Category: முஸ்லிம்

Muslim-1563

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10

(ஜுமுஆ) தொழுகைக்கு முன் (இமாம்) இரு உரைகள் நிகழ்த்துவதும் அவ்விரு உரைகளுக்கு இடையே (அவர்) அமர்வதும்.

1563. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை அன்று (முதலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்துவார்கள். பிறகு உட்கார்ந்துவிட்டு மீண்டும் எழுந்து நிற்பார்கள்; இன்று நீங்கள் செய்வதைப் போன்று.- இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 7


«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ قَائِمًا، ثُمَّ يَجْلِسُ، ثُمَّ يَقُومُ». قَالَ: كَمَا يَفْعَلُونَ الْيَوْمَ


Muslim-1562

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1562. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “ஜுமுஆ” தொழுதுவிட்டு (வீட்டிற்குத்) திரும்புவோம். அப்போது (நண்பகல் நேரமாயிருப்பதால்) நாங்கள் நிழல் பெறும் அளவுக்கு சுவர்களில் நிழல் படிந்திருக்காது.

Book : 7


«كُنَّا نُصَلِّي مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجُمُعَةَ، فَنَرْجِعُ وَمَا نَجِدُ لِلْحِيطَانِ فَيْئًا نَسْتَظِلُّ بِهِ»


Muslim-1561

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1561. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில் “ஜுமுஆ” தொழுவோம். பிறகு (சுவர்களுக்கு நிழல் படியாததால்) நாங்கள் (ஒதுங்கி நடக்க) நிழல் தேடியவாறே (வீட்டுக்குத்) திரும்புவோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 7


«كُنَّا نُجَمِّعُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا زَالَتِ الشَّمْسُ، ثُمَّ نَرْجِعُ نَتَتَبَّعُ الْفَيْءَ»


Muslim-1560

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1560. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ‘ஜுமுஆ” தொழுத பிறகுதான் மதிய ஓய்வு மேற்கொள்வோம்; முற்பகல் உணவு உட்கொள்வோம். (அந்த அளவிற்கு நேரத்திலேயே ஜுஆமு தொழுதுவிடுவோம்.)

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

Book : 7


«مَا كُنَّا نَقِيلُ، وَلَا نَتَغَدَّى إِلَّا بَعْدَ الْجُمُعَةِ»، زَادَ ابْنُ حُجْرٍ فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Muslim-1559

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1559. முஹம்மத் பின் அலீ பின் அல்ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நேரத்தில் ஜுமுஆ தொழுவார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆ) தொழுவித்த பிறகு நாங்கள் எங்களுடைய ஒட்டகங்களிடம் சென்று அவற்றுக்கு ஓய்வளிப்போம்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில் (ஜுமுஆ தொழுவார்கள்)” என்றும், ஒட்டகங்கள் என்பது “நீர் இறைக்கும் ஒட்டகங்களைக் குறிக்கும்” என்றும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

Book : 7


أَنَّهُ سَأَلَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ: مَتَى كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْجُمُعَةَ؟ قَالَ: «كَانَ يُصَلِّي، ثُمَّ نَذْهَبُ إِلَى جِمَالِنَا فَنُرِيحُهَا». زَادَ عَبْدُ اللهِ فِي حَدِيثِهِ: حِينَ تَزُولُ الشَّمْسُ، يَعْنِي النَّوَاضِحَ


Muslim-1558

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9

சூரியன் (உச்சியிலிருந்து) சாய்கின்ற போது ஜுமுஆத் தொழுவது.

