் கட்டுப்படலாகாது என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

644. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘என்னுடைய உயிர் எவனுடைய கரத்திலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! விறகுகளைக் கொண்டு வருமாறு நான் கட்டளையிட்டு அதன் படி விறகுகள் கொண்டு வரப்பட்டுப் பின்னர் தொழுகைக்கு அழைக்குமாறு நான் உத்தரவிட்டு, அதன்படி அழைக்கப்பட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டு, அதன் படி அவர் தொழுகை நடத்திப் பின்னர் தொழுகைக்கு வராமலிருக்கிற ஆண்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டோடு அவர்களை எரிப்பதற்கு நான் நினைத்ததுண்டு. என்னுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவரின் மீது ஆணையாகப் பள்ளியில் ஒரு துண்டு இறைச்சி, அல்லது ஆட்டுக் குளம்பு கொடுக்கப்படுகிறது என்று அவர்கள் எவரேனும் அறிவார்களானால் நிச்சயமாக இஷாத் தொழுகைக்காக ஜமாஅத்திற்கு வந்து விடுவார்கள்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்:10


«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ، فَيُحْطَبَ، ثُمَّ آمُرَ بِالصَّلاَةِ، فَيُؤَذَّنَ لَهَا، ثُمَّ آمُرَ رَجُلًا فَيَؤُمَّ النَّاسَ، ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ، فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ، أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينًا، أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ، لَشَهِدَ العِشَاءَ»


Next Page » « Previous Page