Category: முஸ்லிம்

Muslim-1553

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1553. மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “நமக்கு வெள்ளிக்கிழமை (வார வழிபாட்டு நாளாக) அறிவிக்கப்பெற்றது. நமக்கு முன்னிருந்தவர்களை அதிலிருந்து அல்லாஹ் வழி பிறழ விட்டுவிட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.

மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே வேறு வார்த்தைகளில் இடம்பெற்றுள்ளன.

Book : 7


«هُدِينَا إِلَى الْجُمُعَةِ، وَأَضَلَّ اللهُ عَنْهَا مَنْ كَانَ قَبْلَنَا»، فَذَكَرَ بِمَعْنَى حَدِيثِ ابْنِ فُضَيْلٍ


Muslim-1552

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், நமக்கு முந்தைய (யூதர் மற்றும் கிறித்தவ) சமுதாயத்தாரை (வார வழிபாட்டு நாளான) வெள்ளிக்கிழமையிலிருந்து வழிபிறழ விட்டுவிட்டான். எனவே, யூதர்களுக்குச் சனிக்கிழமையும் கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் (வார வழிபாட்டு நாட்களாக) அமைந்தன. பிறகு அல்லாஹ் நம்மைப் படைத்து நமக்கு வெள்ளிக்கிழமையை அறிவித்தான். (வரிசை முறையில்) வெள்ளி, சனி, ஞாயிறு என அமைந்திருப்பதைப் போன்றே மறுமை நாளிலும் அவர்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே இருப்பார்கள். உலக மக்களில் நாமே (காலத்தால்) பிந்தியவர்களாக இருக்கிறோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் படைப்பினங்களில் அனைவருக்கும் முன் தீர்ப்பளிக்கப் படுபவர்களாகவும் இருப்போம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஹுதைஃபா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 7


«أَضَلَّ اللهُ عَنِ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا، فَكَانَ لِلْيَهُودِ يَوْمُ السَّبْتِ، وَكَانَ لِلنَّصَارَى يَوْمُ الْأَحَدِ، فَجَاءَ اللهُ بِنَا فَهَدَانَا اللهُ لِيَوْمِ الْجُمُعَةِ، فَجَعَلَ الْجُمُعَةَ، وَالسَّبْتَ، وَالْأَحَدَ، وَكَذَلِكَ هُمْ تَبَعٌ لَنَا يَوْمَ الْقِيَامَةِ، نَحْنُ الْآخِرُونَ مِنْ أَهْلِ الدُّنْيَا، وَالْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ، الْمَقْضِيُّ لَهُمْ قَبْلَ الْخَلَائِقِ» وَفِي رِوَايَةِ وَاصِلٍ الْمَقْضِيُّ بَيْنَهُمْ.


Muslim-1551

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1551. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இந்த ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்பே நமக்கு வேதம் வழங்கப்பெற்றது. இந்த (வெள்ளி)க்கிழமைதான் அவர்களுக்கும் (வார வழிபாட்டு) நாளாக கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் இ(ந்த நாளைத் தமது வார வழிபாட்டு நாளாக ஏற்றுக்கொள்வ)தில் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்தான். இதில் அவர்கள் (அனைவரும்) நம்மைப் பின் தொடர்பவர்களே ஆவர். (எவ்வாறெனில், வெள்ளிக்கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) யூதர்களுக்கு நாளை (சனிக்கிழமை)யும் கிறித்தவர்களுக்கு மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமையும் வார வழிபாட்டு நாட்களாகும்).- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ مُحَمَّدٍ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَحْنُ الْآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ، بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا، وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ، وَهَذَا يَوْمُهُمُ الَّذِي فُرِضَ عَلَيْهِمْ فَاخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللهُ لَهُ، فَهُمْ لَنَا فِيهِ تَبَعٌ، فَالْيَهُودُ غَدًا، وَالنَّصَارَى بَعْدَ غَدٍ»


Muslim-1550

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1550. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதலில் நுழைவோம். எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் அல்லாஹ் நமக்குச் சத்தியத்திற்கு வழிகாட்டினான். இந்த (ஜுமுஆ) நாள் விஷயத்திலும் (அதை வார வழிபாட்டு நாளாக ஏற்பது தொடர்பாக) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்துத் தந்தான். (இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடரக்கூடியவர்களே ஆவர்.) இன்று (வெள்ளிக்கிழமை) நமக்குரிய (வழிபாட்டு) நாளாகும். நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய நாளாகும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்குரிய நாளாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

نَحْنُ الْآخِرُونَ الْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ، وَنَحْنُ أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ، بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا، وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ، فَاخْتَلَفُوا، فَهَدَانَا اللهُ لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنَ الْحَقِّ، فَهَذَا يَوْمُهُمُ الَّذِي اخْتَلَفُوا فِيهِ، هَدَانَا اللهُ لَهُ – قَالَ: يَوْمُ الْجُمُعَةِ – فَالْيَوْمَ لَنَا، وَغَدًا لِلْيَهُودِ، وَبَعْدَ غَدٍ لِلنَّصَارَى