بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஹதீஸை ஆய்வு செய்யும் முறை.
முன்னுரை:
ஹதீஸை ஆய்வு செய்வதற்கு முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை:
ஒரு ஹதீஸை ஆய்வு செய்வதின் மூலமே அது சரியானதா? அல்லது பலவீனமானதா? அல்லது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியா? என்பதை நாம் அறிந்துக் கொள்ளமுடியும்.
பல்வேறு ஹதீஸ்கலை அறிஞர்கள் இந்த ஆய்வின் அடிப்படையில் தான் ஹதீஸ் வகைகளையும், தரங்களையும் நமக்கு அடையாளம் காட்டியுள்ளனர்.
ஹதீஸ் ஆய்வுக்குத்தான் ஹதீஸ்கலை என்ற கல்வியை ஹதீஸ்கலை அறிஞர்கள் நூல் வடிவில் உருவாக்கியுள்ளனர். இதையே முஸ்தலஹுல் ஹதீஸ், இல்முல் ஹதீஸ், உஸூலுல் ஹதீஸ் போன்ற பல பெயர்களில் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த நூல்களில் சிலவை சிறிய நூலாகவும், சிலவை நடுத்தரமானதாகவும், சிலவை பெரிய நூலாகவும் உள்ளன. சிலவை கவிதை வடிவத்திலும், சிலவை கவிதை வடிவத்தில் உள்ள நூல்களுக்கு விளக்கவுரைகளாகவும் உள்ளன.
ஒரு ஹதீஸில் இரண்டு பகுதிகள் உள்ளன.
1 . அறிவிப்பாளர்தொடர். இதற்கு سند – ஸனத் என்று கூறுவர்.
2 . ஹதீஸின் கருத்து. இதற்கு متن – மதன் என்று கூறுவர்.
இதனடிப்படையில் ஹதீஸ்கலையை, அறிஞர்கள் சுருக்கமாக 2 வகை என குறிப்பிடுவார்கள்:
1 . علم الحديث رواية – இல்முல் ஹதீஸ்-ரிவாயா.
(இதில் ஹதீஸை செவியேற்கும் முறைகள், அறிவிக்கும் முறைகள் என்பவை உட்பட ஒரு ஹதீஸில் இடம்பெறும் அனைத்து அறிவிப்பாளர்களைப் பற்றி அனைத்து தகவலையும் அறிந்து அதனடிப்படையில் அந்த அறிவிப்பாளர்தொடரை எவ்வாறு முடிவு செய்வது என்பது பற்றி கூறப்பட்டிருக்கும்.
உதாரணம்: ஒரு குறிப்பிட்ட அறிவிப்பாளர்தொடரை முத்தஸில் என்றோ முர்ஸல் என்றோ முன்கதிஃ என்றோ மர்ஃபூஃ என்றோ மவ்கூஃப் என்றோ மக்தூஃ என்றோ குறிப்பிடுவது)
2 . علم الحديث دراية – இல்முல் ஹதீஸ்-திராயா.
(இதில் ஹதீஸின் கருத்து பற்றி எவ்வாறு முடிவு செய்வது என்பது பற்றி கூறப்பட்டிருக்கும்.
உதாரணம்: ஒரு குறிப்பிட்ட ஹதீஸின் கருத்து குர்ஆனுக்கு மாற்றமாக உள்ளதா அல்லது முன்கராக உள்ளதா, அல்லது ஷாத்தாக உள்ளதா, அல்லது முத்ரஜாக உள்ளதா, அல்லது ஸியாதத் உள்ளதா, அல்லது நுக்ஸான் உள்ளதா என்பது போன்ற விசயங்களை இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்)
இந்த இரண்டுவகை கல்வியின் மூலம்தான் ஒரு ஹதீஸை சரியானது என்றோ அல்லது பலவீனமானது என்றோ கூறுவர்.
ஒரு ஹதீஸை ஸஹீஹ்-சரியானது என சொல்வதாக இருந்தால் அதில் ஐந்து நிபந்தனைகள் இருக்க வேண்டும்.
1 . اتصال السند – அறிவிப்பாளர்தொடர் இடைமுறிவு ஏற்படாமல் இருக்க வேண்டும்.
2 . عدالة الرواة – அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
3 . ضبط الرواة – அறிவிப்பாளர்கள் நினைவாற்றலில் உறுதியானவர்களாக இருக்க வேண்டும். (நூலில் ஹதீஸை எழுதிவைத்தவர் என்றால் அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்)
4 . عدم الشذوذ – குறிப்பிட்ட செய்தி மற்ற மிக பலமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இருக்கக் கூடாது.
5 . عدم العلة – வேறு நுணுக்கமான குறைபாடு இருக்கக் கூடாது.
