தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-302

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 111

தொழுகையின் செய்முறை தொடர்பாக வந்துள்ளவை.

 ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் இருந்தோம். அப்போது கிராமவாசியின் தோற்றத்தில் ஒருவர் வந்து தொழுதார். அவர் (நிறுத்தி நிதானமாகத் தொழாமல்) அவசரமாகத் தொழுது முடித்துவிட்டு வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முகமன் (ஸலாம்) கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் `வ அலைக்க’ என (பதில் ஸலாம்) சொல்லிவிட்டு, திரும்பச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள்.

அந்த மனிதர் திரும்பிச் சென்று, (முன்பு தொழுததைப் போன்றே) தொழுதுவிட்டு வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், `வ அலைக்க’ என (பதில் ஸலாம்) சொன்னார்கள். பிறகு, “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்றார்கள். இவ்வாறு அவர் இரண்டு அல்லது மூன்று தடவைகள் செய்தார். ஒவ்வொரு முறையும் அவர் (தொழுதுவிட்டு வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்வதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு `வ அலைக்க’ என (பதில் ஸலாம்) சொல்வதும், பிறகு ‘திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறுவதுமாக இருந்தார்கள்.

மக்களுக்கு இது தர்மசங்கடமாகத் தெரிந்தது. விரைவாகத் தொழுகின்றவருக்குத் தொழுகையே இல்லை என்ற விஷயம் நபித்தோழர்களுக்குப் பெரும் பாரமாகத் தோன்றியது. முடிவில் அந்த மனிதர், `அவ்வாறாயின் (எப்படித் தொழுவது என்று) எனக்குக் காட்டுங்கள்; கற்றுக்கொடுங்கள். ஏனெனில், நானும் மனிதன்தான். நான் சரியாகவும் செய்யலாம்; தவறாகவும் செய்யலாம்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”சரி (கற்றுக்கொடுக்கிறேன்)” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விவரித்தார்கள்:

“நீர் தொழுகைக்கு ஆயத்தமாகும்போது அல்லாஹ் உமக்குக் கட்டளையிட்டிருப்பதைப் போன்று அங்கத்தூய்மை (உளூ) செய்துகொள்வீராக! பிறகு ஏகத்துவ உறுதிமொழி (பாங்கு) கூறி, இகாமத்தும் சொல்லிக்கொள்வீராக! (தொழுகையில் நின்று) உமக்குக் குர்ஆன் வசனங்கள் ஓதத் தெரிந்தால் ஓதிக்கொள்வீராக! இல்லாவிட்டால் `அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனக் கூறிக் கொள்வீராக!

பிறகு குனி(ந்து ருகூஉ செய்)வீராக! அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பிறகு (ருகூவிலிருந்து எழுந்து) நேராக (சிறிது நேரம்) நிற்பீராக! பிறகு சிர வணக்கம் (ஸஜ்தா) செய்து, அதில் (சற்று நேரம்) நிலை கொள்வீராக!

பிறகு எழுந்து (சற்று நேரம்) நன்கு அமர்வீராக! பிறகு (இரண்டாவது ரக்அத்திற்காக) எழுவீராக! இவ்வாறு நீர் செய்தால், உமது தொழுகை முழுமையடைந்து விடும். இதில் ஏதேனும் நீர் குறை செய்தால் (குறை செய்த அளவுக்கு) உமது தொழுகையில் சிறிது பாதிப்பு ஏற்படுத்திவிட்டீர்”.

(நிதானம் பேணாது துரிதமாகத் தொழுதவருக்குத் தொழுகையே இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) முன்பு கூறியதைவிட, தொழுகையில் ஏதேனும் குறை நேர்ந்தால், (குறையின் அளவுக்கே) தொழுகையில் சிறிது பாதிப்பு ஏற்படும்; தொழுகை முழுமையாக வீணாகிவிடாது எனும் இந்த நிலை மக்களுக்கு எளிதாகத் தோன்றியது.

 திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அபூஹுரைரா (ரலி), அம்மார் பின் யாஸிர்(ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி) அவர்கள் வழியாக வரும் இந்த ஹதீஸ் ஹஸன் தரத்தில் அமைந்ததாகும். மேலும் இந்த நபிமொழி இவர்களின் வழியாக பல அறிவிப்பாளர்தொடர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

(திர்மிதி: 302)

بَابُ مَا جَاءَ فِي وَصْفِ الصَّلَاةِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ يَحْيَى بْنِ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلَّادِ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، عَنْ جَدِّهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي المَسْجِدِ يَوْمًا، قَالَ رِفَاعَةُ وَنَحْنُ مَعَهُ: إِذْ جَاءَهُ رَجُلٌ كَالبَدَوِيِّ، فَصَلَّى فَأَخَفَّ صَلَاتَهُ، ثُمَّ انْصَرَفَ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَعَلَيْكَ، فَارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَرَجَعَ فَصَلَّى، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَيْهِ، فَقَالَ: «وَعَلَيْكَ، فَارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَفَعَلَ ذَلِكَ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، كُلُّ ذَلِكَ يَأْتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُسَلِّمُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَقُولُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَعَلَيْكَ، فَارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَخَافَ النَّاسُ وَكَبُرَ عَلَيْهِمْ أَنْ يَكُونَ مَنْ أَخَفَّ صَلَاتَهُ لَمْ يُصَلِّ، فَقَالَ الرَّجُلُ فِي آخِرِ ذَلِكَ: فَأَرِنِي وَعَلِّمْنِي، فَإِنَّمَا أَنَا بَشَرٌ أُصِيبُ وَأُخْطِئُ، فَقَالَ: «أَجَلْ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَتَوَضَّأْ كَمَا أَمَرَكَ اللَّهُ، ثُمَّ تَشَهَّدْ فَأَقِمْ أَيْضًا، فَإِنْ كَانَ مَعَكَ قُرْآنٌ فَاقْرَأْ، وَإِلَّا فَاحْمَدِ اللَّهَ وَكَبِّرْهُ وَهَلِّلْهُ، ثُمَّ ارْكَعْ فَاطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ اعْتَدِلْ قَائِمًا، ثُمَّ اسْجُدْ فَاعْتَدِلْ سَاجِدًا، ثُمَّ اجْلِسْ فَاطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ قُمْ، فَإِذَا فَعَلْتَ ذَلِكَ فَقَدْ تَمَّتْ صَلَاتُكَ، وَإِنْ انْتَقَصْتَ مِنْهُ شَيْئًا انْتَقَصْتَ مِنْ صَلَاتِكَ»، قَالَ: وَكَانَ هَذَا أَهْوَنَ عَلَيْهِمْ مِنَ الأَوَّلِ، أَنَّهُ مَنْ انْتَقَصَ مِنْ ذَلِكَ شَيْئًا انْتَقَصَ مِنْ صَلَاتِهِ، وَلَمْ تَذْهَبْ كُلُّهَا

وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَمَّارِ بْنِ يَاسِرٍ، «حَدِيثُ رِفَاعَةَ بْنِ رَافِعٍ حَدِيثٌ حَسَنٌ، وَقَدْ رُوِيَ عَنْ رِفَاعَةَ هَذَا الحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ»


Tirmidhi-Tamil-278.
Tirmidhi-TamilMisc-278.
Tirmidhi-Shamila-302.
Tirmidhi-Alamiah-278.
Tirmidhi-JawamiulKalim-278.




…இதில் யஹ்யா பின் அலீ தனது தந்தை அலீ பின் யஹ்யா விடமிருந்து அறிவிக்காமல் தனது பாட்டனார் யஹ்யா பின் கல்லாதிடமிருந்து அறிவித்துள்ளதாக வந்துள்ளது. இஸ்மாயீல் பின் ஜஃபர் வழியாக வரும் செய்திகளில் இதில் மட்டுமே இவ்வாறு வந்துள்ளது என்பதால் இது தவறாக இருக்க வாய்ப்புள்ளது. இவர் தனது பாட்டனாரிடமிருந்து இந்த செய்தியை கேட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.


மேலும் பார்க்க: அபூதாவூத்-858 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.