இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூஸா(அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது, பனூ இஸ்ராயீல்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால் தான் இந்த அளவிற்கு இவர் (தன் மேனியை) மறைத்துக் கொள்கிறார். (இவருக்குக்) தொழு நோய் இருக்கவேண்டும்; அல்லது குடலிறக்க நோய் இருக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.
மூஸா(அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். எனவே, (இறைவனின் திட்டப்படி) ஒரு நாள் மூஸா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத்திற்குத்) தனியாகச் சென்று, தம் ஆடைகளை (கழற்றிக்) கல்லின் மீது வைத்துவிட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக் கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது அந்தக் கல் அவர்களின் துணியுடன் ஓடலாயிற்று.
மூஸா(அலை) அவர்கள், தம் தடியை எடுத்துக் கொண்டு கல்லை விரட்டிப்பிடிக்க முனைந்தார்கள். ‘கல்லே என் துணி! கல்லே என் துணி!’ என்று குரல் எழுப்பலானார்கள். (அதை விரட்டிச் சென்றபடி) இறுதியில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரின் தலைவர்களிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தினர், மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அழகானவர்களாகவும் தாம் சொன்ன குறைபாடுகளிலிருந்து தூய்மையானவர்களாகவும் இருப்பதை, அவர்களை ஆடையில்லாத கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக் கொண்டார்கள். கல் (ஓடாமல்) நின்றது. உடனே, மூஸா(அலை) அவர்கள், தம் துணியை எடுத்துக் கொண்டு தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்கலானார்கள்.
அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:
அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து தழும்புகள் (இன்னும்) உள்ளன.
இந்த நிகழ்ச்சியைத் தான், ‘இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்’ என்றும் (திருக்குர்ஆன் 33:69) இறைவசனம் குறிக்கிறது.
Book :60
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا عَوْفٌ، عَنِ الحَسَنِ، وَمُحَمَّدٍ، وَخِلاَسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِنَّ مُوسَى كَانَ رَجُلًا حَيِيًّا سِتِّيرًا، لاَ يُرَى مِنْ جِلْدِهِ شَيْءٌ اسْتِحْيَاءً مِنْهُ، فَآذَاهُ مَنْ آذَاهُ مِنْ بَنِي إِسْرَائِيلَ فَقَالُوا: مَا يَسْتَتِرُ هَذَا التَّسَتُّرَ، إِلَّا مِنْ عَيْبٍ بِجِلْدِهِ: إِمَّا بَرَصٌ وَإِمَّا أُدْرَةٌ: وَإِمَّا آفَةٌ، وَإِنَّ اللَّهَ أَرَادَ أَنْ يُبَرِّئَهُ مِمَّا قَالُوا لِمُوسَى، فَخَلاَ يَوْمًا وَحْدَهُ، فَوَضَعَ ثِيَابَهُ عَلَى الحَجَرِ، ثُمَّ اغْتَسَلَ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ إِلَى ثِيَابِهِ لِيَأْخُذَهَا، وَإِنَّ الحَجَرَ عَدَا بِثَوْبِهِ، فَأَخَذَ مُوسَى عَصَاهُ وَطَلَبَ الحَجَرَ، فَجَعَلَ يَقُولُ: ثَوْبِي حَجَرُ، ثَوْبِي حَجَرُ، حَتَّى انْتَهَى إِلَى مَلَإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، فَرَأَوْهُ عُرْيَانًا أَحْسَنَ مَا خَلَقَ اللَّهُ، وَأَبْرَأَهُ مِمَّا يَقُولُونَ، وَقَامَ الحَجَرُ، فَأَخَذَ ثَوْبَهُ فَلَبِسَهُ، وَطَفِقَ بِالحَجَرِ ضَرْبًا بِعَصَاهُ، فَوَاللَّهِ إِنَّ بِالحَجَرِ لَنَدَبًا مِنْ أَثَرِ ضَرْبِهِ، ثَلاَثًا أَوْ أَرْبَعًا أَوْ خَمْسًا، فَذَلِكَ قَوْلُهُ: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا
சமீப விமர்சனங்கள்