தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

முன்கர், மஃரூஃப்

---

முன்கர், மஃரூஃப்

ஒரு அறிவிப்பாளர் வெறுக்கத்தக்க தவறிழைக்க கூடியவராகவோ, அல்லது அதிகம் கவனமற்றவராகவோ, பெரும்பாவங்கள் செய்பவராகவோ இருந்தால் அவருடைய அறிவிப்பு முன்கர் என்று கூறப்படும்.

இதற்கு பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்.

“கனியாத பேரீத்தங்காயை சாப்பிடுங்கள். ஏனென்றால் ஆதமுடைய மகன் அதனைச் சாப்பிட்டால் ஷைத்தான் கோபம் கொள்கிறான்”

இந்தச் செய்தி நபியவர்கள் கூறியதாக இப்னுமாஜா-3330 (3321) இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ”அபுஸ் ஸுகைர் யஹ்யா இப்னு முஹம்மது” என்பார் இடம் பெற்றுள்ளார். இந்தச் செய்தியை இமாம் நஸாயி அவர்கள் ”முன்கர் என்றும் இதனை அபுஸ் ஸுகைர் தனித்து அறிவிக்கிறார்” என்றும் குறை கூறியுள்ளார்கள்.

முன்கர் என்பதற்குப் பின்வருமாறும் விளக்கம் கூறப்படும்.

ஒரு ஆசிரியரிடமிருந்து கற்ற பல மாணவர்கள் ஒரு செய்தியை எப்படி அறிவிக்கின்றார்களோ அதற்கு முரணாக ஒரே ஒருவர் அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அதை ஷாத் என்று அறிந்தோம். மற்றவர்களை விட உறுதி குறைந்தவராக, நினைவாற்றல் குறைவானவராக அந்த ஒருவர் இருந்து விட்டால் அது முன்கர் எனப்படும்.

ஒரு ஹதீஸ் பற்றி முன்கர் என்று கூறப்பட்டால் அதை அறிவிக்கும் ஒருவர் பலவீனமாக உள்ளார் என்பதும் அதற்கு மாற்றமாக அதே ஆசிரியர் வழியாக நம்பகமான மற்ற மாணவர்கள் அறிவித்துள்ளனர் என்பதும் பொருள்.

ஷாத் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களையே ஆதாரமாகக் கொள்வதில்லை எனும் போது முன்கர் என்ற நிலையில் அமைந்த ஹதீஸைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

முன்கர் என்ற நிலையில் இல்லாத ஹதீஸ்கள் மஃரூஃப் என்று கூறப்படும்.

அதாவது ஒரு ஆசிரியரிடமிருந்து ஐந்து மாணவர்கள் அறிவிக்கின்றனர். ஐவரில் நால்வர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் மட்டும் அறிவிக்கின்றனர். அந்த நால்வர் நம்பகமானவர்களாக இருப்பது போல் இந்த ஒருவர் நம்பகமானவராக இல்லை என்றால் இந்த ஒருவர் அறிவிப்பது முன்கர் என்போம். அந்த நால்வர் அறிவிப்பது மஃரூஃப் என்போம். மஃரூஃப் என்பது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஒரு வகையாகும்.

இதற்கு பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்.

“யார் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை நிறைவேற்றி, ஹஜ் செய்து, நோன்பு நோற்று, இன்னும் விருந்தினரை உபசரிக்கின்றாரோ அவர் சுவனம் புகுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அல் முஃஜமுல் கபீர்-12692

இந்த செய்தியை அபூ இஸ்ஹாக் என்பாரிடமிருந்து ”ஹுபைய்யிப் இப்னு ஹபீப் அஸ்ஸய்யாத்” என்பார் மட்டுமே நபியவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். ஆனால் மற்ற நம்பகமானவர்கள் அபூ இஸ்ஹாக் வழியாக இப்னு அப்பாஸின் சொந்தக் கூற்றாகவே அறிவிக்கின்றனர். எனவே நம்பகமானவர்களுக்கு முரணாக பலவீனமானவர் அறிவிப்பதினால் இந்தச் செய்திக்கு ”முன்கர்” என்றும் நம்பகமானவர்களின் அறிவிப்பு ”மஃரூஃப்” என்றும் கூறப்படும்.


