Category: முஸ்லிம்

Muslim-1433

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30

இரவுத் தொழுகை உள்ளிட்ட நற்செயல்களை நிரந்தரமாகத் தொடர்ந்து செய்வதன் சிறப்பு.

1433. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. அதை அவர்கள் இரவில் ஓர் அறை போன்று அமைத்துக்கொண்டு அதனுள் தொழுவார்கள். (அதில் அவர்கள் தொழும்போது) அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழலாயினர். பகலில் அந்தப் பாயை விரிப்பாக பயன்படுத்துவார்கள். ஓர் இரவில் மக்கள் கூடிவிட்டனர். அப்போது அவர்கள் “மக்களே! உங்களால் (நிரந்தரமாகச் செய்ய) முடிந்த நற்செயல்களையே கடைப்பிடித்து வாருங்கள். ஏனெனில், நீங்கள் சடையாதவரை அல்லாஹ்வும் சடைவதில்லை. நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்” என்று கூறினார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு நற்செயலைச் செய்தால் அதை நிலையாக(த் தொடர்ந்து) செய்வார்கள்.

Book : 6


كَانَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَصِيرٌ، وَكَانَ يُحَجِّرُهُ مِنَ اللَّيْلِ فَيُصَلِّي فِيهِ، فَجَعَلَ النَّاسُ يُصَلُّونَ بِصَلَاتِهِ، وَيَبْسُطُهُ بِالنَّهَارِ، فَثَابُوا ذَاتَ لَيْلَةٍ، فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ عَلَيْكُمْ مِنَ الْأَعْمَالِ مَا تُطِيقُونَ، فَإِنَّ اللهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا، وَإِنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللهِ مَا دُووِمَ عَلَيْهِ، وَإِنْ قَلَّ». وَكَانَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا عَمِلُوا عَمَلًا أَثْبَتُوهُ


Muslim-1432

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1432. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) பாயினால் ஓர் அறையைப் பள்ளிவாசலில் அமைத்துக் கொண்டு, சில இரவுகள் (அதைத் தடுப்பாக வைத்துக்கொண்டு) அதனுள் தொழுதார்கள். அவ்வாறு தொழும்போது மக்களில் சிலர் அவர்களிடம் திரண்டு வந்தனர்…

மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பில் (“கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் எண்ணினேன்” என்பதற்குப் பின்) “இத்தொழுகை உங்கள்மீது கடமையாக்கப்பட்டுவிட்டால் உங்களால் அதை நிறைவேற்ற முடியாது” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

Book : 6


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْرَةً فِي الْمَسْجِدِ مِنْ حَصِيرٍ، فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا لَيَالِيَ، حَتَّى اجْتَمَعَ إِلَيْهِ نَاسٌ، فَذَكَرَ نَحْوَهُ، وَزَادَ فِيهِ: «وَلَوْ كُتِبَ عَلَيْكُمْ مَا قُمْتُمْ بِهِ»


Muslim-1431

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1431. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) பாயினால் ஒரு சிறிய அறையை அமைத்துக்கொண்டு அதில் தொழுவதற்காகப் புறப்பட்டார்கள். அந்த இடத்தைத் தேடி (நபித் தோழர்களில்) சிலரும் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். பிறகு அடுத்த நாள் இரவும் வந்து கூடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் வராமல் தாமதப்படுத்தினார்கள். எனவே, தோழர்கள் தங்களது குரலை உயர்த்தினர். (நபியவர்களுக்கு நினைவூட்ட அவர்களது வீட்டுக்) கதவின் மீது சிறு கற்களை எறிந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்துடன் அவர்களை நோக்கி வெளியே வந்து, “(இத்தொழுகையில் கலந்துகொள்ளும்) உங்களுடைய இச்செயல் தொடர்ந்துகொண்டே போகிறது. (இத்தொழுகை) உங்கள்மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் எண்ணி (அஞ்சி)னேன். (ஆகவே தான் இன்று நான் உங்களிடம் வரவில்லை.) எனவே, உங்கள் இல்லங்களிலேயே (கூடுதலான – நஃபில்) தொழுகையைத் தொழுதுவாருங்கள். கடமையாக்கப்பட்ட தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தமது வீட்டிலேயே நிறைவேற்றுவதுதான் சிறந்ததாகும்”

احْتَجَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُجَيْرَةً بِخَصَفَةٍ، أَوْ حَصِيرٍ، فَخَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِيهَا، قَالَ: فَتَتَبَّعَ إِلَيْهِ رِجَالٌ وَجَاءُوا يُصَلُّونَ بِصَلَاتِهِ، قَالَ: ثُمَّ جَاءُوا لَيْلَةً فَحَضَرُوا، وَأَبْطَأَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُمْ، قَالَ: فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ، فَرَفَعُوا أَصْوَاتَهُمْ وَحَصَبُوا الْبَابَ، فَخَرَجَ إِلَيْهِمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُغْضَبًا، فَقَالَ لَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا زَالَ بِكُمْ صَنِيعُكُمْ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُكْتَبُ عَلَيْكُمْ، فَعَلَيْكُمْ بِالصَّلَاةِ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ خَيْرَ صَلَاةِ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلَّا الصَّلَاةَ الْمَكْتُوبَةَ».


Muslim-1430

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1430. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

“அல்பகரா” எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 6


«لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ»


Muslim-1429

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1429. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 6


«مَثَلُ الْبَيْتِ الَّذِي يُذْكَرُ اللهُ فِيهِ، وَالْبَيْتِ الَّذِي لَا يُذْكَرُ اللهُ فِيهِ، مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ»


Muslim-1428

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1428. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் (ஃபர்ள்) தொழுது முடித்ததும் தமது தொழுகையில் சிலவற்றை (கூடுதல் தொழுகையை) தமது வீட்டிலும் தொழட்டும். ஏனெனில், அவ்வாறு அவர் தொழுவதால் அவரது வீட்டில் அல்லாஹ் நன்மையை உருவாக்குகிறான்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 6


«إِذَا قَضَى أَحَدُكُمُ الصَّلَاةَ فِي مَسْجِدِهِ، فَلْيَجْعَلْ لِبَيْتِهِ نَصِيبًا مِنْ صَلَاتِهِ، فَإِنَّ اللهَ جَاعِلٌ فِي بَيْتِهِ مِنْ صَلَاتِهِ خَيْرًا»


Muslim-1427

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1427. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய இல்லங்களிலும் (கூடுதலான தொழுகைகளை) தொழுங்கள். இல்லங்களை சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6


«صَلُّوا فِي بُيُوتِكُمْ، وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»


Muslim-1426

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 29

கூடுதலான (நஃபில்) தொழுகைகளைப் பள்ளிவாசலில் தொழலாம்; ஆனால், வீட்டில் தொழுவதே உசிதமானது.

1426. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய இல்லங்களிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 6


«اجْعَلُوا مِنْ صَلَاتِكُمْ فِي بُيُوتِكُمْ، وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»


Muslim-1425

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1425. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது அவரது தலையின் பின் பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், “இன்னும் உனக்கு நீண்ட இரவு இருக்கிறது (நன்றாக உறங்கு)” என்று கூறி ஊதுகிறான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் அங்கத்தூய்மை (உளூ) செய்தால் இரண்டாவது முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்துவிடுகின்றன. அவர் சுறுசுறுப்புடனும் நல்ல மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 6


«يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ ثَلَاثَ عُقَدٍ إِذَا نَامَ، بِكُلِّ عُقْدَةٍ يَضْرِبُ عَلَيْكَ لَيْلًا طَوِيلًا، فَإِذَا اسْتَيْقَظَ فَذَكَرَ اللهَ انْحَلَّتْ عُقْدَةٌ، وَإِذَا تَوَضَّأَ انْحَلَّتْ عَنْهُ عُقْدَتَانِ، فَإِذَا صَلَّى انْحَلَّتِ الْعُقَدُ، فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ، وَإِلَّا أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلَانَ»


Muslim-1424

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1424. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடமும் ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் இரவு நேரத்தில் வந்து, “நீங்கள் இருவரும் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களது உயிர் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நினைத்தால் எங்களை அவன் எழுப்பிவிடுவான்” என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல்) திரும்பிச் சென்றார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது தமது தொடையில் அடித்துக்கொண்டே (நான் உடனடியாக பதில் சொன்னதை எண்ணி) “மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்” (எனும் 18:54ஆவது வசனத்தைக்) கூறியபடியே சென்றார்கள்.

Book : 6


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَقَهُ وَفَاطِمَةَ، فَقَالَ: «أَلَا تُصَلُّونَ؟» فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ ‍ إِنَّمَا أَنْفُسُنَا بِيَدِ اللهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قُلْتُ لَهُ ذَلِكَ، ثُمَّ سَمِعْتُهُ وَهُوَ مُدْبِرٌ، يَضْرِبُ فَخِذَهُ، وَيَقُولُ {وَكَانَ الْإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا} [الكهف: 54]


Next Page » « Previous Page