மேற்கூறப்பட்ட இந்த 5 வகை நிபந்தனைகளை அறியும் முறைகள், மற்றும் இதனுடன் தொடர்புடைய அம்சங்கள் அனைத்தும் இணைந்ததே ஹதீஸ்கலையாகும்.
இதனடிப்படையில் ஹதீஸ்கலை கீழ்கண்டவாறு 6 வகையாக உள்ளது.
1 . علم تاريخ تدوين السنة – நபிமொழி வரலாறு அறிதல்.
(ஹதீஸ் என்றால் என்ன என்பது முதல் அது மார்க்க ஆதாரமா? இல்லையா? ஹதீஸ் நூல்கள் தொகுக்கப்பட்ட வரலாறு, ஹதீஸ்நூல்களின் வகைகள் குறித்த அனைத்து தகவல்களும் இதில் அடங்கிவிடும்)
2 . علم الجرح والتعديل، والرجال، والطبقات – அறிவிப்பாளர்களின் நிலைகளை அறிதல்.
(அறிவிப்பாளர்களைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறும் ஜர்ஹ், தஃதீல் சம்பந்தமானவை, அறிவிப்பாளர்களின் காலக்கட்டங்கள், ஹதீஸ்கலை அறிஞர்கள் பற்றி அறிந்துக்கொள்ளுதல் உட்பட அனைத்து தகவல்களும் இதில் அடங்கிவிடும்)
3 . علم مصطلح الحديث – ஹதீஸ்கலை சட்டங்கள்.
(ஒரு அறிவிப்பாளர்தொடர் குறித்து அல்லது ஹதீஸ் குறித்து என்ன மாதிரியான பெயர் கூறவேண்டும்; எவ்வாறு இருந்தால் ஏற்கப்படும்; எவ்வாறு இருந்தால் மறுக்கப்படும் என்பது பற்றிய சட்டங்களின் தொகுப்பு)
4 . علم العلل – இல்முல் இலல்.
(நுணுக்கமான குறை என்றால் என்ன? இதன் வகைகள் என்ன என்பது முதல் இதைப் பற்றி தொகுக்கப்பட்ட நூல்கள் யாவை என்பது வரை பலவை இதில் கூறப்பட்டிருக்கும்)
5 . علم التخريج، وسبر الأسانيد والحكم عليه – இல்முத் தக்ரீஜ், வ ஸப்ருல் அஸானீத், வல்ஹுக்மு அலைஹ்.
(ஒரு கருத்தில் வரும் ஹதீஸ்களை ஹதீஸ்நூல்கள், ஹதீஸ்நூல்களுடன் தொடர்புடைய மற்ற வகை நூல்களிலிருந்து திரட்டி முன்னால் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் ஹதீஸ்கலை விதிப்படி ஆய்வு செய்து முடிவு செய்வது எவ்வாறு என்று இதில் கூறப்பட்டிருக்கும்)
6 . علم شرح الحديث – ஒரு ஹதீஸுக்கு விளக்கவுரை கூறும் கல்வி.
அரபு மொழி பற்றிய அறிவு, மேற்கூறப்பட்ட அனைத்து வகை கல்வி பற்றிய அறிவு, நாஸிக், மன்ஸூக் பற்றிய அறிவு, முரண்படுவது போன்றுள்ள ஹதீஸ்களுக்கு விளக்கம் கூறுதல், ஹதீஸிலிருந்து சட்டமெடுத்தல் உட்பட அனைத்தும் சேர்ந்தது இந்த வகை கல்வி.
இதுவரை கூறப்பட்ட சுருக்கமான தகவல்களிலிருந்து ஹதீஸை ஆய்வு செய்யும் முறை:
1 . جمع طرق الحديث – ஒரு ஹதீஸை ஹதீஸ்நூல்கள், ஹதீஸ்நூல்களுடன் தொடர்புடைய நூல்கள் போன்றவற்றில் தேடி ஒன்று சேர்க்க வேண்டும்.
இதையே جمع طرق الحديث – ஜம்உ துருகில் ஹதீஸ்- ஒரு கருத்தில் வரும் செய்திகளை ஒன்று திரட்டுவது என்று கூறுவர். இதை பலதரப்பட்ட தக்ரீஜ் வகை நூல்களிலிருந்தும் நாம் தெரிந்துக் கொள்ளலாம். தற்போது உள்ள சில ஹதீஸ் சாஃப்ட்வேர்கள் மூலமாகவும் தெரிந்துக் கொள்ளலாம்.
2 . دراسة الاسانيد – ஒரு அறிவிப்பாளரை அறிஞர்கள் எவ்வாறு மதிப்பிடுகின்றனர் என்பதை அறிவதின் மூலமும், அறிவிப்பாளர்கள் பற்றி தொகுக்கப்பட்டுள்ள பலவகை நூல்கள் மூலமும், குறிப்பிட்ட ஹதீஸில் இடம்பெறும் அறிவிப்பாளர்களைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.
