தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

மவ்கூஃப்

---

யாரைப் பற்றி அறிவிக்கப்படுகிறது என்பதைக் கவனித்து பிரிக்கப்படும் ஹதீஸின் வகைகள்

1. குத்ஸீ

2. மர்ஃபூ

3. மவ்கூஃப்

4. மக்தூஃ

  •  அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் குத்ஸீ என்றும்
  •  நபிகள் நாயகம் தொடர்புடைய ஹதீஸ்கள் மர்ஃபூவு என்றும்
  •  நபித்தோழர்கள் தொடர்புடைய செய்திகள் மவ்கூஃப் என்றும்
  •  தாபியீன்கள் தொடர்புடைய செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும்.

 

மவ்கூஃப்

நபித்தோழர்களின் சொல், செயல், அங்கீகாரம் என நபித்தோழர்கள் தொடர்பாக மட்டும் அறிவிக்கப்படும் செய்திகள் மவ்கூஃப் என்று சொல்லப்படும். இதில் நபிகள் நாயகம் பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படாது. அறிவிப்பாளர் வரிசை நபித்தோழருடன் நிறுத்தப்படுவதால் மவ்கூஃப் (நிறுத்தப்பட்டது) என்று பெயரிடப்பட்டுள்ளது.

உதாரணம்:

1022 – وَقَالَ لَنَا أَبُو نُعَيْمٍ عَنْ زُهَيْرٍ ، عَنْ أَبِي إِسْحَاقَ
خَرَجَ عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ الأَنْصَارِيُّ وَخَرَجَ مَعَهُ الْبَرَاءُ بْنُ عَازِبٍ وَزَيْدُ بْنُ أَرْقَمَ رضى الله عنهم فَاسْتَسْقَى فَقَامَ بِهِمْ عَلَى رِجْلَيْهِ عَلَى غَيْرِ مِنْبَرٍ فَاسْتَغْفَرَ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ يَجْهَرُ بِالْقِرَاءَةِ وَلَمْ يُؤَذِّنْ وَلَمْ يُقِمْ.

 

அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (மழைத் தொழுகை நடத்தத் தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரும் சென்றனர். அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தார்கள். சொற்பொழிவுமேடை (மிம்பர்) ஏதும் இல்லாமல் தரையில் நின்றுகொண்டே பாவமன்னிப்புக் கோரினார்கள். பிறகு சப்தமிட்டு ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பாங்கும் சொல்லவில்லை; இகாமத்தும் சொல்லவில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி), நூல்: புகாரி-1022

இது அப்துல்லாஹ் பின் யஸீத் எனும் நபித்தோழரின் செயலாக இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் சம்பந்தப்படவில்லை.

இதுபோன்று நபித்தோழர்கள் சொன்னதாக, செய்ததாக வரும் செய்திகளுக்கு “மவ்கூஃப்” என்று பெயரிடப்படும்.

 


 

மவ்கூஃப்,  மக்தூஃ போன்ற வகைகளைப் பொறுத்த வரையில் அவை ஹதீஸ்களே கிடையாது.

ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள்தான் ஹதீஸ் என்று சொல்லப்படும்.

ஸஹாபாக்கள், தாபியீன்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் அஸர் என்றுதான் சொல்லப்படும்.

நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டவைதான் இறைச்செய்தி – வஹியாகும். அதைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.

அதைத் தவிர்த்து, ஸஹாபாக்கள், தாபியீன்கள் போன்ற மனிதர்களுடைய கூற்றுகளை நாம் மார்க்கமாகப் பின்பற்றினால் அது வழிகேடாகும்.

எனவே மவ்கூஃப், மக்தூஃ போன்ற செய்திகளை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஏனெனில் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்:

“உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கி பின்பற்றராதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்” (அல்குர்ஆன் 7:3)



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.