Category: புஹாரி

Bukhari

Bukhari-6025

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6025. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்’ என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது. 41

பகுதி 36

இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பது.

Book :78


أَنَّ أَعْرَابِيًّا بَالَ فِي المَسْجِدِ، فَقَامُوا إِلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُزْرِمُوهُ» ثُمَّ دَعَا بِدَلْوٍ مِنْ مَاءٍ فَصُبَّ عَلَيْهِ


Bukhari-6024

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35 எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுதல்.

6024. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்

யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘அஸ்ஸாமு அலைக்கும்’ (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு ‘வ அலைக்கும் அஸ்ஸலாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)’ என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான்தான் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)’ என்று கேட்டார்கள்.

Book : 78


دَخَلَ رَهْطٌ مِنَ اليَهُودِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: السَّامُ عَلَيْكُمْ، قَالَتْ عَائِشَةُ: فَفَهِمْتُهَا فَقُلْتُ: وَعَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ، قَالَتْ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَهْلًا يَا عَائِشَةُ، إِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” قَدْ قُلْتُ: وَعَلَيْكُمْ


Bukhari-6023

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34 இன் சொல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன் சொல்லும் தர்மமாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.40

6023. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.

பிறகும் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போதும் தம் முகத்தைத் திருப்பினார்கள்.

பிறகு, ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்)’ என்றார்கள்.

அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) ‘(நபியவர்கள் நரகத்தைப் பற்றி) இரண்டு முறை (குறிப்பிட்டார்கள்) என்பதில் சந்தேகமில்லை. (மூன்றாவது முறை குறிப்பிட்டார்களா என்பதில்

ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّارَ، فَتَعَوَّذَ مِنْهَا وَأَشَاحَ بِوَجْهِهِ، ثُمَّ ذَكَرَ النَّارَ فَتَعَوَّذَ مِنْهَا وَأَشَاحَ بِوَجْهِهِ، – قَالَ شُعْبَةُ: أَمَّا مَرَّتَيْنِ فَلاَ أَشُكُّ – ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ تَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ»


Bukhari-6022

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6022. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்

‘தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்’ என்று கூறினார்கள். மக்கள், ‘அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்’ அல்லது ‘அதை அவர் செய்யாவிட்டால்’ (என்ன செய்வது?)’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்’ என்றார்கள். மக்கள், ‘(இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அப்போது அவர் ‘நல்லதை’ அல்லது நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்’ என்றார்கள். ‘(இதையும்) அவர் செய்யாவிட்டால்?’ என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், ‘அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்’ என்றார்கள்.39

Book :78


«عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ» قَالُوا: فَإِنْ لَمْ يَجِدْ؟ قَالَ: «فَيَعْمَلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ» قَالُوا: فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: «فَيُعِينُ ذَا الحَاجَةِ المَلْهُوفَ» قَالُوا: فَإِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: «فَيَأْمُرُ بِالخَيْرِ» أَوْ قَالَ: «بِالْمَعْرُوفِ» قَالَ: فَإِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: «فَيُمْسِكُ عَنِ الشَّرِّ فَإِنَّهُ لَهُ صَدَقَةٌ»


Bukhari-6021

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 எல்லா நற்கர்மமும் தர்மமே

6021. ‘எல்லா நற்செயலும் தர்மமே’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 38 என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

Book : 78


«كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ»


Bukhari-6020

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32 வீட்டு வாசலின் நெருக்கத்தை வைத்து அண்டை வீட்டா(ரில் யாரு)க்கு முன்னுரிமை அளிப்பது (என்பதைத் தீர்மானிப்பது).

6020. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இருவரில் யாருடைய வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு’ என்று பதிலளித்தார்கள்.37

Book : 78


قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي جَارَيْنِ، فَإِلَى أَيِّهِمَا أُهْدِي؟ قَالَ: «إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا»


Bukhari-6019

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6019. அபூ ஷுரைஹ் அல்அதனீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தம் கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்’ என்று கூறினார்கள். அப்போது, ‘இறைத்தூதர் அவர்களே! அவரின் கொடை என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘(அவரின் கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்’ என்று கூறினார்கள்.

Book :78


«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ جَائِزَتَهُ» قَالَ: وَمَا جَائِزَتُهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «يَوْمٌ وَلَيْلَةٌ، وَالضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ، فَمَا كَانَ وَرَاءَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ عَلَيْهِ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ»


Bukhari-6018

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 31

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம்.

6018. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book : 78


«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ»


Bukhari-6017

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 30

எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்குத் தான் அளிக்கும் சிறிய அன்பளிப்பைக் கூட அற்பமாகக் கருத வேண்டாம்.

6017. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

“முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் (அடிக்கடி) கூறுவார்கள்.

அத்தியாயம்: 78


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَقُولُ: «يَا نِسَاءَ المُسْلِمَاتِ، لاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ فِرْسِنَ شَاةٍ»


Bukhari-6016

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29

எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவனது பாவத்தின் நிலை. (‘நாசவேலைகள்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள ‘பவாயிக்’ எனும் சொல்லில் இருந்து பிறந்ததும், 42:34ஆவது இறைவசனத்தின் மூலத்தில் உள்ளதுமான) ‘யூபிக்ஹுன்ன’எனும் சொல்லுக்கு ‘அவற்றை அழித்துவிடுவான்’ என்று பொருள். (18:52 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்பிகன்’ எனும் சொல்லுக்கு ‘நாசம்’ என்று பொருள்.

6016. அபூ ஷுரைஹ்(ரலி) அறிவித்தார்

‘அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை’ என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள்.

«وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ، وَاللَّهِ لاَ يُؤْمِنُ» قِيلَ: وَمَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الَّذِي لاَ يَأْمَنُ جَارُهُ بَوَايِقَهُ» تَابَعَهُ شَبَابَةُ، وَأَسَدُ بْنُ مُوسَى، وَقَالَ حُمَيْدُ بْنُ الأَسْوَدِ، وَعُثْمَانُ بْنُ عُمَرَ، وَأَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، وَشُعَيْبُ بْنُ إِسْحَاقَ، عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ


Next Page » « Previous Page