பிற்சேர்க்கை: (இதைப் பற்றி கூடுதல் தகவல்)

منكر الحديث – முன்கருல் ஹதீஸ் (ஹதீஸில் நிராகரிக்கப்பட்டவர்) என்ற இந்த ஹதீஸ்கலை வழக்குச் சொல்லை அறிஞர்கள் பல கருத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

1 . பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிவிக்கக்கூடியவருக்கும் இவ்வாறு சிலர் கூறியுள்ளனர்.

2 . மனனத்தில் சிறிது பலவீனமான இருந்து, பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கக்கூடியவருக்கும் இவ்வாறு சிலர் கூறியுள்ளனர். (இந்த தவறை அவர், ஒரு செய்தியில் செய்திருந்தாலும் சிலர் அவ்வாறு கூறியிருப்பார்கள். அல்லது சில செய்திகளிலோ அல்லது பல செய்திகளிலோ செய்திருந்தாலும் அவ்வாறு கூறியிருப்பார்கள்)

3 . சில செய்திகளை தனித்து அறிவிக்கக்கூடியவருக்கும் இவ்வாறு சிலர் கூறியுள்ளனர்.


  • ஒரு செய்தியை பற்றி – هذا حديث منكر – இது முன்கரான செய்தி என்று அறிஞர்கள் கூறியிருந்தால் அந்தச் செய்தியை அதுபோன்ற மற்ற செய்திக்கு துணைச் சான்றாக கூறக்கூடாது. மேலும் மற்ற செய்தியால் இதைச் சரியானது என்றும் கூறக்கூடாது.

1 . ஆனால் ஒருவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறப்பட்டிருந்தால் அதைக் கூறிய அறிஞரின் வழக்குச் சொல் என்ன என்பதை தெரிந்திருக்க வேண்டும்.

2 . நாம் மேலே கூறிய மூன்று வகை அறிவிப்பாளர்களில் முதல் வகை அறிவிப்பாளர்களைத் தவிர மற்ற இரண்டு வகை அறிவிப்பாளர்களில் சிலரின் செய்திகளை துணைச் சான்றாக பயன்படுத்தலாம். மேலும் இந்த வகையினரின் செய்திகள் மூலம் அதே கருத்தில் வந்துள்ள மற்ற செய்திகளை பலமானது என்றும் கூறலாம்.

3 . இவ்வாறே ஒருவரைப் பற்றி
له مناكير – லஹூ மனாகீர்,
عنده مناكير – இன்தஹூ மனாகீர்
روى أحاديث منكرة – ரவா அஹாதீஸ முன்கரதன்
يروى أحاديث مناكير – யர்வீ அஹாதீஸ மனாகீர்
في حديثه بعض الإنكار – ஃபீ ஹதீஸிஹீ பஃளுல் இன்கார்

இது போன்ற வார்த்தைகள், இவரின் சில செய்திகள் முன்கரானவை என்ற கருத்தைத் தரக்கூடியவை. எனவே இந்த வகையினர் பலமானவர்களுக்கு மாற்றமில்லாமல் அறிவிக்கும் செய்திகள் சரியானவையாகும்.

(ஆதார நூல்கள்: ஷரஹு இலலுத் திர்மிதீ-1/385, மீஸானுல் இஃதிதால்-7097, 3/445, ஷரஹுத் தப்ஸிரா-அல்ஃபிய்யதுல் இராக்கீ-349, (தஹ்தீபுத் தஹ்தீப்-2735, ஸலாமா பின் ரவ்ஹ் பற்றி அபூஸுர்ஆ அவர்களின் கருத்து
ضعيف، مُنكر الحديث، يُكتب حديثُه على الاعتبار )

(شكرا :1.) هل هناك فرق بين قولهم: «هذا حديث منكر

2.) قول احمد منكر الحديث)


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.