Category: புஹாரி

Bukhari

Bukhari-5234

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 113 மக்கள் அருகிலிருக்க, அந்நியப் பெண்ணுடன் ஓர் ஆண் தனியாக(ப் பேசிக் கொண்டு) இருப்பது அனுமதிக்கப்பட்டதே!

5234. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

அன்சாரிகளில் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவருடன் தனியாக (எங்கள் காதில் விழாத விதத்தில்) நபியவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், அந்தப் பெண்மணியிடம், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளாகிய) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று கூறினார்கள்.

Book : 67


جَاءَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَلاَ بِهَا، فَقَالَ: «وَاللَّهِ إِنَّكُنَّ لَأَحَبُّ النَّاسِ إِلَيَّ»


Bukhari-5233

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5233. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

”ஒரு பெண்ணுடன் எந்த (அன்னிய) ஆடவனும் தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்காத தகாத) நெருங்கிய உறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டுவிட்டாள். இன்ன இன்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில்) நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(போருக்குச் செல்வதிலிருந்து பெயரை) திரும்பப் பெற்றுக்கொண்டு, நீர் உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!” என்று கூறினார்கள். 163

Book :67


«لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ» فَقَامَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، امْرَأَتِي خَرَجَتْ حَاجَّةً، وَاكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا، قَالَ: «ارْجِعْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ»


Bukhari-5232

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 112 (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினர் தவிர (வேறு) எந்த (அன்னிய) ஆணும் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கலாகாது; கணவன் இல்லாத நேரத்தில் ஒரு பெண்ணிடம் செல்லலாகாது.

5232. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள். 162

Book : 67


«إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ» فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: يَا رَسُولَ اللَّهِ، أَفَرَأَيْتَ الحَمْوَ؟ قَالَ: «الحَمْوُ المَوْتُ»


Bukhari-5231

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 111 (இறுதிக் காலத்தில்) ஆண்கள் குறைந்து விடுவர்; பெண்கள் அதிகரித்துவிடுவர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமைநாள் நெருங்கும் இறுதிக் காலத்தில்) ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்வதை•நீ காண்பாய்! ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகரித்துவிடுவதனால் ஆண்களிடம் அபயம் தேடியே இவ்வாறு செல்வர். இதை அபூ மூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.160

5231. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

என் அல்லாத வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியேற்ற செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கப் போகிறேன், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கல்வி அகற்றப்பட்டுவிடுவதும், அறியாமை மலிந்துவிடுவதும், விபசாரம் அதிகரித்து விடுவதும், மது அருந்துதல் அதிகரித்து விடுவதும், ஐம்பது பெண்களுக்கு – அவர்களை நிர்வம்க்க ஒரே ஆண் என்ற நிலைமைவரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். 161

Book : 67


لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يُحَدِّثُكُمْ بِهِ أَحَدٌ غَيْرِي: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ العِلْمُ، وَيَكْثُرَ الجَهْلُ، وَيَكْثُرَ الزِّنَا، وَيَكْثُرَ شُرْبُ الخَمْرِ، وَيَقِلَّ الرِّجَالُ، وَيَكْثُرَ النِّسَاءُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً القَيِّمُ الوَاحِدُ»


Bukhari-5230

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 110

ஒருவர் தம் புதல்வியின் தன்மான உணர்வைக் காக்கவும், நீதி கோரியும் வாதிடுவது.

5230. மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்த படி, ‘ஹிஷாம் இப்னு முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூ ஜஹ்லுடைய) மகளை அலீ இப்னு அபீ தாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். மீண்டும் நான் அனுமதிக்கமாட்டேன். அலீ இப்னு தாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்குச் செய்துவிட்டு, அவர்களின் மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்). ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும்; அவரை என் வேதனைப்படுவது என்னை மன வேதனைப்படுத்துவதாகும்” என்று கூறினார்கள். 159

Book : 67


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ عَلَى المِنْبَرِ: «إِنَّ بَنِي هِشَامِ بْنِ المُغِيرَةِ اسْتَأْذَنُوا فِي أَنْ يُنْكِحُوا ابْنَتَهُمْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، فَلاَ آذَنُ، ثُمَّ لاَ آذَنُ، ثُمَّ لاَ آذَنُ، إِلَّا أَنْ يُرِيدَ ابْنُ أَبِي طَالِبٍ أَنْ يُطَلِّقَ ابْنَتِي وَيَنْكِحَ ابْنَتَهُمْ، فَإِنَّمَا هِيَ بَضْعَةٌ مِنِّي، يُرِيبُنِي مَا أَرَابَهَا، وَيُؤْذِينِي مَا آذَاهَا» هَكَذَا قَالَ


Bukhari-5229

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5229. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷம் கொண்டதைப் போல் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (இதர) துணைவியர் எவர் மீதும் நான் ரோஷப்பட்டதில்லை. ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கதீஜாவை அதிகமாக நினைவுகூர்ந்து, அவரை (அடிக்கடி) புகழ்ந்து பேசிவந்தார்கள். கதீஜா அவர்களுக்கென சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று கொடுக்கப்படும் என்று அவருக்கு நற்செய்தி கூறும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்க ‘வஹீ’ மூலம் உத்தரவிடப்பட்டது. 158

Book :67


«مَا غِرْتُ عَلَى امْرَأَةٍ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَاغِرْتُ عَلَى خَدِيجَةَ، لِكَثْرَةِ ذِكْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِيَّاهَا وَثَنَائِهِ عَلَيْهَا، وَقَدْ أُوحِيَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبَشِّرَهَا بِبَيْتٍ لَهَا فِي الجَنَّةِ مِنْ قَصَبٍ»


Bukhari-5228

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 109 பெண்களின் ரோஷமும் கோபமும்.157

5228. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், ‘இப்ராஹீம்(அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று கூறினார்கள். நான், ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதுன்று)” என்று கூறினேன்.