1558. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜுமுஆ) தொழுவோம்; பிறகு திரும்பிச் சென்று நீர் இறைக்கும் எங்கள் ஒட்டகங்களுக்கு ஓய்வளிப்போம்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹசன் பின் அய்யாஷ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஜஅஃபர் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் “அது எந்த நேரம்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில்” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 7


«كُنَّا نُصَلِّي مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ نَرْجِعُ فَنُرِيحُ نَوَاضِحَنَا»، قَالَ حَسَنٌ: فَقُلْتُ لِجَعْفَرٍ: فِي أَيِّ سَاعَةٍ تِلْكَ؟ قَالَ: «زَوَالَ الشَّمْسِ»


Muslim-1557

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(வெள்ளிக்கிழமை) யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதை செம்மையாகவும் செய்து ஜுமுஆவுக்கு வந்து (இமாமின் உரையை) செவிதாழ்த்தி மௌனமாகக் கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆவரைக்கும் மேற்கொண்டு மூன்று நாட்களுக்கும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றன. யார் (இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளை யாடி)க்கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 7


«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْجُمُعَةَ، فَاسْتَمَعَ وَأَنْصَتَ، غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ، وَزِيَادَةُ ثَلَاثَةِ أَيَّامٍ، وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا»


Muslim-1556

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 8

(வெள்ளிக்கிழமை) உரையை மௌனமாகச் செவியேற்பவரின் சிறப்பு.

1556. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார். இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள் வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 7


«مَنِ اغْتَسَلَ؟ ثُمَّ أَتَى الْجُمُعَةَ، فَصَلَّى مَا قُدِّرَ لَهُ، ثُمَّ أَنْصَتَ حَتَّى يَفْرُغَ مِنْ خُطْبَتِهِ، ثُمَّ يُصَلِّي مَعَهُ، غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى، وَفَضْلُ ثَلَاثَةِ أَيَّامٍ»


Muslim-1555

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1555. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வெள்ளிக்கிழமை வந்துவிட்டால்) பள்ளிவாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு வானவர் நின்றுகொண்டு, முதன்முதலாக நுழைபவரையும் அடுத்து முதலில் நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்கிறார்கள்” என்று கூறினார்கள். பிறகு ஜுமுஆவுக்கு வருபவர்களின் நிலையை, இறைச்சி ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார் என்பதிலிருந்து முட்டையை தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார் என்பதுவரை படிப்படியாகக் குறைத்து ஒப்பிட்டுக் கொண்டே போனார்கள். “இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால் பெயர்ப்பதிவேடுகள் சுருட்டப்பட்டுவிடுகின்றன; வானவர்கள் (இமாமின்) உரையில் பங்கேற்கின்றனர்” என்றும் கூறினார்கள்.

Book : 7


«عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ مَلَكٌ يَكْتُبُ الْأَوَّلَ فَالْأَوَّلَ – مَثَّلَ الْجَزُورَ، ثُمَّ نَزَّلَهُمْ حَتَّى صَغَّرَ إِلَى مَثَلِ الْبَيْضَةِ – فَإِذَا جَلَسَ الْإِمَامُ طُوِيَتِ الصُّحُفُ، وَحَضَرُوا الذِّكْرَ»


Muslim-1554

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) நேரத்தோடு செல்வதன் சிறப்பு.

1554. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த (பெயர் பதிவு) ஏடுகளைச் சுருட்டிவைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜுமுஆவுக்காக) நேரத்தோடு வருபவரது நிலையானது,ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்கள் ஆவர்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

«إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ، كَانَ عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ مَلَائِكَةٌ يَكْتُبُونَ الْأَوَّلَ فَالْأَوَّلَ، فَإِذَا جَلَسَ الْإِمَامُ طَوَوُا الصُّحُفَ، وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ، وَمَثَلُ الْمُهَجِّرِ كَمَثَلِ الَّذِي يُهْدِي الْبَدَنَةَ، ثُمَّ كَالَّذِي يُهْدِي بَقَرَةً، ثُمَّ كَالَّذِي يُهْدِي الْكَبْشَ، ثُمَّ كَالَّذِي يُهْدِي الدَّجَاجَةَ، ثُمَّ كَالَّذِي يُهْدِي الْبَيْضَةَ».

-حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَعَمْرٌو النَّاقِدُ، عَنْ سُفْيَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ


Next Page » « Previous Page