இதையே دراسة الاسانيد – திராஸதுல் அஸானீத்- அறிவிப்பாளர்தொடரை ஆய்வு செய்வது என்று கூறுவர்.
3 . علم اصطلاح الائمة والترجيح عند الاختلاف – ஹதீஸ்கலை அறிஞர்களின் ஜர்ஹ், தஃதீலின் வழக்குச் சொற்கள்; ஹதீஸ்கலை அறிஞர்களின் தாராதரங்கள்; ஒரு அறிவிப்பாளர் பற்றி கருத்துவேறுபாடு இருக்கும்போதும்; ஹதீஸ்கலை அறிஞர்களின் முடிவு பலவாறு இருக்கும்போதும் எவ்வாறு சரியாக முடிவு எடுப்பது; எதற்கு முன்னுரிமை-தர்ஜீஹ் தர வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
4 . معرفة علم العلل – இல்முல் இலல் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆய்வு செய்யவேண்டிய செய்தி பற்றி ஏற்கனவே இலல் நூல்களில் உள்ளதா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாம் அறிந்த இல்முல் இலல் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.
5 . العناية بأحكام الأئمة على الأحاديث والنظر فيها – ஒரு ஹதீஸைப் பற்றி நமக்கு முன்னுள்ள அறிஞர்களின் முடிவு எவ்வாறு உள்ளது என்பதை பார்க்க வேண்டும். ஹதீஸ்கலை விதிப்படி அவைகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். நமது சிந்தனைகளையும் பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும். (ஒரு ஹதீஸை ஆய்வு செய்வதற்கு முன்புகூட நமக்கு முன்னுள்ள அறிஞர்களின் ஆய்வு எப்படி உள்ளது என்று பார்த்து விட்டு நாம் ஆய்வு செய்யலாம்.)
மேற்கண்ட பல கட்டங்களுக்குப் பிறகு ஹதீஸின் தரத்தை நாம் அறிந்துவிடலாம்.
இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:
1 . பார்க்க: முக்கிய கல்வித்துறைகளில் முக்கிய அறிஞர்கள் .
2 . பார்க்க: அறிவிப்பாளர்தொடர்களில் அதிகம் வரும் முக்கியமானவர்கள் (மதாருர் ருவாத்).
3 . பார்க்க: குதுபுஸ் ஸித்தாவில் அதிகமாக காணப்படும் அறிவிப்பாளர்தொடர்கள் .
4 . பார்க்க: அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள் .
5 . பார்க்க: தரத்தைக் கவனித்து 12 வகை அறிவிப்பாளர்கள் .
6 . பார்க்க: காலகட்டத்தைக் கவனித்து 12 வகை அறிவிப்பாளர்கள் .
7 . பார்க்க: கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளரின் தரம் பற்றி எவ்வாறு முடிவு செய்வது? .
8 . பார்க்க: அறிவிப்பாளர் பற்றிய தகவலை தொகுப்பது எப்படி? .
9 . பார்க்க: ஸதூக் தரமுடையோர் .
10 . பார்க்க: ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்றால் என்ன?
11 . பார்க்க: அல்இஃதிபார், அல்முதாபஅஹ், அஷ்ஷாஹித் .
12 . பார்க்க: ஹதீஸ் ஆய்வில் நமது வழிமுறை .
13. பார்க்க: قرائن الترجيح – முன்னுரிமை தரும் காரணங்கள் .
14 . பார்க்க: பலமானவரின் கூடுதல் தகவல் .
- 1 . அறிவிப்பாளர்தொடர் சங்கிலித்தொடராக, இடைமுறிவு ஏற்படாதவாறு இருக்க வேண்டும் என்பதுடன் தொடர்புடைய சட்டங்கள்:
1 . முத்தஸில்
2 . முஸ்னத்
3 . முஅன்அன்
4 . முஅன்னன்
5 . முஸல்ஸல்
6 . ஆலீ
7 . நாஸில்
8 . அல்மஸீத் ஃபீ முத்தஸிலில் இஸ்னாத்
இவைகளில் முத்தஸில் என்பது அஸல் பெயராகும். மற்ற பெயர்கள் முத்தஸிலான அறிவிப்பாளர்தொடருக்கு கூறப்படும் கூடுதல் பெயர்களாகும்.
1 . முர்ஸல்
2 . முஃளல்
3 . முன்கதிஃ
4 . முஅல்லக்
5 . அல்முர்ஸலுல் கஃபீ
6 . முதல்லஸ்
இவைகளைப் பற்றி பார்க்க: இத்திஸால், இன்கிதாஃ .
சமீப விமர்சனங்கள்