Category: முஸ்லிம்

Muslim-4220

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4220. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியவேண்டாம் என்றும், பொன் மோதிரம் அணிய வேண்டாமென்றும், (தொழுகையில்) ருகூஉவில் குர்ஆனை ஓத வேண்டாமென்றும் தடை செய்தார்கள்.- இதை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 37


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُبْسِ الْقَسِّيِّ، وَالْمُعَصْفَرِ، وَعَنْ تَخَتُّمِ الذَّهَبِ، وَعَنْ قِرَاءَةِ الْقُرْآنِ فِي الرُّكُوعِ»


Muslim-4219

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4219. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “உன் தாயாரா இவ்வாறு (செம்மஞ்சள் நிறச் சாயமிடுமாறு) உமக்குக் கட்டளையிட்டார்?” என்று கேட்டார்கள். நான், “அவ்விரண்டையும் கழுவி (செம்மஞ்சள் நிறச் சாயத்தை அகற்றி)க் கொள்கிறேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “இல்லை, அவ்விரண்டையும் எரித்துவிடு” என்று சொன்னார்கள்.

Book : 37


رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ، فَقَالَ: «أَأُمُّكَ أَمَرَتْكَ بِهَذَا؟» قُلْتُ: أَغْسِلُهُمَا، قَالَ: «بَلْ أَحْرِقْهُمَا»


Muslim-4218

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடையை ஆண்கள் அணிவதற்கு வந்துள்ள தடை.

4218. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்டபோது, “இவை இறைமறுப்பாளர்களின் ஆடைகளில் உள்ளவையாகும். எனவே, இதை நீர் அணியாதீர்” என்று சொன்னார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 37


رَأَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ، فَقَالَ: «إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا»

– وحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا هِشَامٌ، ح وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَلِيِّ بْنِ الْمُبَارَكِ، كِلَاهُمَا عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَا: عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ


Muslim-4217

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4217. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களும் புறப்பட்டுச் சென்ற ஒரு போர் பயணத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தமது உடலில் சிரங்கு உண்டாக்கிய) ஒட்டுண்ணிகளைக் குறித்து முறையிட்டனர். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் பட்டு முழு நீளங்கி அணிய அனுமதியளித்தார்கள்.

Book : 37


أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ شَكَوَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَمْلَ، «فَرَخَّصَ لَهُمَا فِي قُمُصِ الْحَرِيرِ فِي غَزَاةٍ لَهُمَا»


Muslim-4216

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4216. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது

ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோருக்குச் சொறிசிரங்கு ஏற்பட்டிருந்த காரணத்தால் பட்டாடை அணிந்துகொள்ள அவர்கள் இருவருக்கும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.” அல்லது “அனுமதியளிக்கப்பட்டது.”

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 37


«رَخَّصَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَوْ رُخِّصَ – لِلزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ، وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فِي لُبْسِ الْحَرِيرِ لِحِكَّةٍ كَانَتْ بِهِمَا»

– وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ


Muslim-4215

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3

சொறிசிரங்கு உள்ளிட்டவை இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம்.

4215. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) , ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) ஆகியோருக்குப் பயணத்தில் சொறிசிரங்கு அல்லது (வேறு) நோய் ஏற்பட்டிருந்ததால் பட்டு முழு நீளங்கி அணிந்துகொள்ள அவ்விருவருக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “பயணத்தில்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Book : 37


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَخَّصَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَالزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ فِي الْقُمُصِ الْحَرِيرِ فِي السَّفَرِ مِنْ حِكَّةٍ كَانَتْ بِهِمَا» أَوْ وَجَعٍ كَانَ بِهِمَا

– وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا سَعِيدٌ، بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ فِي السَّفَرِ


Muslim-4214

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4214. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆண்கள் பட்டு அணிவது தடைசெய்யப்படுவதற்கு முன்பு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (“ஃபர்ரூஜ்”எனும்) நீண்ட பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து கொண்டார்கள். பிறகு அதை அணிந்தபடியே (மஃக்ரிப் தொழுகை) தொழுதார்கள்.

தொழுகை முடிந்து திரும்பியதும் அதை வெறுப்பவர்களைப் போன்று பலமாக (உருவிக்) கழற்றினார்கள். பிறகு, “இது இறையச்சமுடையவர்களுக்கு உகந்ததன்று” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 37


أُهْدِيَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُّوجُ حَرِيرٍ فَلَبِسَهُ، ثُمَّ صَلَّى فِيهِ، ثُمَّ انْصَرَفَ، فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالْكَارِهِ لَهُ، ثُمَّ قَالَ: «لَا يَنْبَغِي هَذَا لِلْمُتَّقِينَ»

– وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا الضَّحَّاكُ يَعْنِي أَبَا عَاصِمٍ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، بِهَذَا الْإِسْنَادِ


Muslim-4213

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4213. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இம்மையில் பட்டு அணிந்தவர், மறுமையில் அதை அணியமாட்டார்.

இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 37


«مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الْآخِرَةِ»


Muslim-4212

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இம்மையில் பட்டு அணிகிறாரோ, அவர் மறுமையில் அதை அணியமாட்டார்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 37


«مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الْآخِرَةِ»


Muslim-4211

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4211. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மென்பட்டு நீளங்கியொன்றை உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே! (முன்பு) இந்த ஆடை குறித்து வேறுவிதமாகக் கூறினீர்களே?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக உங்களுக்கு நான் கொடுத்தனுப்பவில்லை. (மாறாக, இதை விலைக்கு விற்று,) அந்தக் காசின் மூலம் நீங்கள் பயனடைந்து கொள்வதற்காகவே உங்களுக்கு இதை நான் கொடுத்தனுப்பினேன்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 37


بَعَثَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عُمَرَ بِجُبَّةِ سُنْدُسٍ، فَقَالَ عُمَرُ: بَعَثْتَ بِهَا إِلَيَّ وَقَدْ قُلْتَ فِيهَا مَا قُلْتَ، قَالَ: «إِنِّي لَمْ أَبْعَثْ بِهَا إِلَيْكَ لِتَلْبَسَهَا، وَإِنَّمَا بَعَثْتُ بِهَا إِلَيْكَ لِتَنْتَفِعَ بِثَمَنِهَا»


Next Page » « Previous Page