Book : 67


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَعْلَمُ إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً، وَإِذَا كُنْتِ عَلَيَّ غَضْبَى» قَالَتْ: فَقُلْتُ: مِنْ أَيْنَ تَعْرِفُ ذَلِكَ؟ فَقَالَ: ” أَمَّا إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً، فَإِنَّكِ تَقُولِينَ: لاَ وَرَبِّ مُحَمَّدٍ، وَإِذَا كُنْتِ عَلَيَّ غَضْبَى، قُلْتِ: لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ ” قَالَتْ: قُلْتُ: أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، مَا أَهْجُرُ إِلَّا اسْمَكَ


Bukhari-5227

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5227. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நாங்கள் (ஒருநாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) மாளிகை ஒன்றின் அருகில் ஒருபெண் (உலகில் தான் இறைவணக்கம் புரிபவளாய் இருந்துவந்ததைக் குறிக்கும் வகையிலும் தன் அழகையும் பொலிவையும் மெருகேற்றிக் கொள்ளவும்) ‘உளு’ச் செய்து கொண்டிருந்தாள். அப்போது நான், ‘இந்த மாளிகை யாருக்குரியது?’ என்று கேட்டேன். (வானவர்) ஒருவர், ‘இது உமக்குரியது” என பதிலளித்தார். (அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். உமர் அவர்களின் ரோஷம் என் நினைவுக்கு வந்தது. உடனே அங்கிருந்து திரும்பி வந்துவிட்டேன்” என்று கூறினார்கள். அங்கு அவையிலிருந்த உமர்(ரலி) (இதைக்கேட்டு) அழுதார்கள். பிறகு, ‘தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்டார்கள். 156

Book :67


بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُلُوسٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” بَيْنَمَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي فِي الجَنَّةِ، فَإِذَا امْرَأَةٌ تَتَوَضَّأُ إِلَى جَانِبِ قَصْرٍ، فَقُلْتُ: لِمَنْ هَذَا؟ قَالُوا: هَذَا لِعُمَرَ، فَذَكَرْتُ غَيْرَتَكَ، فَوَلَّيْتُ مُدْبِرًا ” فَبَكَى عُمَرُ وَهُوَ فِي المَجْلِسِ ثُمَّ قَالَ: أَوَعَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ أَغَارُ؟


Bukhari-5226

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5226. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ‘(கனவில்) ‘நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன்’ அல்லது ‘சொர்க்கத்திற்குச் சென்றேன்’ அங்கு ஒரு மாளிகையைக் கண்டேன். நான், ‘இது யாருடையது?’ என்று கேட்டன். அவர்கள் (வானவர்கள்), ‘இது உமர் இப்னு கத்தாப் அவர்களின்து” என பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். ஆனால், (உமரே!) உம்முடைய ரோஷம் குறித்து நான் அறிந்திருந்தது என்னை (உள்ளே செல்லவிடாமல்) தடுத்துவிட்டது” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உமர் இப்னு கத்தாப்(ரலி), ‘என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்டார்கள். 155

Book :67


دَخَلْتُ الجَنَّةَ أَوْ أَتَيْتُ الجَنَّةَ، فَأَبْصَرْتُ قَصْرًا، فَقُلْتُ: لِمَنْ هَذَا؟ قَالُوا: لِعُمَرَ بْنِ الخَطَّابِ، فَأَرَدْتُ أَنْ أَدْخُلَهُ، فَلَمْ يَمْنَعْنِي إِلَّا عِلْمِي بِغَيْرَتِكَ ” قَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ: يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا نَبِيَّ اللَّهِ، أَوَعَلَيْكَ أَغَارُ؟


Bukhari-5225

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5225. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(து கொண்டிருந்)தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப்பினார்கள். 153 (அப்போது) நபி(ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது. உடனே (ஆத்திரப்படாமல்) நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), ‘உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்” என்று கூறினார்கள். பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார (துணைவியா)ரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள். 154

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ، فَأَرْسَلَتْ إِحْدَى أُمَّهَاتِ المُؤْمِنِينَ بِصَحْفَةٍ فِيهَا طَعَامٌ، فَضَرَبَتِ الَّتِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهَا يَدَ الخَادِمِ، فَسَقَطَتِ الصَّحْفَةُ فَانْفَلَقَتْ، فَجَمَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِلَقَ الصَّحْفَةِ، ثُمَّ جَعَلَ يَجْمَعُ فِيهَا الطَّعَامَ الَّذِي كَانَ فِي الصَّحْفَةِ، وَيَقُولُ: «غَارَتْ أُمُّكُمْ» ثُمَّ حَبَسَ الخَادِمَ حَتَّى أُتِيَ بِصَحْفَةٍ مِنْ عِنْدِ الَّتِي هُوَ فِي بَيْتِهَا، فَدَفَعَ الصَّحْفَةَ الصَّحِيحَةَ إِلَى الَّتِي كُسِرَتْ صَحْفَتُهَا، وَأَمْسَكَ المَكْسُورَةَ فِي بَيْتِ الَّتِي كَسَرَتْ